2012-09-28 15:23:46

மத்திய ஆப்ரிக்க ஆயர்கள் : காங்கோவில் பொது மக்களின் பாதுகாப்புக்கு அனைத்துலகத் தலையீடு தேவை


செப்.28,2012. காங்கோ சனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் இடம்பெறும் கடும் மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதேவேளை, பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்கு ஆதரவளிப்பதில் அனைத்துலகச் சமுதாயத்தின் தலையீடு தேவை என்று மத்திய ஆப்ரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
கொலைகள், பாலியல் வன்செயல்கள், பல்வேறு ஆயுதம் தாங்கிய குழுக்களில் சிறார் சேர்க்கப்படுதல், மக்களின் கட்டாயப் புலம் பெயர்வு, வரவேற்பில்லாத அகதிகள் முகாம்கள், சட்டத்துக்குப் புறம்பே கனிமவளங்கள் சுரண்டப்படுதல் என காங்கோ சனநாயகக் குடியரசின் தற்போதைய நிலைமைகளையும் ஆயர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
அண்மையில் ஆண்டுக் கூட்டத்தை முடித்து அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய ஆப்ரிக்க ஆயர்கள், காங்கோ சனநாயகக் குடியரசில், குறிப்பாக வட கிவு பகுதியில் செயல்பட்டுவரும் எனண்ணற்ற ஆயுதம் தாங்கிய குழுக்களால் நடத்தப்படும் கடும் மனித உரிமை மீறல்கள் குறித்தத் தங்களது கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.
காங்கோ சனநாயகக் குடியரசின் வட கிவு பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்னர் மீண்டும் தொடங்கியுள்ள வன்முறையால் குறைந்தது 3 இலட்சத்து 90 ஆயிரம் பேர் நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்துள்ளனர் மற்றும் அறுபதாயிரம் பேர் உகாண்டா மற்றும் ருவாண்டா நாடுகளில் புகலிடம் தேடியுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.