2012-10-09 16:42:14

அக்டோபர் 11ம் தேதி விசுவாச ஆண்டு ஆரம்பம்


அக்.09,2012. இக்காலத்தில் கிறிஸ்தவ விசுவாசத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்குப் பதில் சொல்லும் விதமாக, அக்டோபர் 11ம் தேதி வருகிற வியாழனன்று தொடங்கவிருக்கும் விசுவாச ஆண்டு அமையும் என்று புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Rino Fisichella அறிவித்தார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டின் நிறைவையொட்டித் திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டுள்ள விசுவாச ஆண்டின் கொண்டாட்டங்கள் குறித்து இச்செவ்வாயன்று நிருபர் கூட்டத்தில் பேசிய பேராயர் Fisichella, இந்த விசுவாச ஆண்டை திருத்தந்தை 16ம் பெனடிக்ட், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருப்பலி நிகழ்த்தி தொடங்கி வைக்கிறார் என்றார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் பெரும்பங்காற்றிய தந்தையர்களுள் இன்னும் வாழும் தந்தையரும், உலகின் ஆயர்கள் பேரவைகளின் தலைவர்களும், தற்போது வத்திக்கானில் இடம்பெற்றுவரும் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் தந்தையரும் இத்திருப்பலிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் பேராயர் Fisichella அறிவித்தார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் பெரும்பங்காற்றிய தந்தையர்களுள் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் 70 தந்தையருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் உரைத்த பேராயர் Fisichella, விசுவாசம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் என்பதை மக்களுக்கு நினைவுபடுத்தவும் இந்த விசுவாச ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது என்று விளக்கினார்.







All the contents on this site are copyrighted ©.