2012-09-25 15:57:40

சார்ஸ் நுண்கிருமியை ஒத்த புதிய கிருமி: மருத்துவர்கள் எச்சரிக்கை


செப்.25,2012. 2003ம் ஆண்டில் உலகின் பல பாகங்களிலும் பரவி நூற்றுக்கணக்கானவர்கள் இறப்பதற்குக் காரணமான சார்ஸ் நுண்கிருமி நோயை ஒத்த புதிய சுவாசநோய் ஒன்றை பிரிட்டன் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
கத்தாரிலிருந்து இலண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டுவரப்பட்ட 49 வயது ஆண் ஒருவரிடம் இந்த நோய்க் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய நுண்கிருமியால் எவ்வகையான ஆபத்து ஏற்படலாம் என்று நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள் என்றும் ஊடகச் செய்தி கூறுகிறது.
பொதுவாக, சுவாசப்பாதையைத் தாக்கி, சாதாரண தடிமனையும் சார்ஸ் எனப்படுகின்ற கடுமையான திடீர் சுவாசநோயையும் ஏற்படுத்துகின்ற ஒருவகை நுண்கிருமியை உள்ளடக்கிய பெரிய நுண்கிருமி குடும்பத்தை கொரோனா நுண்கிருமி என்று மருத்துவ உலகம் கூறுகிறது.
ஹாங்காங்கிலிருந்து முப்பதுக்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவி ஏறத்தாழ 800 பேரைக் காவுகொண்ட இந்தச் சார்ஸ் நோய் முழுமையாக ஒழிக்கப்படாவிட்டாலும் அது பரவுவது 2003ம ஆண்டில் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.