2012-10-02 14:54:30

கர்தினால் ஃபிலோனி : நற்செய்தி அறிவிப்புப்பணி ஒருபோதும் எளிதாக இருந்தது கிடையாது


அக்.02,2012. நற்செய்தி அறிவிப்புப்பணி ஒருபோதும் எளிதாக இருந்தது இல்லை, சில நாடுகளில் இப்பணியை ஓர் உறுதியான துணிச்சலுடன் செய்ய வேண்டியிருக்கின்றது என்று நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni கூறினார்.
நற்செய்தி அறிவிப்புக்குத் துணிச்சல் தேவைப்படுகின்றது என்பதற்குத் திபெத்தை ஓர் எடுத்துக்காட்டாக விளக்கிய கர்தினால் Filoni, திபெத்தில் இன்று மட்டுமல்ல, அங்கு முதலில் நற்செய்தி அறிவிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டபோதே உறுதியுடன்கூடிய துணிச்சல் தேவைப்பட்டது என்று கூறினார்.
பிரான்ஸ் நாட்டுப் பாரிசில் தொடங்கிய மறைபோதகப் பணி குறித்த கருத்தரங்கில் தொடக்கவுரையாற்றிய போது இவ்வாறு கூறினார் கர்தினால் Filoni.
திபெத்தில் 16ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசிய மறைபோதகர்கள் மறைப்பணியைத் தொடங்கிய கடினமான சூழல்களையும், 1846ம் ஆண்டு மார்ச் 27 வரை திபெத்தில் பாரிஸ் மறைபோதக சபையினர் அப்பணியைச் செய்து வந்ததையும் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் Filoni, இம்மறைபோதக சபையின் முதல் மூன்று மறைப்பணியாளர்கள் தென்கொரியாவின் செயோலில் கொல்லப்பட்டதையும் நினைவுகூர்ந்தார்.
ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம் திபெத்தில் மறைப்பணியாற்றிய பின்னர் 1950ம் ஆண்டில் திபெத் சீனாவின் ஒரு பகுதியாக மாறிய போது பல மறைபோதகர்கள் வெளியேற்றப்பட்டதையும் கொல்லப்பட்டதையும் குறிப்பிட்டார் நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni.







All the contents on this site are copyrighted ©.