2012-10-02 14:58:03

பேராயர் மம்பர்த்தி : சிரியாவின் பிரச்சனைகளுக்கு அனைத்துலக சட்டத்தின்கீழ் தீர்வு


அக்.02,2012. சிரியாவில் இடம்பெற்றுவரும் பிரச்சனைகளுக்கு, அனைத்துலகச் சட்டம் மற்றும் மனிதாபிமானச் சட்டத்தின் விதிமுறைகளைத் தவிர வேறு வழிகளில் தீர்வு காணப்பட முடியாது என்று பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஐ.நா.வில் கூறினார்.
சிரியாவில் இடம்பெறும் சண்டையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளும் கிடைப்பதற்கு வழிசெய்யப்படுமாறும் கேட்டுக் கொண்ட பேராயர் மம்பர்த்தி, சிரியாவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளவர்கள், அந்நாட்டில் ஆயுதங்களுக்குப் பதிலாக, சமய சுதந்திரம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் ஆகியவைகளை வலியுறுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.
நியுயார்க்கில் ஐ.நா.பொது அவையின் 67வது பொதுக் கூட்டத்தில் இத்திங்களன்று உரையாற்றிய, திருப்பீடத்தின் நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் மம்பர்த்தி, தற்போதைய பன்னாட்டுச் சூழலுக்கு ஒத்துப்போகும் வகையில் ஐ.நா.வில் மாற்றங்கள் இடம்பெற வேண்டுமென்றும் கூறினார்.
ஐ.நா. உருவாக்கப்பட்ட பின்னர், இந்த 67 ஆண்டுகளில் உலகில் மிகப்பெரும் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன எனவும், செல்வந்தருக்கும் வறியவர்களுக்கும் இடையேயுள்ள இடைவெளி ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்குப் பெரிதாகியுள்ளது எனவும், இதற்கு தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வளர்ச்சி பெரிதும் உதவியுள்ளது எனவும் சுட்டிக் காட்டினார் பேராயர் மம்பர்த்தி.







All the contents on this site are copyrighted ©.