2012-10-05 15:35:34

13வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் 262 மாமன்றத் தந்தையர்கள்


அக்.05,2012 வருகிற ஞாயிறன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நிகழ்த்தும் திருப்பலியோடு ஆரம்பமாகும் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் 262 மாமன்றத் தந்தையர்கள் பங்கு கொள்வார்கள் என்று இவ்வெள்ளியன்று நிருபர் கூட்டத்தில் அறிவித்தார் இம்மான்றப் பொதுச் செயலர் பேராயர் நிக்கோலா எத்ரோவிச்.
உலக ஆயர்கள் மாமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இம்முறை அதிகமான தந்தையர்கள் பங்கு கொள்வார்கள் என்றுரைத்த பேராயர் எத்ரோவிச், 103 பேர் ஐரோப்பாவிலிருந்தும், 63 பேர் அமெரிக்காவிலிருந்தும், 50 பேர் ஆப்ரிக்காவிலிருந்தும், 39 பேர் ஆசியாவிலிருந்தும் 7 பேர் ஓசியானியாவிலிருந்தும் எனப் பேரவைத் தந்தையர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறினார்.
இந்த மாமன்றத் தந்தையர்களுள் 182 பேர், 172 ஆயர் பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும், 10 பேர் துறவு சபைகளின் அதிபர்கள் என்றும், 3 பேர் கீழைரீதி கத்தோலிக்கச் சபைகளின் தலைவர்கள் என்றும், 37 பேர் தங்களது பணியினிமித்தம் பிரதிநிதிகளாக உள்ளவர்கள் என்றும், 40 பேர் திருத்தந்தையால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும் பேராயர் தெரிவித்தார்.
45 வல்லுனர்கள் மற்றும் 49 பார்வையாளர்கள் கலந்து கொள்ளவுள்ள இம்மான்றத்தில், கத்தோலிக்கத் திருஅவையோடு ஒன்றிப்பு இல்லாத 15 சபைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் டெலஸ்போர் டோப்போ, சென்னை-மயிலைப் பேராயர் மலையப்பன் சின்னப்பா, கோவா பேராயர் பிலிப்நேரி ஃபெராவோ கொல்லம் ஆயர் ஸ்டான்லி ரோமன், இலங்கையின் பதுல்லா ஆயர் ஜூலியன் வின்ஸ்டென் செபஸ்தியான் பெர்னான்டோ உட்பட 5 கண்டங்களிலிருந்து ஆயர் பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்வார்கள்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் பங்கு கொண்டவர்களில் இன்னும் உயிரோடிருக்கும் 69 தந்தையரில் 12 பேர் இப்போதைய மாமன்றத்தில் கலந்து கொள்வார்கள் எனவும் பேராயர் கூறினார்.
கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்புவதற்கான புதிய நற்செய்திப்பணி என்ற தலைப்பில் இம்மாதம் 7 முதல் 28 வரை வத்திக்கானில் 13வது உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறவுள்ளது. இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தில், மக்களின் விசுவாசத்தை, குறிப்பாக விசுவாசம் பலவீனமடைந்துள்ள அல்லது விசுவாசம் இல்லாமல் இருக்கின்ற பகுதிகளில் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்குப் புதிய வழிகள் மற்றும் புதிய முறைகளைக் காண்பது குறித்து மாமன்றத் தந்தையர்கள் கலந்து பேசுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.