2012-09-26 16:43:02

மத்திய கிழக்கில் மேற்கத்திய நாடுகளின் தலையீட்டுக்குக் கண்டனம்


செப்.26,2012. மேற்கத்திய நாடுகள், மத்திய கிழக்குப் பகுதி மக்களை மதிக்க வேண்டும் மற்றும் அவர்கள் தங்கள் பிரச்சனைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்வார்கள் என்பதில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று மத்திய கிழக்குப் பகுதியின் இரு கிறிஸ்தவத் தலைவர்கள் கூறினர்.
உரோமையில் திருப்பீடத்துக்கான ஈராக் தூதரகம் நடத்திய கூட்டத்தில் பேசிய மெல்கித்தேரீதி திருஅவையின் ஈராக் பேராயர் Jules Mikhael Jamil, வத்திக்கானுக்கான மெல்கித்தேரீதி திருஅவையின் பிரதிநிதி பேரருட்திரு Mtanios Haddad ஆகிய இருவரும் இவ்வாறு கூறினர்.
மத்திய கிழக்குப் பகுதியில் மேற்கத்திய நாடுகளின் இராணுவத் தலையீடும், பிற தலையீடுகளும் நிறுத்தப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்ட இவ்விரு தலைவர்கள், இந்தத் தலையீடுகள் கலவரங்களை மேலும் தூண்டி விடுகின்றன மற்றும் அமைதிக்கான அம்மக்களின் ஆசைக்கு இடையூறாய் இருக்கின்றன என்று தெரிவித்தனர்.
மேற்கத்திய நாடுகள், மத்திய கிழக்குப் பகுதி கிறிஸ்தவர்கள்மீது மிகச் சிறிதளவே அக்கறை கொண்டுள்ளன எனத் தான் உணர்வதாகத் தெரிவித்தார் பேராயர் Jamil.
மேலும், இக்கூட்டத்தை ஆரம்பித்து வைத்துப் பேசிய திருப்பீடத்துக்கான ஈராக் தூதர் Habeeb Mohammed Hadi Ali Sadr, அரபு நாடுகளிலும் வெளியிலும் வாழும் அரபுக் கிறிஸ்தவர்களுக்கு அந்நாடுகள் ஆதரவு வழங்குமாறு வலியுறுத்தினார்.
கிழக்கிலும் மேற்கிலும் கலாச்சாரங்களைப் பாதுகாப்பதில் கிறிஸ்தவர்கள் பெரும்பங்காற்றியுள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.