2012-10-08 16:49:16

வாரம் ஓர் அலசல் – 13வது உலக ஆயர்கள் மாமன்றம்


அக்.08,2012. அன்பர்களே, அக்டோபர் 08, இத்திங்களன்று வத்திக்கான் ஆயர்கள் மாமன்ற அறையில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் தலைமையில் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் அமர்வு திருப்புகழ்மாலை செபத்துடன் தொடங்கியது. இச்செபத்தில் தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை, நற்செய்தியை அறிவிப்பதற்கு கடவுளின் அக்கினியை உள்ளத்தில் கொண்டிருந்து அதை உலகில் துணிச்சலுடன் ஏற்றி வைக்க வேண்டும், கடவுள் திருஅவையில் செயலாற்றுகிறார் என்பதை நற்செய்தி அறிவிப்பாளர்கள் தங்கள் இதயத்தில் அறிந்திருக்க வேண்டும், கிறிஸ்துவை உலகுக்கு அறிவிப்பதற்கு, பற்றிஎரியும் ஆவலைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறினார்.
RealAudioMP3 இந்தக் காலை செபத்துக்குப் பின்னர் இம்மாமன்றத் தலைவர் பிரதிநிதி, பொதுச் செயலர் ஆகியோரின் உரைகளும் காலை முதல் பொது அமர்வில் இடம்பெற்றன.
இஞ்ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் 262 மாமன்றத் தந்தையர்கள் உட்பட 408 மாமன்றப் பிரதிநிதிகளுடன் சேர்ந்து கூட்டுத்திருப்பலி நிகழ்த்தி இந்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார் திருத்தந்தை. 1965ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்(1962–1965) நிறைவுற்றபோது உலக ஆயர்கள் மாமன்றம் என்ற ஓர் அமைப்பை திருத்தந்தை ஆறாம் பவுல் உருவாக்கினார். உலகின் பல பகுதிகளிலுள்ள ஆயர்கள், தங்களது ஞானம், அனுபவம், ஆலோசனை, அதிகாரம் ஆகியவற்றின் மூலம் உலகளாவியத் திருஅவையின் வளர்ச்சியில் திருத்தந்தைக்கு உதவும் நோக்கத்தில் உலக ஆயர்கள் மாமன்றம் ஏற்படுத்தப்பட்டது. 25க்கு குறைவாக உள்ள ஆயர் பேரவைகளிலிருந்து ஒருவர், 50 பேர் இருக்கும் ஆயர் பேரவைகளிலிருந்து இருவர், 100 பேர் இருக்கும் ஆயர் பேரவைகளிலிருந்து மூவர் என ஆயர் பிரதிநிதிகள் இந்த உலக ஆயர்கள் மாமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இந்த மாமன்றங்கள் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு தலைப்புகளில் வத்திக்கானில் நடத்தப்படுகின்றன. சில சமயங்களில் இடங்களின் தனிப்பட்ட தேவைகளுக்காகச் சிறப்பு ஆயர்கள் மாமன்றங்களும் நடத்தப்படுகின்றன. ஆசியா, நெதர்லாண்ட்ஸ், ஓசியானியா, மத்திய கிழக்குப் பகுதி, லெபனன் ஆகிய பகுதிகளுக்கென முறையே ஒன்றும், ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கென இரண்டும் நடத்தப்பட்டுள்ளன. திருஅவையின் அவசரத் தேவைகளையொட்டி 1969 மற்றும் 1985ம் ஆண்டுகளில் இரண்டு அசாதாரணப் பொது மாமன்றங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், கத்தோலிக்க விசுவாசத்தைப் பாதுகாத்து உறுதிப்படுத்துதல் எனும் தலைப்பில் 1967ம் ஆண்டு முதல் பொது உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெற்றது. அதன்பின்னர் 1971,1974,1977,1980,1983,1987,1990,1994,2001, 2005, 2008 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு தலைப்புக்களில் பொது உலக ஆயர்கள் மாமன்றங்கள் நடத்தப்பட்டுள்ளன. கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்புவதற்கு நற்செய்திப்பணியைப் புதிய வழிகளில் செய்வது குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றம் இந்த 2012ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ளது. இந்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தைத் தொடங்கி வைத்த திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, இது இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது என்று அறிவித்தார்.
RealAudioMP3 ல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு எப்போதும் தொடக்கமும் முடிவுமாக இருப்பவர் இறைமகன் இயேசு கிறிஸ்து, நற்செய்தி அறிவிப்பவர்க்கு இயேசுவின் திருச்சிலுவையே மிக உன்னத அடையாளமாக இருக்கின்றது, இது, அன்பு மற்றும் அமைதியின் அடையாளம், மனமாற்றத்துக்கும் ஒப்புரவுக்கும் அழைப்பு விடுக்கின்றது, நற்செய்தி அறிவிப்புப்பணிக்குக் கருவிகளாக இருப்பவர்கள் புனிதர்கள் என்பது குறித்து மறையுரையில் விளக்கினார் திருத்தந்தை. இறைவார்த்தை, சிலுவையில் அறையப்பட்டு மகிமையுடன் விளங்கும் இயேசுவை நம்முன் நிறுத்துகின்றது. இதன்மூலம் நமது வாழ்வு முழுவதிலும், சிறப்பாக, இந்த மாமன்ற அமர்வுகளில் நமது அர்ப்பணம், அவரது திருமுன்னிலையிலும் அவரது பேருண்மையின் ஒளியிலும் இடம்பெறும். என் அன்புச் சகோதர ஆயர்களே, நாம் நமது பார்வையை இயேசுமீது வைப்போம். நாம் அவரது திருவருளால் தூய்மைப்படுத்தப்படுவோம் என்று கூறிய திருத்தந்தை, புதிய நற்செய்திப்பணியின் பொருள் என்ன என்பது பற்றியும் விளக்கினார்.
RealAudioMP3 நற்செய்திப்பணி, முதலும் முக்கியமுமான, தொடர்ந்த மற்றும் நிலைத்த கிறிஸ்தவ மறைப்பணியாகும். நற்செய்தி அறிவிப்புப்பணிக்காகவே திருஅவை இந்த உலகில் இருக்கின்றது, ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் காலம் காலமாக அறிவிக்கப்பட்ட நற்செய்திப்பணியை இப்போது நாம் நினைவுபடுத்திப் பார்க்கும்போது இந்த நம் காலங்களிலும் திருஅவையில் நற்செய்தியை அறிவிப்பதற்குப் புதிய முயற்சி எடுப்பதற்குத் தூய ஆவி துணை நிற்கிறார். இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் இதன் மேய்ப்புப்பணி மற்றும் ஆன்மீகக் கூறுகள் கொடுக்கப்பட்டுள்ளன. விசுவாச ஆண்டு தொடங்குவதற்குச் சில நாள்களுக்கு முன்னர் இந்த ஆயர்கள் மாமன்றம் ஆரம்பிக்கிறது. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டு மற்றும் கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி ஏடு வெளியிடப்பட்டதன் 20ம் ஆண்டின் நிறைவாக இந்த அக்டோபர் 11ம் தேதி விசுவாச ஆண்டு தொடங்குகிறது. இப்போது தொடங்கியுள்ள ஆயர்கள் மாமன்றம் நம் ஆண்டவர் இயேசுவை நாம் சந்திப்பதற்கும், தனிப்பட்ட, குடும்ப மற்றும் சமூக வாழ்வுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வழங்கும் அருளின் ஊற்றாகிய விசுவாசத்தை மீண்டும் கண்டுணரவும் மக்களுக்கு உதவும் என்றும் திருத்தந்தை கூறினார்.
திருஅவையில் புதிய காற்று உள்ளே வரட்டும், சன்னல்களைத் திறந்து விடுங்கள் என்ற அருளாளர் திருத்தந்தை 23ம் அருளப்பரின் அழைப்பின்பேரில் 1962ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி தொடங்கிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தினால் விளைந்த கனிகள் பற்றிப் பகிர்ந்து கொள்கிறார் அருள்பணி ஜெரோசின், தூத்துக்குடி மறைமாவட்டம்.
RealAudioMP3 அன்பர்களே, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டின் நிறைவாக, இத்திங்கள் முதல் மூன்று வாரங்களுக்கு இடம்பெறும் இந்த 13வது உலக ஆயர்கள் மாமன்றம் நல்ல பலன்களைத் தருமாறு செபிப்போம்.








All the contents on this site are copyrighted ©.