2012-10-02 14:45:39

விவிலியத் தேடல் - திருப்பாடல் 139, பகுதி 2


அக்.02,2012 RealAudioMP3 . நன்கு படித்து நிறைய மதிப்பெண்கள் எடுத்துவிட்டால் மட்டும் வாழ்வில் வெற்றி பெற்றுவிட முடியுமா? கண்டிப்பாக அதற்கு இணையான அனுபவம் வேண்டுமல்லவா? நாம் பெற்ற அறிவைக்கொண்டு, எல்லாக் கேள்விகளுக்கும் நம்மால் பதில் சொல்ல முடியாது. மாறாக, நம்முடைய அனுபவம்தான் பதில் சொல்லவேண்டும். ‘நெருப்பு சுடும்’ என படித்திருக்கிறோம், பிறர் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் அதைத் தொட்டு அனுபவிக்கும்போதுதான் அதன் கடுமையை உணரமுடிகிறது.
ஐரோப்பிய நாடுகளில் குளிர் அதிகமாக இருக்கும் எனக் கேள்விப்பட்டிருந்தேன், படித்திருந்தேன். குளிர் அதிகமாக இருந்தால் என்ன? பெரிதும் பாதிக்காதே. வெயிலின் கொடுமையைத்தான் மனிதர்கள் தாங்க முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகளில் குளிர் எவ்வளவு கடுமையாக இருக்கும் என்பதை அனுபவித்து உணர்ந்திருக்கிறேன். இப்போது வெயில் கூட பரவாயில்லை, தாங்கிக்கொள்ளலாம். ஆனால், குளிரின் கொடுமையைத் தாங்க முடியாது என்று சொல்லக்கூடிய மனநிலையில் இருக்கிறேன்.
இறைவன் எங்கும் இருக்கிறார் என்பதை நாம் புத்தகங்களில் படிக்கிறோம், பிறர் சொல்லக் கேள்விப்படுகிறோம். ஆனால் இதை நிரூபிக்க முடியுமா? நம் அறிவு ஏற்றுக்கொள்ளுமாறு விளக்கமுடியுமா? முடியாது. ‘இறைவன் எங்கும் உளார்’ என்பதை அனுபவம்தான் நமக்குச் சொல்லித்தரமுடியும். அன்பார்ந்தவர்களே! இன்றும் நாம் சிந்திப்பது திருப்பாடல் 139. கடந்தவாரம் இறைவன் எல்லாம் தெரிந்தவர் என்று சிந்தித்தோம். இன்று ‘இறைவன் எங்கும் உளார்’ என்பதைப்பற்றிச் சிந்திப்போம். இன்றைய சிந்தனைக்கு இப்பாடலின் 7 முதல் 12 முடிய உள்ள சொற்றொடர்களை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

உமது ஆற்றலைவிட்டு நான் எங்கே செல்லக்கூடும்? உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்?
நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர்! பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்!
நான் கதிரவனின் இடத்திற்கும் பறந்து சென்றாலும் மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும்,
அங்கேயும் உமது கை என்னை நடத்திச் செல்லும்; உமது வலக்கை என்னைப் பற்றிக் கொள்ளும்.
'உண்மையில் இருள் என்னை மூடிக்கொள்ளாதோ? ஒளி சூழ்வதென இரவும் என்னைச் சூழ்ந்து கொள்ளாதோ?' என்று நான் சொன்னாலும்,
இருள்கூட உமக்கு இருட்டாய் இல்லை; இரவும் பகலைப்போல ஒளியாய் இருக்கின்றது; இருளும் உமக்கு ஒளிபோல் இருக்கும்.

இப்பாடலை தாவீது மன்னன் தன் சொந்த அனுபவத்திலிருந்து எழுதியிருக்கிறார் என்பது வெள்ளிடைமலை. கதிரவனுக்கு அப்பால் சென்றாலும் இறைவனின் கரம் இருக்கும், அவரது வல்லமை நம்மைக் காக்கும் என்பதையும், நாம் செய்த தவறை மறைக்க நாம் எங்கும் ஓடி ஒளிய முடியாது, ஏனெனில், ‘இறைவன் எங்கும் உளார்’ என்பதையும் தன் அனுபவத்திலிருந்து உணர்ந்திருந்தார். அதைத்தான், திருப்பாடல் 139ன் இப்பகுதியில் சொல்லியிருக்கிறார். தாவீதின் அனுபவத்தை அறிந்துகொள்ள சாமுவேல் முதல் நூல் 18-20 முடிய உள்ள பிரிவுகள் நமக்கு உதவுகின்றன. இப்பகுதியில நாம் படிப்பது என்ன?
தாவீது சாதாரண கவண்கல்லைக்கொண்டு கோலியாத்தைக் கொன்றார். எனவே மக்கள் மத்தியில் பேரும் புகழும் பெற்றார். பெலிஸ்தியரைக் கொன்ற தாவீது, வீடு திரும்பிய போது, சவுல் 1000 பேரைக் கொன்றார். ஆனால், தாவீதோ 16000 பேரைக் கொன்றார் என பெண்கள் ஆடிப்பாடி வரவேற்றனர். இதைக்கேள்வியுற்ற சவுல் அரசன் தாவீதின் மீது பொறாமை கொண்டார். இது பொறாமையாக மட்டும் நிற்கவில்லை. மாறாக, கொலைமுயற்சியாகவும் வளர்ந்தது. தன் ஈட்டியை தாவீதை நோக்கி வீசினார். ஆனால், தாவீது சாதுர்யமாக விலகிக் கொண்டார். ஈட்டி பாய்ச்சலில் தப்பிய தாவீதுக்கு, தன் மூத்தமகள் மோராபுவை மணமுடித்து தருவதாகவும், அதற்கு தாவீது 100 பெலிஸ்தியர்களைக் கொன்று, தான் வீரர் என நிரூபிக்க வேண்டுமெனவும் நிபந்தனை விதித்தார். உண்மையில் பெலிஸ்தியரோடு போரிடும்போது பெலிஸ்தியர்கள் தாவீதைக் கொன்றுவிடுவர் என நினைத்தார். ஆனால் தாவீதோ 100 அல்ல 200 பெலிஸ்தியர்களை கொன்றார். எனவே இரண்டாவது முறையும் சவுலின் முயற்சி தோல்வியுற்றது. இதன் பிறகு தன் மகன் யோனத்தானிடம் தாவீதைக் கொலை செய்யும் தன் விருப்பத்தைச் சொன்னார். ஆனால், யோனத்தானோ தாவீதை தன் சகோதரராகக் கருதினார். எனவே, தாவீதிடம் தப்பியோடி தலைமறைவாக இருக்குமாறு பணித்தார். இவ்வாறு இந்த முறையும் தாவீது தப்பித்துக் கொண்டார். இதன் பிறகும் தாவீதை ஓர் நாள் மீண்டுமாக ஈட்டி கொண்டு தாக்கினார் சவுல் அரசர். அதிலிருந்தும் தாவீது தப்பினார். இதன்பிறகு தாவீதை அவரது வீட்டிலேயே கொல்ல முடிவுசெய்து சவுல் காவலர்களை அனுப்பினார். ஆனால், தாவீதின் மனைவி மீகால் இதை அறிந்து வீட்டின் பின்புறம் வழியாக தப்பவைத்தார். இவ்வாறு பலமுறை தாவீதை இறைவன் தன் கைவன்மையால் காப்பாற்றினார். அதன்பிறகு, அதுல்லாம் குகையில் மறைந்திருந்தபோதும், மன்னன் ஆக்கேசு முன்னிலையிருந்தபோதும், சவுல் அரசனுக்குப் பயந்து குகையில் ஒளிந்திருந்தபோதும் தாவீதை இறைவன் சவுல் கையில் ஒப்புவித்திருக்கலாம். ஆனால் இறைவன் அவ்வாறு செய்யவில்லை. எனவே, எல்லாச் சூழல்களிலும் இறைவன் தன்னோடு இருந்தார் என்பதைத் தாவீது நன்கு உணர்ந்திருந்தார். எனவேதான் எங்கு சென்றாலும் இறைவன் இருக்கிறார், அவரது கைவன்மை என்னைக் காக்கும் என்று எழுதுகிறார்.

ஏறக்குறைய 2000, 3000 ஆண்டுகளுக்குப் பின் இவ்வரிகளைப் படிக்கும் நமக்கே ஆகா, என்னே இறைவன்! எப்படியெல்லாம் தாவீதைக் காப்பாற்றியிருக்கிறார். அதுவும் எத்தனை முறைகள் காப்பாற்றியிருக்கிறார் என்று சொல்லத்தோன்றுகிறதல்லவா? ஒவ்வொரு முறையும் உயிர் பிரிந்து விடுமோ, கொல்லப்படுவோமோ? என சாவின் விளிம்பிற்குச் சென்று திரும்பிய தாவீது எவ்வளவு ஆழமாக இறைவனின் பாதுகாப்பை உணர்ந்திருக்கவேண்டும்! இறைவனின் கரம் தன்னைக் காப்பாற்றியது என்பதை அவர் முழுவதும் நம்பியதன் வெளிப்பாடுதான் இத்திருப்பாடல் என்று சொன்னாலும் மிகையாகாது.

இவ்வாறு எங்கு சென்றாலும் இறைவன் இருக்கிறார் என்று உணர்ந்த தாவீது, தவறு செய்துவிட்டு எங்கும் ஓடி ஒளியமுடியாது என்பதையும் நன்கு உணர்ந்திருந்தார். உரியாவின் மனைவி பெத்சபாவை அநீதியான வழியில் அடைந்தார். இதை மறைப்பதற்காக பெத்சபாவின் கணவன் உரியாவை போர்முனைக்கு அனுப்பி, அவரது உயிரைப் பறித்தார். யாரும் பார்க்கவில்லை என்று தாவீது நினைத்தாலும், நீக்கமற எங்கும் நிறைந்திருந்து தன்னைக் காத்த இறைவனுக்கு இது தெரியாமல் இருக்குமா என உணர்ந்து, தான் செய்த பாவத்திற்காக மனம் வருந்தினார் என்று திருப்பாடல் 51ல் வாசிக்கிறோம்.

இறைவன் எங்கும் உளார் என்ற சிந்தனை நமக்கு இருபெரும் கருத்துகளைச் சொல்கிறது. ஒன்று, இறைவன் எப்போதுமே நம்மோடு இருக்கிறார். நமது இக்கட்டான நேரங்களிலும், மனிதர்கள் கைவிட்ட நேரங்களிலும் நம்மோடு இருக்கிறார். அது ஆழமான பாதாளமாக இருந்தாலும், இறைவன் நம்மைக் காப்பதற்காக நம்மோடு இருக்கிறார். எனவே, நாம் பயப்படவேண்டியதில்லை. இரண்டாவது கருத்து, எந்நேரமும் நம்மை இறைவன் பார்த்துக் கொண்டேயிருக்கிறார். யாரும் பார்க்கவில்லை, எனவே தவறு செய்யலாம் என்ற எண்ணம் தவறானது. மனிதர்கள் பார்க்கவில்லையெனினும் கடவுள் பார்த்துக்கொண்டேயிருக்கிறார் என்பதை ஆணித்தரமாகச் சொல்வதாகும்.

அன்பார்ந்தவர்களே! தாவீது மட்டுமல்ல, நமக்கு முன் வாழ்ந்து, மறைந்த சிறந்த மனிதர்களும், புனிதர்களும் இறைவன் எங்கும் உளார், நம்மோடு எங்கும், எப்போதும் பயணிக்கிறார், எல்லா உயிரிலும் இருக்கிறார் என்பதை உணர்ந்து எழுதியிருக்கிறார்கள். இறைவன் எங்கும் வியாபித்திருக்கிறார் என்று சின்ன குறிப்பிடத்தில் படித்திருக்கிறோம். இறைவன் தூணிலுமிருக்கிறார் துரும்பிலுமிருக்கிறார் என்று சொல்வதையும் கேள்விப்பட்டிருக்கிறோம். ‘ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்பது நம் தமிழகத்தில் பழகிய மொழி. அசிசி நகர் புனித பிரான்சிஸ் அனைத்துப் படைப்புகளிலும் இறைவனைக் கண்டார் என்பதையும் நாம் அறிவோம். இறைவனைப் பற்றிய இந்த உண்மை, ஏதோ புத்தக அறிவாலோ அல்லது கேள்வி அறிவாலோ வந்ததல்ல. மாறாக அனுபவத்தால் புடம் போடப்பட்டதால் வந்தது. கிறிஸ்து இல்லை. கிறிஸ்தவர்களும், திருத்தூதர்களும் பிதற்றுகிறார்கள் என்று சொல்லி, கிறிஸ்தவர்களை அழிக்கச் சென்ற தூய பவுல் தமஸ்கு நகர் அனுபவத்திற்கு பின் யாரை நம்ப மறுத்தாரோ அதே கிறிஸ்துவுக்காக நற்செய்தி அறிவித்தார்.

நாமும் நமது வாழ்க்கையை சற்றுத் திரும்பிப் பார்ப்போம். அது மகிழ்ச்சியான தருணமோ அல்லது இக்கட்டான நேரமோ, எல்லா நேரங்களிலும் இறைவன் நம்மோடு இருந்திருக்கிறார் என்பதை நம்மாலும் உணர முடியும். ‘இறைவன் எங்கும் உளார்’ என்ற புத்தக அறிவும், கேள்வியறிவும் நம் மனதில் எழுந்த ஐயத்திற்குப் பதிலளிக்க முடியவில்லையெனினும் நம் அனுபவம் பதிலளிப்பதை உணரமுடிகிறதல்லவா அன்பர்களே?
இப்படி இறைவன் எங்கும் இருக்கிறார், நம்மோடு எப்போதும் இருக்கிறார் என்பதை அறிந்தாலும், மனிதர்களாகிய நாம் சில சமயங்களில் யாரும் பார்க்கவில்லையென்று நினைத்து, செய்யக்கூடாத காரியங்களைச் செய்கிறோம். இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்து ஒன்றும் தெரியாதவர்கள் போல வாழத் துவங்கி விடுகிறோம். இதே போன்ற நிகழ்வு விவிலியத்திலும் உள்ளது.

ஆதாம் ஏவாளும் விலக்கப்பட்ட கனியை உண்டபிறகு இறைவனிடமிருந்து தங்களை மறைத்துக் கொண்டனர். இதைத்தான் பின்வரும் சொற்றொடர் கூறுகிறது.
மென்காற்று வீசிய பொழுதினிலே, தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலவிக்கொண்டிருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிருந்து விலகி, தோட்டத்தின் மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டனர். (தொடக்க நூல் 3: 8)
ஆனால் இறைவன் அவர்களை எளிதாகக் கண்டுபிடிக்கிறார். கண்டுபிடிக்கிறார் என்று சொல்வதைக்காட்டிலும் அவர்கள் செய்த தவறையும், அவர்கள் இருந்த இடத்தையும், நிலையையும் இறைவன் அறிந்திருந்தார். ஏனெனில் இறைவன் எங்கும் உளார்.

அது ஒரு பள்ளிக்கூடம். அன்று குழந்தைகள் தினம் என்பதால் எல்லாக் குழந்தைகளுக்கும் ஆப்பிளிலும், சாக்லேட்டும் வழங்கினர். அப்போது ஆசிரியர் ஒருவர், வகுப்பறை நாற்காலியில் ஒரு கூடை நிறைய ஆப்பிளையும், பக்கத்தில் சாக்லேட்டையும் வைத்துவிட்டு, ஆளுக்கொன்று எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு பக்கத்து அறைக்குச் சென்றுவிட்டார். மாணவர்கள் வரிசையாக ஆளுக்கோர் ஆப்பிள் மற்றும் சாக்லேட் வீதம் எடுக்க ஆரம்பித்தார்கள். ஒரு மாணவன் மட்டும் நிறைய ஆப்பிள்களை எடுக்க முயன்றான். அப்போது சக மாணவர்கள் வேண்டாம்டா என்று சொல்லி கூடைக்கு அருகிலிருந்து அறிவிப்பைக் காட்டினார்கள். அதில் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று எழுதப்பட்டிருந்தது. அதற்கு அந்த மாணவன் “கடவுள் சாக்லேட்டை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார், ஆப்பிள்களையல்ல” என்று சொல்லி நிறைய ஆப்பிள்களை எடுத்துச்சென்றானாம். இதே போன்று இறைவன் பார்க்கவில்லை என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொண்டு தவறான காரியங்களைச் செய்வதில்லையா அன்பர்களே?

இதே மனநிலையில்தான் தாவீது மன்னனும் தவறு செய்தார். ஆனால் ஒரு நாள் உணர்ந்து கொண்டார். மனவருத்தப்பட்டார். இறைவனிடம் மன்னிப்பு வேண்டினார். எனவே அன்பார்ந்தவர்களே! இறைவன் பார்ப்பதில்லை என்று சொல்லி நம் வாழ்நாள் முழுவதும் செய்த எல்லாக் காரியங்களுக்காகவும் மன்னிப்பு வேண்டுவோம். அதே நேரம் எந்த இக்கட்டிலும் கைவிடாது நம்மை காக்கும் தேவன் எப்போதும் நம்மோடு இருக்கிறார் என்ற மனத்துணிவோடு பயணிப்போம். இதுவே திருப்பாடல் 139ன் இப்பகுதி நமக்குத் தரும் பாடம்.







All the contents on this site are copyrighted ©.