2012-10-04 16:21:58

திருத்தந்தையின் லொரேத்தோ திருப்பயணம்


அக்.04,2012. இந்தியாவுக்கு, ஏன் ஆசிய நாடுகளுக்கு ஒரு வேளாங்கண்ணி போன்று, இத்தாலிக்கு ஒரு லொரேத்தோ என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். வேளாங்கண்ணியில் கோவில் கொண்டிருக்கும் கடலலைத் தாலாட்டும் ஆரோக்ய அன்னை திருத்தலத்துக்கு இனம், மதம், மொழி, நாடு என்ற பாகுபாடின்றி ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது போன்று, இத்தாலியில் குடிகொண்டிருக்கும் லொரேத்தோ அன்னைமரித் திருத்தலத்துக்கும் இனம், மதம், மொழி, நாடு என்ற பாகுபாடின்றி ஆண்டுதோறும் பக்தர்கள் செல்கின்றனர். ஆண்டுதோறும் ஏறக்குறைய நாற்பது இலட்சம் திருப்பயணிகள் லொரேத்தோ அன்னைமரித் திருத்தலம் செல்கின்றனர் என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. தாயை நாடி பிள்ளைகள் செல்வது இயல்பு. இயேசுவின் தாயாம் அன்னைமரியா பல்வேறு பெயர்களில் உலகெங்கும் போற்றப்பட்டு வருகிறார். தன்னை அண்டிவரும் கோடிக்கணக்கான பிள்ளைகளுக்கு அற்புதங்களையும் ஆற்றி வருகிறார். லொரேத்தோ அன்னைமரித் திருத்தலத்துக்கு ஒரு முக்கிய சிறப்பு உள்ளதாகப் பாரம்பரியமாகச் சொல்லப்பட்டு வருகிறது.
இத்தாலியின் மத்திய பகுதியிலுள்ள மார்க்கே மாநிலத்தில் முசோனே ஆற்றின் வலது கரையில் அட்ரியாடிக் கடலுக்கு ஏறத்தாழ மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சிறிய நகரம் லொரேத்தோ. 11 ஆயிரம் மக்கள் வாழும் இந்நகரம் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குவதற்கு ஒரே காரணம் அங்குள்ள அன்னைமரியாத் திருத்தலம். அதிலும், இத்திருத்தலத்துக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு சிற்றாலயம்தான் இப்புகழுக்குக் காரணம். இதை ஆலயம் என்று சொல்வதைவிட வீடு என்று சொல்ல வேண்டும். ஏனெனில் எருசலேமுக்கு அருகிலுள்ள நாசரேத் என்ற சிறிய நகரத்தில் இயேசு, மரியா, வளன் ஆகியோரைக் கொண்ட திருக்குடும்பம் வாழ்ந்த வீடுதான் இந்தச் சிற்றாலயம் என்று நம்பப்படுகின்றது. இயேசுவின் இவ்வுலக வாழ்வுக்குப் பின்னர் மூன்று நூற்றாண்டுகள் கழித்து புதிதாகக் கிறிஸ்தவத்தைத் தழுவிய கான்ஸ்ட்டைன் பேரரசர், நாசரேத்தில் திருக்குடும்பம் வாழ்ந்த செங்கற்களாலான இந்த எளிமையான வீட்டின் மீது லொரேத்தோ அன்னைமரித் திருத்தலத்தைக் கட்டினார் என்பது வரலாறு.
லொரேத்தோவிலுள்ள இந்த நாசரேத் புனித வீடு குறித்து கத்தோலிக்க மரபில் ஒரு புதுமை சொல்லப்படுகின்றது. இந்த வீடு நாசரேத்தில் சிலுவைப்போர் காலத்தில் அழிக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியது. எனவே 1291ம் ஆண்டில் வானதூதர்கள் இதனை தற்போதைய குரோவேஷிய நாட்டில் புதுமையாகக் கொண்டுவந்து வைத்தனர். ஏனெனில் அச்சமயத்தில் நாசரேத்தில் இவ்வீடு இருந்த இடம் திடீரெனக் காலியாக இருந்தது. அதேசமயம் அவ்வீடு குரோவேஷியாவில் காணப்பட்டது. பின்னர் அல்பேனிய முஸ்லீம்களின் ஆக்ரமிப்பினால் இவ்வீடு மீண்டும் தூதர்களால் 1294ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி இத்தாலியின் Recanti க்கு எடுத்துவரப்பட்டது. பின்னர் சிறிது காலம் கழித்து தற்போது இந்த வீடு அமைந்திருக்கும் லொரேத்தோவுக்கு எடுத்துவரப்பட்டது. இந்தப் புனித வீட்டை பல திருத்தந்தையர்கள், புனிதர்கள் உட்பட சிறிய பெரிய அளவில் பலரும் வணங்கி வருகின்றனர். பல புதுமைகளும் இடம்பெற்று வருகின்றன. இந்த வீடு நாசரேத்தில் காணப்பட்ட வீட்டைப் போன்ற பொருள்களைக் கொண்டிருப்பதாக அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர் என்றும் கூறப்படுகின்றது. இந்தப் புனித வீடு குறித்து மேலும் சில கூற்றுக்களும் சொல்லப்படுகின்றன.
இந்தப் புகழ்பெற்ற லொரேத்தோ அன்னைமரித் திருத்தலத்துக்கு இவ்வியாழனன்று ஒருநாள் திருப்பயணத்தை மேற்கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். 1962ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைத் தொடங்குவதற்கு ஒருவாரத்துக்கு முன்னர், அக்டோபர் 4ம் தேதி அருளாளர் திருத்தந்தை 23ம் அருளப்பர் லொரேத்தோ சென்று அப்பொதுச்சங்கத்தை அன்னைமரியாவிடம் அர்ப்பணித்துச் செபித்தார். இது இடம்பெற்று ஐம்பது ஆண்டுகள் நிறைவுற்றுள்ள இவ்வியாழனன்று இப்புனித பாப்பிறையைப் பின்பற்றி திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அங்குச் சென்று, வருகிற ஞாயிறன்று தொடங்கும் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்துக்காகச் செபித்தார். இவ்வியாழனன்று வத்திக்கானிலிருந்து ஹெலிகாப்டரில் லொரேத்தோ சென்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட், முதலில் லொரேத்தோ பசிலிக்காவுக்குள் இருக்கும் நாசரேத் திருக்குடும்ப வீட்டிலுள்ள கறுப்பு மாதாவிடம் உருக்கமாகச் செபித்தார். அப்பசிலிக்காவில் நடைபெற்ற திருநற்கருணை ஆராதனை திருவழிபாட்டிலும் கலந்து கொண்டார். 40 கப்புச்சின் சபை துறவிகள் மற்றும் பிரான்சிஸ்கன் அமலமரி சகோதரிகள் சபையின் 20 அருள்சகோதரிகள் ஒவ்வொருவரையும் வாழ்த்தினார். ஒரு வயதான துறவி திருத்தந்தையிடம் சென்ற போது, இவர்தான் இங்கிருக்கும் துறவிகளில் வயதானவர் என்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். உடனே திருத்தந்தை, இல்லை இவர் இன்னும் இளைஞராகவே இருக்கிறார் என்று சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார். பசிலிக்காவுக்குள் ஏறக்குறைய ஐந்தாயிரம் விசுவாசிகள் அமர்ந்திருந்தனர். இவர்கள் அனைவரையும் வாழ்த்திய பின்னர் அப்பசிலிக்காவின் முன்பக்கம் அமைந்துள்ள வளாகத்தில் திருப்பலியும் நிகழ்த்தினார் திருத்தந்தை.
லொரேத்தோ நகர மேயர் பவ்லோ நிக்கோலெத்தி, லொரேத்தோ பேராயர் ஜொவான்னி தொனுச்சி ஆகியோர் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினர். இந்தத் திருத்தலத்துக்கும் திருஅவைக்கும் இடையே இருக்கும் பிணைப்பு பற்றிக் கூறினார் பேராயர் தொனுச்சி. இத்திருப்பலியில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகள் கலந்து கொண்டனர். மனிதர்களாகிய நாம் கடவுளிடம் திரும்பிவர வேண்டும். அப்போது மனிதர், மனிதராக இருக்கும் நிலைக்குத் திரும்புவார்கள் என்ற அழைப்புடன் இத்திருப்பலியில் மறையுரை ஆற்றினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்திருப்பலியை நிறைவு செய்து மொந்தோசோ அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் மையத்தில் மதிய உணவு அருந்தினார். அம்மையத்தில் மக்களைச் சந்தித்தார். இத்துடன் திருத்தந்தை 16ம் பெனடிக்டின் லொரேத்தோவுக்கான ஒருநாள் திருப்பயணம் நிறைவுக்கு வந்தது. இப்பயணம் இவர் இத்தாலியில் மேற்கொண்ட 30வது திருப்பயணமாகும்.
வருகிற ஞாயிறன்று உலக ஆயர்கள் மாமன்றம் மற்றும் இம்மாதம் 11ம் தேதி தொடங்கும் விசுவாச ஆண்டுக்காக லொரேத்தோ அன்னைமரியாவிடம் நாமும் செபிப்போம். திருத்தந்தை கேட்டுக்கொண்டது போன்று, இறைவனை நம் வாழ்விலிருந்து ஒருபோதும் ஒதுக்கி வாழாதிருப்போம்.







All the contents on this site are copyrighted ©.