2012-10-04 16:24:00

லொரேத்தோவில் திருத்தந்தை : நாம் கடவுளிடம் திரும்பிவர வேண்டும்


அக்.04,2012. 1962ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதியன்று அருளாளர் திருத்தந்தை 23ம் அருளப்பர் இந்த லொரேத்தோ திருத்தலத்துக்கு வந்த போது இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் கலந்து கொள்ளவிருந்த அனைவருக்காகவும் அன்னைமரியாவிடம் செபித்தார். கிறிஸ்துவின்மீதும் ஆன்மாக்களின் மீதும் கொண்டிருந்த அன்புத்துடிப்புடன் ஒரே இதயம் கொண்டவர்களாய் திருத்தூதர்களும் இயேசுவின் முதல் சீடர்களும் எருசலேம் மாடியறையில் நுழைந்தது போன்று புனித பேதுரு பசிலிக்கா மாமன்ற அறையில் நுழையும் 2ம் வத்திக்கான் பொதுச்சங்கத் தந்தையர்களுக்கு அருளைப் பொழியுமாறு அன்னையிடம் வேண்டினார். இது நடந்து ஐம்பது ஆண்டுகள் கழித்து, திருஅவை இரண்டு முக்கிய நிகழ்வுகளை அன்னையிடம் அர்ப்பணிப்பதற்காக இங்கு வந்துள்ளேன். இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டு நிறைவாக இந்த அக்டோபர் 11ம் தேதி தொடங்கும் விசுவாச ஆண்டையும், கிறிஸ்தவ விசுவாசத்தை பரப்புவதற்கான புதிய நற்செய்திப் பணி என்ற தலைப்பில் தொடங்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தையும் அன்னையிடம் அர்ப்பணிக்கின்றேன். விசுவசித்ததால் பேறுபெற்றவர் என அழைக்கப்பட்ட மரியாவின் பள்ளியில் பயிலும் வாய்ப்பை இந்த லொரேத்தோவில் பெறுகிறோம். அன்னையின் இவ்வுலக வீட்டைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள இந்த பசிலிக்கா, இயேசுவின் பிறப்பு அவருக்கு அறிவிக்கப்பட்ட தருணத்தின் நினைவுகளைக் கொண்டிருக்கின்றது. இறைவன் மனிதஉரு எடுத்தது மற்றும் அவரது மீட்பின் நல்தாக்கங்களை பரந்துபட்ட அளவில் பறைசாற்றும் நோக்கத்தை இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கொண்டுள்ளது என்பதை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த லொரேத்தோவில் அருளாளர் திருத்தந்தை 23ம் அருளப்பர் உறுதிப்படுத்தினார். விண்ணகமும் மண்ணகமும் ஒன்றிணைந்த இறைவனின் மனிதஉருப் பேருண்மையைச் சிந்திக்க அழைத்தார். இந்த அழைப்பானது இக்காலத்துக்குச் சிறப்பான விதத்தில் ஒலிக்கின்றது. இக்காலத்திய நெருக்கடி, பொருளாதாரத்தை மட்டுமல்ல, சமுதாயத்தின் பல துறைகளையும் பாதித்துள்ளது. மனிதர் கடவுளுக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதையும், மனிதர்க்குக் கடவுள் எவ்வளவு முக்கியமானவர் என்பதையும் இறைமகனின் மனித அவதாரம் நம்மிடம் பேசுகின்றது. கடவுள் இல்லாத வாழ்க்கையில் மனிதர், ஒருமைப்பாட்டையும் அன்பையும்விட தன்னலத்தையும், விழுமியங்களைவிட பொருட்களையும் தேர்ந்தெடுக்கின்றனர். நாம் கடவுளிடம் திரும்பிவர வேண்டும். அப்போது மனிதர், மனிதராக இருக்கும் நிலைக்குத் திரும்புவார்கள். கடவுளோடு வாழும்பொழுது, கஷ்டமான மற்றும் நெருக்கடியான நேரங்களிலும் எப்போதும் நம்பிக்கையின் விளிம்பு தெரியும். நாம் ஒருபோதும் தனியாக இல்லை. கடவுள் மனித சமுதாயத்திடம் வந்து அவர்களோடு உடனிருக்கிறார் என்பதை கிறிஸ்துவின் மனித அவதாரம் நம்மிடம் கூறுகிறது.
இவ்வாறு மறையுரையாற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இறைமகன் உயிருள்ள வீடான மரியாவில் வாழ்ந்தது மற்றுமொரு சிந்தனையை நம்க்குத் தெரிவிக்கின்றது என்று சொல்லி அதனையும் விளக்கினார். கடவுள் வாழுமிடத்தை எல்லாரும் வீடுபோல் உணருவோம். கிறிஸ்து எங்கெங்கு வாழ்கிறாரோ, அங்கெல்லாம் அவருடைய சகோதர சகோதரிகள் அந்நியர்களாக இருக்கமாட்டார்கள். கிறிஸ்துவின் தாயான மரியா நமக்கும் தாய். அத்தாய் தமது வீட்டை நமக்குத் திறந்து வைக்கிறார். அத்தாய் தமது திருமகனின் விருப்பத்தில் நாம் நுழைவதற்கு உதவுகிறார். எனவே விசுவாசமே இவ்வுலகில் ஒரு வீட்டை நமக்கு அளிக்கிறது. விசுவாசமே, நாம் அனைவரும் சகோதர சகோதரிகளாக ஒரே குடும்பத்தில் நம்மை ஒன்று சேர்க்கின்றது. எனவே மரியா பற்றி நாம் தியானிக்கும்போது, ஆண்டவருக்கு நம்மைத் திறந்தவர்களாக, நமது வாழ்வை அவர் வாழும் இடமாக வழங்குவதற்கு விரும்புகிறோமா? அல்லது கடவுளின் பிரசன்னம் நமது சுதந்திரத்தை ஏதாவது ஒருவகையில் கட்டுப்படுத்தும் எனப் பயப்படுகிறோமா?, நமது வாழ்வின் ஒரு பகுதியை நமக்கென வைத்துக் கொள்கிறோமா? என நம்மையே நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். அதிகாரம், ஆதிக்கம், தன்வயப்படுத்தும் ஆசை ஆகியவை மீதான தாகத்திலிருந்தும், ஒருவர் தனக்குள்ளே முடங்கி கிடப்பதிலிருந்தும் உண்மையிலேயே விடுதலை அளிக்கிறவர் கடவுளே. தன்னையே வழங்குவதற்கும் அன்பு வாழ்வுக்கும் நம்மை நிறைப்பவர் கடவுள். இதன்மூலம் அவர் நம்மை பகிர்வுக்கும் சேவைமனப்பான்மைக்கும் மாற்றுகிறார். எனவே விசுவாசம் நம்மில் குடிகொள்ளட்டும். லொரேத்தோ புனிதவீடு இந்தக் கூற்றில் ஒரு முக்கியமான போதனையையக் கொண்டுள்ளது.
மேலும், இறைவார்த்தை மனுஉரு எடுப்பதற்கு மரியாவிடம் அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சியில் மற்றுமொரு முக்கியமான பாடத்தைக் கற்றுக் கொள்கிறோம். மனித சமுதாயத்தின் ஆகட்டும் என்ற சொல்லைக் கடவுள் கேட்கிறார். இதனை நாம் முழு சுதந்திரத்துடன் சொல்வதற்கு நம்மைக் கேட்கிறார். இறையருள் நமது சுதந்திரத்தை அகற்றிவிடாது. மாறாக அது நம்மைப் படைத்து பாதுகாக்கிறது.
இவ்வாறு மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.