2012-09-28 15:20:53

ஓர் அமெரிக்க இயேசு சபை அருள்தந்தைக்கும் ஒரு ப்ரெஞ்சு மெய்யியல் பேராசிரியருக்கும் “இராட்சிங்கர் விருது 2012”


செப்.28,2012. இவ்வாண்டுக்கான இராட்சிங்கர் இறையியல் விருது, அமெரிக்க ஐக்கிய நாட்டு இயேசு சபை அருள்தந்தை Brian E. Daley, ப்ரெஞ்ச் பேராசிரியர் Rémi Brague ஆகிய இருவருக்கும் வழங்கப்படுவதாக இவ்வெள்ளியன்று நிருபர் கூட்டத்தில் அறிவித்தார் கர்தினால் கமிலோ ரூயினி.
இறையியலுக்கும் கலாச்சாரத்துக்கும் இடையே தொடர்பை உருவாக்குவதற்கு அயராது உழைப்பவர்க்கென வழங்கப்படும் இவ்விருது, வருகிற அக்டோபர் 20ம் தேதியன்று திருத்தந்தையால் வழங்கப்படும் எனவும், “ஜோசப் இராட்சிங்கர் – 16ம் பெனடிக்ட்” என்ற வத்திக்கான் அமைப்பின் தலைவர் கர்தினால் ரூயினி அறிவித்தார்.
பிரான்சில் 1947ம் ஆண்டு பிறந்த Rémi Brague 4 குழந்தைகளுக்குத் தந்தையாவார். இவர் ஒரு மெய்யியல் பேராசிரியர். இயேசு சபை அருள்தந்தை Brian E. Daley இறையியல் பேராசிரியர்.
“நொபெல் இறையியல் விருது” என அழைக்கப்படும் இவ்விருது, “ஜோசப் இராட்சிங்கர் – 16ம் பெனடிக்ட்” என்ற நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.
நூல்களை வெளியிடுவதிலும் அறிவியல் ஆய்வுகளிலும் சிறப்பாகப் பங்காற்றி வரும் வல்லுனர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இது 87 ஆயிரம் டாலர் ரொக்கப் பரிசைக் கொண்டது. இவ்விருது கடந்த ஆண்டில் முதன்முறையாக வழங்கப்பட்டது.
வருகிற அக்டோபர் 7ம் தேதி முதல் 28ம் தேதி வரை நற்செய்தி அறிவிப்பைப் புதிய பாணியில் செய்வது குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றம் வத்திக்கானில் நடைபெறவுள்ளது.







All the contents on this site are copyrighted ©.