2012-10-03 16:03:47

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


அக். 03, 2012. கடந்த இரு நாட்களாக அவ்வப்போது தூறிக்கொண்டிருந்த வானம் இப்புதன் காலை தன் சூரியக்கதிர்களை வீசி மிதமான ஒரு வெப்பத்தை தந்துகொண்டிருக்க, உரோம் நகரின் தூய பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருவழிபாட்டுச் செபம் குறித்த திருஅவையின் இயல்புநிலை குறித்து இன்று நான் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். திருவழிபாடு என்பது தூய ஆவியில் தந்தையாம் இறைவனை நோக்கி இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திய செபத்தில் பங்குபெறுவதாகும். இயேசுவில் ஒன்றிணைந்திருக்கும் அவரின் மறையுடலாம் திருஅவை, தந்தையாம் இறைவனுக்கு தன் வழிபாட்டை வழங்குகிறது. தந்தைக்கான இயேசுவின் செபத்தில் நம்மை நாம் அடையாளம் கண்டுகொள்ளும்போது, வானகத்திலுள்ள தந்தையாம் இறைவனின் குழந்தைகளாக, கிறிஸ்தவர்களாக இருப்பதன் ஆழமான தன்மையை நாம் மீண்டும் கண்டுகொள்கிறோம்.
திருவழிபாடு என்பது இயேசுவை முழுமையாக, முகம் முகமாக எதிர்கொள்வதும், அதாவது, அவரோடும் அவரின் மறையுடலாம் திருஅவையோடும். இவ்வாறு, திருவழிபாடு என்பது இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் கொண்ட, உயிருள்ள அனைத்துலகச் சமூகத்தில் பங்குபெறுவதாகும். திருஅவையில், திருஅவை வழியாக திரு அவையின் வார்த்தைகளை நம்முடையதாக மாற்றி நாம் உரையாடக் கற்றுக்கொள்ளும்போது, இறைப்பிரசன்னத்தை வழமையாக உணர்ந்துகொள்ளும் நிலையாக செபம் மாறுகிறது.
திருவழிபாட்டில் திருஅவை, தன்னிலையில் உன்மைத்தன்மையுடையதாக இருக்கிறது. ஏனெனில், திருவழிபாட்டிலேயே இறைவன் நம்மை நோக்கி வந்து நம் வாழ்வில் நுழைகிறார். திருவழிபாடு என்பது நமக்காக அல்ல, மாறாக இறைவனுக்காக கொண்டாடப்படும் ஒன்று என்பதை மனதில் நிறுத்துவோம். இது அவரின் செயல்பாடு, அவரே அதன் முக்கியக் கருப்பொருள். திருவழிபாட்டில் நம் பங்கு என்னவெனில், கிறிஸ்துவாலும் அவரின் மறையுடலாம் திருஅவையோடும் நாம் வழிநடத்தப்படும்வண்ணம் நம்மையேத் திறந்தவர்களாகச் செயல்படுவதாகும்.
இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அதன் இறுதியில், தான் இவ்வியாழனன்று இத்தாலியின் லொரெத்தோ நகருக்குத் திருப்பயணம் மேற்கொள்ள உள்ளது குறித்து எடுத்துரைத்தார். இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் திறக்கப்படுவதற்கும் ஒரு வாரத்திற்கு முன்னால் மரியன்னை திருத்தலம் இருக்கும் லொரெத்தோவிற்கு அருளாளர் திருத்தந்தை 23ம் அருளப்பர் திருப்பயணம் மேற்கொண்டதன் 50ம் ஆண்டை நினைவுகூறும் விதமாக நாளை அதே இடத்திற்கான என் திருப்பயணத்தை மேற்கொள்கின்றேன். அனைமரியின் பரிந்துரையை நோக்கிய என் செபத்தில் என்னோடு இணைந்திருக்குமாறு உங்களை நான் வேண்டுகிறேன். புதிய நற்செய்தி அறிவித்தல் குறித்த ஆயர் மாமன்றமும், விசுவாச ஆண்டும் துவங்க உள்ளன. நம் காலத்தின் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நற்செய்தியை எடுத்துரைக்கும் திருஅவையின் பணியில் அன்னைமரி உடன்வந்து உதவுவாராக.
இந்தச் செப வேண்டுதலுக்குப் பின், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.