2012-10-06 15:35:38

திருத்தந்தையின் பணியாள் பவுலோ கபிரியேலேவுக்கு 18 மாதச் சிறைத் தண்டனை


அக்.06,2012. திருத்தந்தையின் அறையிலிருந்து அவரது கடிதங்களையும் மற்றும்பிற இரகசிய ஆவணங்களையும் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, திருத்தந்தையின் அறையைப் பராமரித்துவந்த பணியாள் பவுலோ கபிரியேலேவுக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணைகளுக்கான செலவையும் அவர் வழங்குமாறு இச்சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கபிரியேலேவுக்கு மூன்றாண்டுகள் தண்டனை வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டிருந்தாலும், இவர் இதற்கு முன்னர் எந்தக் குற்றத்தையும் தவறான செயல்களையும் செய்ததாகப் புகார்கள் இல்லாததால் தற்போது ஓராண்டும் 6 மாதங்களும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார் என நிருபர் கூட்டத்தில் கூறினார் திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை லொம்பார்தி.
வத்திக்கான் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணை முழுவதும் தனித்தும் வேகமாகவும் நடத்தியிருப்பதைப் பாராட்டிப் பேசிய அருள்தந்தை லொம்பார்தி, இது கருணையும் நீதியும் நிறைந்த தீர்ப்பு என்று கூறினார்.
பவுலோ கபிரியேலேவுக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மன்னிப்பு வழங்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார் அருள்தந்தை லொம்பார்தி.







All the contents on this site are copyrighted ©.