2012-09-25 15:26:54

விவிலியத் தேடல் - திருப்பாடல் 139 பாகம் 1


RealAudioMP3 உளவியல் படிப்பதாகச் சொன்னாலே, "அடேங்கப்பா! அப்ப என் மனசுல உள்ளதெல்லாம் கண்டுபுடுச்சுடுவீங்களா”? என்ற அப்பாவித்தனமான அல்லது கேலியான கேள்விகளை எழுப்புவது நடைமுறையில் உள்ளதை நாம் அறிவோம். உளவியல் வல்லுனர்கள் பிறர் மனதில் உள்ளதை அறிந்து சொல்லிவிட முடியுமா? இது சாத்தியமா? சாத்தியம் எனில் உளவியல் வல்லுனர்கள் அப்படி என்னதான் செய்கிறார்கள்? மனிதர்களுடைய எண்ணங்கள், சிந்தனைகள் மற்றும் செயல்களைக் கொண்டு மனிதர்களை வகைப்படுத்துகிறார்கள். மனிதர்களின் பண்பு நலன்களின் அடிப்படையிலும் இவ்வகைப்படுத்தல்கள் நடைபெறுகின்றன. இவ்வகைப்படுதல்களை அடிப்படையாகக்கொண்டு இவர்கள் இப்படி சிந்திப்பார்கள், இப்படி செயல்படுவார்கள் எனச்சொல்கிறார்கள். இவர்கள் சொல்வது சில சமயங்களில் சரியாக இருக்கின்றன. சில சமயங்களில் நேர்எதிராக இருக்கின்றன. ஏனெனில் ஒவ்வொரு மனிதரும் தனித்துவமுடையவர்கள். எனவே எல்லா மனிதர்களும் உளவியலாளர்களின் வகைப்படுத்தலின்படிதான் வாழ்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஒன்றும், ஒன்றும் இரண்டு என்று சொல்வதுபோல், உளவியலாளர்கள் மனிதர்களின் பண்புநலன்களைக்கொண்டு கணக்கிடுகிறார்கள். அவ்வளவுதான். எனவே எந்த உளவியலாளரும் மனிதர்களின் மனதில் உள்ளதை அப்படியே படம் பிடித்துக்காட்ட முடியாது. ஆனால் மனிதர்களால் அறியமுடியாதவற்றையும் அறியக்கூடியவர் இறைவன் மட்டுமே. மனிதர்களின் செயல்களை மட்டுமல்ல, சிந்தனைகள், எண்ணங்கள், பழக்கவழக்கங்கள், பண்பு நலன்களையும் துல்லியமாக அறிந்தவர் கடவுள் ஒருவரே. நமக்கே நம்மைப்பற்றி தெரியாத காரியங்களையும் கடவுள் அறிவார். நம்மைப்பற்றி கடவுளுக்கு தெரியாதது எதுவுமே இல்லை என்று கூறும் திருப்பாடல் 139ஐ தான் நாம் இன்று சிந்திக்கிறோம்.

கடவுள் இப்படிப்பட்டவர் என்று அவரது பண்புகளைப் பட்டியலிடுவது இப்பாடலின் சிறப்பு. வேறு எந்தத் திருப்பாடலிலும் இப்படி இறைவனைப்பற்றி அவரது குணநலன்களைப்பற்றி சொல்லப்படவில்லை. எல்லாம் அறிந்தவர், எங்கும் இருப்பவர், எல்லாம் வல்லவர் என யாவே இறைவனைப்பற்றி ஆசிரியர் சொல்கிறார். மனிதர்களுடைய நினைவு, சொல், செயல்களை அளந்தறியக்கூடியவர் இறைவன் ஒருவரே. அவரிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. எனவே உண்மையாயிருங்கள் என்று சொல்வதே இத்திருப்பாடல் ஆசிரியரின் நோக்கம் எனக்கருதுகிறேன். இன்றைய சிந்தனையில் கடவுள் மட்டுமே எல்லாம் அறிந்தவர் என்பதைப் பற்றி மட்டும் சிந்திப்போம். அதற்காக இப்பாடலின் முதல் ஆறு சொற்றொடர்களை மட்டும் எடுத்துக் கொள்வோம். இதோ முதல் ஆறு சொற்றொடர்கள்.

ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!
நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.
நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே.
ஆண்டவரே! என் வாயில் சொல் உருவாகு முன்பே, அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர்.
எனக்கு முன்னும் பின்னும் என்னைச் சூழ்ந்து இருக்கின்றீர்; உமது கையால் என்னைப் பற்றிப்பிடிக்கின்றீர்.
என்னைப்பற்றிய உம் அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது; அது உன்னதமானது; என் அறிவுக்கு எட்டாதது.

ஒரு பெண் கருத்தரித்ததிலிருந்து ஒவ்வொரு மாதமும் குழந்தையின் எடை, வளர்ச்சி, தாயின் உடல்நிலை என எல்லாவற்றையும் சோதனை செய்கிறார்கள். இப்படி ஒரே மருத்துவர் ஒவ்வொரு மாதமும் சோதனை மேற்கொண்டாலும், ஒன்பது மாதங்களுக்குப் பிறகு எந்த நாளில், எந்த நேரத்தில் குழந்தை பிறக்கும் எனச் சரியாகச் சொல்லமுடிகிறதா அன்பர்களே? பிரசவவலி வந்த பிறகும்கூட சுகபிரசவமா அல்லது அறுவைச்சிகிச்சையா? என அவர்களால் சொல்ல முடிகிறதா? இல்லையே. அவர்களால் யூகிக்க முடியும். ஆனால் இப்படித்தான், இதுதான் நடக்கும் என அறுதியிட்டு கூறமுடிவதில்லை. பங்குச்சந்தையை எடுத்துக்கொள்வோம். பங்குச்சந்தையைப்பற்றி படித்து, ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்று, பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற வல்லுனர்கள், குறிப்பிட்ட சில நிறுவனப்பங்குகளில் முதலீடு செய்தால் நல்லது எனக் கணிக்கிறார்கள், ஆலோசனை வழங்குகிறார்கள். ஆனால் அவர்கள் சொல்வது போன்றே சந்தை நடைபெறுகிறதா? இல்லையே. ஏனெனில் இவர்களால் யூகிக்க மட்டுமே முடியும். எனவே மனிதர்கள் அனைத்தையும் அறியாதவர்கள். அனைத்தையும் அறிந்துகொள்ளவும் இயலாதவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் இறைவன் எல்லாம் அறிந்திருக்கிறார் என்பதைச் சமயநம்பிக்கை அடிப்படையில் எளிதாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அறிவுக் கண்கொண்டு எப்படி புரிந்துகொள்வது, விளக்கமளிப்பது?

இதைப் புரிந்துகொள்ள நமது பெற்றோர்களையே எடுத்துக்கொள்வோம். பல ஆண்டுகள் பாலூட்டி, சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பிள்ளைகளைப்பற்றி பெற்றோர்களுக்கு தெரியுமா? தெரியாதா? தன் பிள்ளைக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது எதைத் தேர்ந்தெடுக்கும், எதைத் தேர்ந்தெடுக்காது எனத்தெரியாதா? கண்டிப்பாகத் தெரியும். ஏனெனில் அப்பிள்ளை வளர்ந்த ஒவ்வொரு வினாடியும் உடனிருந்திருகிறார்கள். அப்பிள்ளையின் பண்புநலன்களை, எண்ணங்களை, சிந்தனைகளை அளந்து வைத்திருப்பார்கள். இரண்டு அல்லது மூன்று பிள்ளைகளை பெற்று வளர்க்கும் பெற்றோரால் அவர்களது பிள்ளைகளின் நினைவு, சொல், செயல்களை கணிக்கமுடிகிறதென்றால், மனித இனத்தை படைத்து, காத்து, வழிநடத்தும் இறைவனுக்கு மனிதர்களுடைய தேர்வு எவ்வாறு இருக்கும் எனக் கணிக்கமுடியாதா? கோடிக்கணக்கான மனிதர்களைப் பார்த்த கடவுளுக்கு இது மிகவும் எளிதான செயல் என இப்போது நம் அறிவு சொல்வதை கண்டிப்பாக நாம் ஏற்றுக் கொள்வோம் என நினைக்கிறேன்.

இதை ஏற்றுக்கொள்கிற நமக்கு இன்னொரு கேள்வி தயாராக இருக்கிறது. அது என்ன? இறைவன் அனைத்தையும் அறிந்திருக்கிறார் என்றால் அவருக்குத் தெரிந்துதான் எல்லாம் நடக்கிறதா? உலகில் நடக்கும் எல்லாவிதமான தீமைகளையும் அவர் அனுமதிக்கிறாரா? என்ற கேள்விக்கு பதில் தேட முயற்சிப்போம். மீண்டும் நமது பெற்றோரையே எடுத்துக் கொள்வோம். பிள்ளைகள் தவறு செய்கின்றபோது கண்டிக்கிறார்கள், அறிவுரை கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிவிட்ட பிறகு, தெளிந்த அறிவோடு செய்யும் எல்லா காரியத்திற்குமா கண்டிக்கிறார்கள்? இல்லை, புத்திமதிதான் சொல்லிக் கொண்டிருகிறார்களா? இல்லையே. முக்கியமான காரியங்களில் மட்டும் தலையிட்டுக் கண்டிக்கிறார்கள், அறிவுரை கூறுகிறார்கள். ஏனெனில், பிள்ளைகளின் சுதந்திரத்தையும், சுயத்தையும் மதிக்கிறார்கள். அவர்களது வாழ்வை அவர்களே முடிவு செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். அதே போலத்தான் இறைவன் மனிதர்கள் சிறுபிள்ளைகளாக இருக்கும்போது, பெற்றோர்கள், ஆசிரியர்கள், அருட்பணியாளர்கள், துறவிகள், திருச்சபைக் கட்டளைகள் மற்றும் விவிலியம் வழியாக வழிநடத்துகிறார், அறிவுரை கூறுகிறார். வளர்ந்து புத்தி, விவரம் தெரிந்தபிறகு அவர்களே பார்த்து செய்துக்கொள்ளட்டும் என நம் கையில் விட்டுவிடுகிறார். ஆனால் தேவையான நேரங்களில் தலையிட்டு நம்மை நெறிப்படுத்துகின்றார், வழிநடத்துகின்றார். இதற்கு உதாரணம் இறைவாக்கினர்கள், நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து, நம் காலத்து புனிதர்கள் என்பதை யாராலும் மறக்க முடியாது. கடவுள் நம்மை அவர்கையில் இருக்கும் பொம்மைகளாக இருக்க விரும்புவதில்லை. மாறாக நாமும் வளரவேண்டும், சரியான முடிவை எடுக்கும் நல்ல பிள்ளைகளாக வளரவேண்டும் என ஆசிக்கிறார்.

இப்படிப்பட்ட அப்பாவைப் பெற்ற பிள்ளைகள் அனைவரும் அவருக்கு உண்மையிலும், உண்மையாக இருக்கவேண்டும். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் சர்வ சாதரணமாக தப்பு செய்கிறார்கள். இவ்வாறு தப்பு செய்கிறவர்கள் எல்லார் முன்னிலையிலும் செய்வதில்லை. மாறாக தனிமையைத் தேர்ந்தெடுகிறார்கள். எடுத்துக்காட்டாக, திருடர்கள் எல்லார் முன்னிலையிலும், எல்லாருக்கும் தெரியுமாறு திருடுவதில்லை. யாரும் அறியாத நேரத்தில், யாரும் இல்லாத நேரத்தில்தான் திருடுகிறார்கள். இவ்வாறு எல்லாவிதமான தவறான செயல்களுமே யாரும் பார்க்கவில்லை, யாரும் அறிந்துகொள்ள முடியாது என்ற சூழ்நிலையில்தான் அதிகமாக நடைபெறுகிறது. மனிதர்கள் பார்ப்பதில்லை, அறிவதில்லை. ஆனால், இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை மறந்துவிடுகிறார்கள். காயின், ஆபேலை எடுத்துக் கொள்வோம். இறைவன் தன் காணிக்கைகளை ஏற்கவில்லை. ஆனால் ஆபேலின் காணிக்கையை ஏற்றுக்கொண்டார் என்று ஆபேலின் மீது காயின் காழ்ப்புணர்ச்சி கொண்டான். எனவே அவனை வயல்வெளிக்குத் தனியே அழைத்துச் சென்று அவன் மேல் பாய்ந்து கொன்றான் என தொடக்க நூல் 4: 8 சொல்கிறது.

நாம் என்ன செய்யப்போகிறோம், என்ன நினைத்து கொண்டிருக்கிறோம், நமது திட்டங்கள் என்ன? என்று இறைவன் துல்லியமாக அறிந்திருக்கிறார். எனவே நாம் எதையும் அவரிடமிருந்து மறைக்கமுடியாது. அவருக்குத் தெரியாது என்று எதையும் செய்துவிட முடியாது. நாம் செய்த தவறைப் பிறர் அறிந்துகொண்டால் அவமானம் என நினைக்கிறோம். திருடுவதைப் பிறர் பார்த்தால் பலமாகத் தண்டிக்கப்படுவோம் என்ற பயமும் இருக்கிறது. ஆனால் நமது எல்லாவிதமான சிந்தனைகளையும், எண்ணங்களையும், சொல், செயல்களையும் இறைவன் அறிந்திருக்கிறார் என்று தெரிந்தும் செய்கிறோம். உடலைத் தண்டிப்பவர்களுக்குப் பயப்படுகிறோம். ஆனால் இறைவனுக்குப் பயப்படுவதில்லை. ஏனெனில் நாம் கடவுளைப் பார்த்ததில்லை. அவர் கொடுக்கிற தண்டனைகளையும் பார்த்ததில்லை. கண்ணில் காணாததால் நமக்குப் பயம் வருவதில்லை. இதனால் வருகிற அலட்சியப்போக்குதான் இதற்கு காரணம் என நினைக்கிறேன்.

ஒரு சிறிய கற்பனை செய்துப் பார்ப்போம். உண்மையாகவே பிறர் நினைப்பதை அறியும் ஆற்றல் நமக்கு இருந்தால் நமது வாழ்வு எப்படி இருக்கும்? பிறருடைய எண்ணங்களும், சிந்தனைகளும் என்ன என்று தெரிந்துகொண்டால் நமது செயல்களும், சிந்தனைகளும் எப்படி இருக்கும்? அதற்கு ஏற்ப நாம் நம்மை மாற்றிக்கொள்ள மாட்டோமா? யாரவது நம்மை ஏமாற்றப்போகிறார்கள் என்று தெரிந்தால் அவரிடம் நாம் எச்சரிக்கையாக நடந்துகொள்ள மாட்டோமா? ஒருவேளை பிறரைப் பற்றி நமக்கு தெரியவந்தால், நாம் அவர்களோடு பேசுவோமா, நமது உறவு தொடருமா? என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி. மனிதர்களாகிய நாம் ஓரிரண்டு குறைகள் தெரிந்தாலே போதும், ஒதுக்கிவைக்கதான் நினைக்கிறோம். குறைகளோடு பிறரை ஏற்றுகொள்ள யோசிக்கிறோம். ஆனால் இறைவனைப் பாருங்கள். அவர் நம்மைப்பற்றி எல்லாம் அறிந்தவர். ஆயினும் நம் எல்லாரையும் அன்பு செய்பவர். நம்மைப்பற்றி தெரிந்தும் நமது குறைகளை, தீய எண்ணங்களைப்பற்றி தெரிந்தும் நம்மை அலட்சியப்படுத்தவில்லை, ஒதுக்கவில்லை. மாறாக, அதே பாசத்தோடும், அதே அன்போடும் நம்மைப் பேணிக்காக்கிறார்.

இறைவனைப்போல எல்லாம் தெரிந்தவர்கள் இல்லை என்பதை உணர்வோம். நமது குறைகளை ஏற்றுக்கொள்வோம். நம்மைப்போல பிறரும் குறையுள்ளவர்கள் என்பதையும் ஏற்றுக்கொண்டு வாழ்வோம். அதேவேளையில் எல்லாம் தெரிந்த இறைவனிடமிருந்து எதையும் மறைக்க முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு என்றும் உண்மையுள்ள பிள்ளைகளாக வாழ்வோம்.








All the contents on this site are copyrighted ©.