2012-10-03 16:20:21

ஆஸ்திரேலியப் பவழப்பாறைத் தடுப்புக்கு ஆபத்து


அக்.03,2012. ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்பரப்பில் இருக்கும் "பெரும் பவழப்பாறைத் தடுப்பு" என்ற இயற்கையான அமைப்பு இன்னும் 30 ஆண்டுகளில் அழிந்துவிடும் ஆபத்தை எதிர்கொள்வதாக அந்நாட்டு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தப் பவழப்பாறைத் தடுப்பு, 1985ம் ஆண்டிலிருந்து அதன் பவழப்பாறைகளில் பாதியை இழந்துவிட்டது என்று அவ்வாய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த பவழப்பாறைத் தடுப்பு இன்னும் பத்து ஆண்டுகளில் அதன் பவழப்பாறை வளத்தில் கால்பங்குக்கும் குறைவான அளவையே பெற்றிருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
உலகின் மிகப்பெரும் பவழப்பாறைத் தொடரான இந்த அமைப்பிற்கு ஏற்பட்டுவரும் சேதத்தின் வேகம் 2006ம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருவதாகவும் ஆஸ்திரேலிய கடற்கல்விக் கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது.
மிகவும் கடுமையான புயற்காற்றுகள், நட்சத்திர மீன்களின் தாக்குதல்கள் ஆகியவற்றாலேயே பெரும்பாலான சேதம் விளைந்திருப்பதாகக் கூறும் இந்த ஆய்வு, கடல் வெப்பநிலை அதிகரித்திருப்பதும் இந்த பவழப்பாறைகள் அரிக்கப்பட ஒரு காரணமாக இருந்திருப்பதாகக் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.