2012-10-03 15:53:25

திருஅவையில் திருப்புமுனைகள் – புனித ஹில்டெகார்டு (Saint Hildegard of Bingen)


அக். 03,2012. "கேள்! ஒரு காலத்தில் ஓர் அரசர் அரியணையின்மீது அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி தந்தங்களினால் அழகு செய்யப்பட்ட அழகான பெரிய வியக்கத்தக்க தூண்கள் இருந்தன. அந்தத் தூண்களில் அரசருக்கு மிகுந்த மரியாதை செலுத்தும் சொற்கள் கொண்ட விளம்பரக் கொடிகள் தொங்கிக் கொண்டிருந்தன. தரையிலிருந்து ஒரு சிறிய இறகு மேலே எழும்பியது. அரசர் அதனைப் பறக்குமாறு ஆணையிட்டார். அது பறந்தது. அது தானாகப் பறக்கவில்லை. அதைக் காற்றுப் பறக்கச் செய்தது. அதேபோல நானும் கடவுளின் மூச்சுக் காற்றில் இறகாக இருக்கிறேன்"
இப்படிச் சொல்லியிருப்பவர் 12ம் நூற்றாண்டு ஜெர்மானிய அருள்சகோதரி Bingenனின் ஹில்டெகார்டு. கத்தோலிக்கத் திருஅவையில் பெண் இறைவாக்கினர் என்று அங்கீகரிக்கப்பட்ட முதல் பெண், திருஅவையில் புனிதர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமலே பல நூற்றாண்டுகளாகப் புனிதராக வணக்கம் செலுத்தப்பட்டு வந்தவர், இறைக்காட்சிகளை மிகுதியாகக் கண்டவர், மத்திய காலங்களின் வரலாற்றில் மிக முக்கியமான மாமனிதர்களில் ஒருவராக்க கருதப்பட்டவர், தனது காலத்தில் மாபெரும் பெண்ணாகத் திகழந்தவர்... இப்படிப்பட்ட பல பெருமைகளுக்கு உரியவர் ஹில்டெகார்டு. இவரது பெயர் திருஅவையின் புனிதர் பட்டியலில் எழுதப்பட்டு இவர் மீதான பக்தியை உலகளாவியத் திருஅவையில் இந்த 2012ம் ஆண்டு மே 10ம் தேதியன்று இணைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். அத்துடன், இந்த அக்டோபர் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று வத்திக்கான் பசிலிக்காவில் தான் நிகழ்த்தும் 13வது உலக ஆயர் மாமன்றத்தின் தொடக்கத் திருப்பலியில் புனித ஹில்டெகார்டை திருஅவையின் மறைவல்லுனர் என அறிவிக்கவிருப்பதாகவும் திருத்தந்தை கூறியிருந்தார். சில அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகளால் திருஅவைக்கு ஏற்பட்ட களங்கம் குறித்து 2010ம் ஆண்டு டிசம்பரில் பேசிய திருத்தந்தை, இந்தத் துர்மாதிரிகையை நாம் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும், இந்நிலை புதுப்பித்தலுக்கும் அழைப்பு விடுக்கின்றது என்று கூறினார். அச்சமயத்தில் புனித ஹில்டெகார்டு கண்ட காட்சிகளில் ஒன்றையும் குறிப்பிட்டார்.
புனித ஹில்டெகார்டின் இறைக்காட்சியில் திருஅவையின் முகம் தூசியால் கறைபடிந்திருந்தது. திருஅவையின் ஆடை அருள்பணியாளர்களின் பாவங்களால் கிழிக்கப்பட்டிருந்தது. அக்காட்சியை அப்புனிதர் பார்த்த மற்றும் அதனை வெளிப்படுத்திய முறையைப் பார்க்கும்போது அது இந்த 2010ம் ஆண்டில் நாம் அனுபவிக்கும் விதம் போன்று உள்ளது எனத் திருத்தந்தை கூறியிருந்தார். திருஅவைக்குள் சீர்திருத்தம் தேவை என்பதை இப்புனிதரது காட்சி விளக்குவதாகவும் திருத்தந்தை அச்சமயத்தில் கூறினார். 1988ம் ஆண்டில் அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால், பெண்களின் மாண்பு குறித்த அப்போஸ்தலிக்கத் திருமடலை எழுதிய போது இப்புனிதர் பற்றிக் குறிப்பிட்டார். இப்புனிதர் வாழ்ந்த காலத்தில் திருஅவையை வழிநடத்திச் சென்ற திருத்தந்தை 3ம் யூஜெனியுஸ், இப்புனிதரது இறைக்காட்சிகளின் உண்மைத்தன்மையை அங்கீகரித்து அவைகள் குறித்துப் பொதுப்படையாகப் போதிக்குமாறு அதிகாரம் அளித்தார். புனித ஹில்டெகார்டும் அப்போதைய பேரரசரைக் கண்டித்துப் பேசினார். திருஅவையில் இடம்பெறும் தீமைகளைக் களைந்து சீர்திருத்தம் கொண்டுவருமாறு திருத்தந்தையையும் ஆயர்களையும் வலியுறுத்தினார். இச்செயல் அக்காலத்தில் ஒரு பெண்ணால் செய்திட முடியாத ஒன்று. இப்புனிதரின் துணிச்சலான நடவடிக்கை குறித்துப் பேசிய மத்திய காலங்களின் வரலாற்றுப் பேராசிரியர் Alessandra Bartholomei Romagnoli, பெண்ணுரிமைக்காக உழைப்பவர்கள் புனித ஹில்டெகார்டை சிறந்த தலைவராக ஏற்றுக் கொள்ளலாம் என்று சொன்னார்.
1098ம் ஆண்டு ஜெர்மனியின் Bermersheimல் உயர்குலத்தில் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த ஹில்டெகார்டு, 8வது வயதில் St. Disibodenberg மலையிலுள்ள பெனடிக்ட் சபை துறவு மடத்துக்குக் கல்வி பயிலச் சென்றார். 18வது வயதில் அக்கன்னியர் மடத்தில் சேர்ந்து துறவு வாழ்வை மேற்கொண்டார். 20 ஆண்டுகள் கழித்து 1136ம் ஆண்டில் துறவு மடத்தின் தலைவியானார். அதற்கு அடுத்த நான்கு ஆண்டுகள் இறைக் காட்சிகளைக் கண்டார். 1140ம் ஆண்டு முதல் 1150ம் ஆண்டுவரை அக்காட்சிகளைப் படங்களோடும் விளக்கங்களோடும் எழுதினார். இதற்கிடையில் இக்காட்சிகள் உண்மையானதா எனக் கண்டறிவதற்கு திருத்தந்தை 3ம் யூஜெனியுஸ் ஒரு விசாரணைக் குழுவை அனுப்பினார். இக்காட்சிகள் உண்மையானவை, நேர்மையானவை என அக்குழு திருத்தந்தைக்கு அறிக்கை சமர்ப்பித்தது. அதேநேரம் St. Disibodenberg துறவு மடத்தில் பலர் சேர்ந்தனர். எனவே அங்கு எல்லாருக்கும் போதுமான அறைகள் இல்லாததால் ஹில்டெகார்டு தனது துறவு இல்லத்தின் சகோதரிகளை Bingenக்கு மாற்றினார். St.Disibodenberg துறவு இல்லத்தில் ஆண்களும் பெண்களும் தனித்தனியாக வாழ்ந்தனர். ஆனால் பெண் துறவிகள் Bingenக்குச் சென்றதால் அந்தத் துறவு இல்லத் தலைவருக்கும் ஹில்டெகார்டுக்கும் இடையே கசப்புணர்வு ஏற்பட்டது. இது மறைவதற்கு நீண்டகாலம் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
ஹில்டெகார்டு, தெற்கு ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பாரிஸ் எனப் பல இடங்களுக்குப் பயணம் செய்து போதித்து வந்தார். இவரது மறையுரைகளைக் கேட்டவர் அனைவரும் அவர் பக்கம் ஈர்க்கப்பட்டனர். எழுத்துவடிவிலும் மறையுரைகளைத் தருமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஹில்டெகார்டு தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் துன்பம் அனுபவித்தார். திருஅவையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த இளம் கிறிஸ்தவர் ஒருவர் இறந்த போது அவருக்கு கிறிஸ்தவ முறைப்படி அடக்கச் சடங்கை நிறைவேற்றினார். இதனால் கடுமையாக எதிர்க்கப்பட்டார். இந்தக் கிறிஸ்தவர் மரணப்படுக்கையில் தனது தவறுகளுக்காக வருந்தி திருவருட்சாதனங்களையும் பெற்றார் என்பது இவர் தரப்பு வாதம். ஆனால் இவரது கன்னியர் இல்லம் விலக்கி வைக்கப்பட்டது. இதனைக் கடுமையாய் எதிர்த்தார் ஹில்டெகார்டு. பின்னர் அது நீக்கப்பட்டது. 1179ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி தனது 81வது வயதில் இறந்தார் புனித ஹில்டெகார்டு.
பேரரசர்கள், திருத்தந்தையர்கள், ஆயர்கள், அருள்சகோதரிகள் மற்றும் உயர்குலப் பிரபுக்களுக்கு எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட கடிதங்கள், ஒரு நாடகம் உட்பட 72 பாடல்கள், ஏழு புத்தகங்கள் உட்பட ஹில்டெகார்டு எழுதியவை இன்றும் உள்ளன. இவர் எழுதிய இசைக் குறிப்புகள் இக்காலத்தில் நாம் வாசிக்கக்கூடிய அளவில் உள்ளன. இப்புனிதரது எழுத்துக்களில் அறிவியல், கலை, மதம் ஆகிய அனைத்தும் இருக்கின்றன. ஒவ்வொரு மனிதரையும் இறைவனின் சாயலாகப் பார்த்த இவர், சமூகநீதிக்காவும், ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காவும் அயராது உழைத்தவர். இப்புனிதர் ஒரு பெண்ணுரிமைவாதி என அக்காலத்தில் முத்திரை குத்தப்பட்டாலும், தான் சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டபோது, செய்யவேண்டிய தேவை ஏற்பட்டபோது அதைச் சொல்லவோ, செய்யவோ தவறியதில்லை. திருத்தந்தையோ பேரரசரோ யாராயினும் கண்டிக்கத்தக்க வகையில் நடந்து கொண்டால் அவர்களைக் கண்டித்தார்.
12ம் நூற்றாண்டில் திருஅவையில் பெரும் மாற்றத்திற்கும் சீர்திருத்தத்திற்கும் வித்திட்ட புனித ஹில்டெகார்டு பெண்ணினத்திற்குப் பெருமை சேர்த்தவர். இவரைத் திருஅவையின் வல்லுனர் என வருகிற ஞாயிறன்று அறிவிப்பார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.