2012-10-02 15:06:22

அனைத்துலக வன்முறையற்ற தினம் அக்டோபர் 02


அக்.02,2012. மகாத்மா காந்தி பிறந்த தினம், பன்னாட்டு அளவில் வன்முறையற்ற தினமாக இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்டது.
காந்திஜி பிறந்த அக்டோபர் 2ம் தேதி அனைத்துலக வன்முறையற்ற தினமாக கடைப்பிடிக்கப்படுமாறு இரானிய நொபெல் விருதாளர் Shirin Ebadi 2004ம் ஆண்டு சனவரியில் பரிந்துரைத்தார்.
2007ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி ஐ.நா.பொது அவை, அக்டோபர் 2ம் தேதி அனைத்துலக வன்முறையற்ற தினமாக கடைப்பிடிக்கப்படுவதற்கு இசைவு தெரிவித்தது.
இச்செவ்வாயன்று இந்தியாவில் மகாத்மா காந்தியின் 143வது பிறந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
மேலும், இச்செவ்வாயன்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் புளோரிடா மாநிலத்தில், மகாத்மா காந்தி சிலையை, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திறந்து வைத்தார்.
அமெரிக்காவின், புளோரிடா மாநிலத்தின் டேவி நகரில், பால்கம் லியா பார்க் என்ற இடத்தில், கேரள கழகத்தின் சார்பில், ஏழு அடி உயரமுள்ள மகாத்மா காந்தியின் வெண்கலச்சிலை நிறுவப்பட்டு உள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடு சென்றுள்ள அப்துல் கலாம், இந்த சிலையைத் திறந்து வைத்துள்ளார்.
புளோரிடா மேயர் ஜுடி பால் இவ்விழாவில் பங்கேற்றார் என்றும் ஊடகச் செய்தி கூறுகின்றது.







All the contents on this site are copyrighted ©.