2012-09-24 14:15:27

வாரம் ஓர் அலசல் - அமைதி என்பது...


செப்.24,2012 RealAudioMP3 . ஹெலன் கெல்லர் என்பவர் புகழ்பெற்ற எழுத்தாளராகவும் சிறந்த பேச்சாளராகவும் அரசியல் ஆர்வலராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண். பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாக கண்பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இவர் இழந்தார். எனினும், உலகில் இளங்கலைப்பட்டம் பெற்ற, பார்க்கவும் கேட்கவும் முடியாத முதல் மாற்றுத்திறனாளி என்ற பெருமைக்கு உரித்தானவர் இவர். அறிவாற்றலிலும் நெஞ்சுரத்திலும் சாதாரண மனிதர்களுக்கு சற்றும் சளைக்காதவரான கெல்லர், பார்வையற்றோருக்கான ப்ரெயில் முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மானியம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளைக் கற்றவர். உலகில் போருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வந்த ஹெலன் கெல்லர், அனைத்துலக உழைப்பாளர் இயக்கத்திலும், அமெரிக்க சோஷலிச கட்சியிலும் உறுப்பினராக இருந்தவர். ஒருநாள் ஹெலன் கெல்லரை பார்க்கச் சென்ற அவரது நண்பர் ஒருவர் அவரிடம் “உங்களுக்கு விருப்பமான ஒன்று தரப்படுகிறது என்றால் அது என்னவாக இருக்க வேண்டும்? என்று கேட்டார். பார்க்கும் திறனும், கேட்கும் திறனும் தனக்குத் தேவை என்று சொல்வார் என அந்த நண்பர் எதிர்பார்த்தார். ஆனால் ஹெலன் கெல்லரோ அமைதியாகப் பதில் சொன்னார்: “இந்த உலகத்தில் அமைதி மலர வேண்டுமென்று கேட்பேன்” என்று.
இரண்டு பெரும் உலகப் போர்களையும், பல கடும் உள்நாட்டுச் சண்டைகளையும் எதிர்கொண்டுள்ள இந்த உலகத்தில் இன்று பலர் விரும்புவது அமைதி. இலங்கையின் முள்ளிவாய்க்கால், ஹிட்லரின் ஆஷ்விஷ் வதைமுகாம், ருவாண்டா போன்ற உலகின் பல இடங்களில் இலட்சக்கணக்கில் அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன. இன்றும் இந்த நாள்களிலும் சில நாடுகளில் பீரங்கிகளின் தாக்குதல்களும் துப்பாக்கிச் சப்தங்களும் தற்கொலைக் குண்டு வெடிப்புகளும் நின்றபாடில்லை. அரபு வசந்தம் என்ற பெயரில் பல அரபு நாடுகளில் எழுந்த கிளர்ச்சிகளும் ஆயுதத் தாக்குதல்களும் இன்றும் தொடர்கின்றன. கடந்த 18 மாதங்களாக சிரியாவில் இராணுவத்துக்கும் புரட்சியாளர்களுக்கும் இடையே இடம்பெற்றுவரும் கடும் சண்டையில் 23 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்று சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள். சொமாலியாவில் 20 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்ற உள்நாட்டுச் சண்டையின் தாக்கத்தால் ஏறக்குறைய மூன்று இலட்சம் பேர் இறந்துள்ளனர். அவையெல்லாம் முடிந்து அந்நாட்டில் தற்போது புதிய அரசு ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையிலும் சொமாலியப் புதிய அரசுத்தலைவர் அண்மையில் குண்டுவெடிப்புத் தாக்குதலிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். எனினும், கடந்த சனிக்கிழமையன்று ஏறக்குறைய 250 புரட்சியாளர்கள் ஆயுதங்களுடன் சரணடைந்து அமைதிக் குழுவில் சேர்ந்தனர். ஆனால் இதே சொமாலியத் தலைநகர் மொகதிஷ்சுவில் கடந்த வியாழனன்று ஓர் உணவு விடுதியில் இரண்டு தற்கொலை குண்டு வெடிப்புகள் இடம்பெற்று குறைந்தது 14 பேர் இறந்துள்ளனர். மாலி, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும் குண்டுவெடிப்புக்கள் நிறுத்தப்படவில்லை. காங்கோ குடியரசில் அமைதி எப்பொழுதும் கானல்நீர்தான். புதிய நாடாகிய தென்சூடான் அரசுத்தலைவர் Salva Kiir, ஊழல் அரசு அதிகாரிகள் திருடியுள்ள 400 கோடி டாலரைத் திருப்பிச் செலுத்துமாறு கேட்டுள்ளார்.
இவை மட்டுமல்ல, முகமது நபிகளை அவதூறாகச் சித்தரித்த “The Innocence of Muslims” என்ற திரைப்படம் இம்மாதம் 19ம் தேதி அமெரிக்காவில் வெளியானதையடுத்து உலகெங்கும் ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் வாழும் முஸ்லீம்கள் கொந்தளித்துள்ளனர். முதலில் லிபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டது. லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் உட்பட சிலர் இறந்தனர். இந்தத் திரைப்படத்தை எடுத்த அமெரிக்கர் தலைக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டாலரைப் பரிசாகத் தருவதாக பாகிஸ்தான் மத்திய இரயில்வே துறை அமைச்சர் குலாம் அகமது பிலோர் தெரிவித்திருக்கிறார். அந்த அமெரிக்கரைத் தலிபான்களோ அல்லது அல்கெய்தா இயக்கப் பிரிவினரோ கொலை செய்தாலும் அவர்களுக்கும் இந்தப் பரிசுத்தொகை வழங்கப்படுமென அந்த அமைச்சர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது என ஊடகங்கள் இஞ்ஞாயிற்றுக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்த அறிவிப்பு கொலை செய்வதற்குப் பொதுமக்களைத் தூண்டிவிடுவதாகும். இது கொலைக் குற்றம் எனினும் இசுலாமிய மதத்தை அவமதித்தவருக்கு இந்தத் தண்டனை சரியானதுதான் என்று அவ்வமைச்சர் தனது அறிவிப்புக்கு நியாயம் சொல்லியிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. இந்த அமைச்சரின் அறிவிப்பு ஏற்கனவே எரிகிற வன்முறை நெருப்புக்கு எண்ணெய் வார்ப்பது போல் இருக்கின்றது. இந்த வன்முறைகளால் பாகிஸ்தானில் 4 திரையரங்குகள், 2 உணவு விடுதிகள், 6 வங்கிகள், 4 காவல்துறை வாகனங்கள், பல வாகனங்கள் என பொருள்சேதமும் ஆட்சேதமும் அதிகம் ஏற்பட்டுள்ளன. மேலும், நைஜீரியாவின் வடக்கிலுள்ள Bauchi நகரிலுள்ள ஆலயத்தில் இஞ்ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் குறைந்தது இருவர் இறந்துள்ளனர் மற்றும் 48 பேர் காயமடைந்துள்ளனர் என செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் கூறினர்.
நாடுகளில் ஊழலும், இரத்தம் சிந்தும் தாக்குதல்களும் தீ வைப்புகளும் தொடர்ந்து இடம்பெற்றுவரும் இன்றைய உலகில் அமைதியை எப்படி எதிர்பார்க்க முடியும்?. ஐ.நா.வும் 1982ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ம் நாளன்று அனைத்துலக அமைதி தினத்தைக் கடைப்பிடித்து அந்நாளில் உலக அமைதிக்காகச் சிறப்பாக விண்ணப்பித்து வருகின்றது. ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் நியுயார்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்திலுள்ள பெரிய மணியை ஒலித்து இந்த அமைதி நாளின் நிகழ்வுகளைத் தொடங்கி வைக்கிறார். அவரைத் தொடர்ந்து சில முக்கிய பிரமுகர்களும் இம்மணியை அடித்து அமைதியின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்துகின்றனர். போரினால் இழக்கப்பட்ட மனித உயிர்களின் நினைவாக ஜப்பானின் ஐ.நா.கழகம் 1954ம் ஆண்டில் இந்தப் பெரிய மணியை ஐ.நா.வுக்குப் பரிசாக வழங்கியது. இந்த மணியானது 60 நாடுகளின் சிறார் வழங்கிய நன்கொடைக் காசுகளை வைத்து உருவாக்கப்பட்டது. இந்த ஆண்டும் இந்த உலக அமைதி தினம் கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த மணியை ஒலிக்கச் செய்து ஆரம்பிக்கப்பட்டது. உலகில் அமைதிப்பணியின்போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அந்நாளில் ஒவ்வொரு நாடும் நண்பகலில் ஒரு நிமிடம் மௌனம் அனுசரித்தது.
இந்தப் பெரிய மணியை ஒரு பெரிய நீளமான மரக்கட்டையால் இழுத்து அடித்தபின் பேசிய பான் கி மூன், கடும் பதட்டநிலைகள் நிலவும் இன்றைய உலகில் சகிப்புத்தன்மையும், உரையாடலும், ஒத்துழைப்பும் நல்லிணக்கமும் அவசியம் என்று வலியுறுத்தினார். சிறார் படைவீரர்களைப் போரில் ஈடுபடுத்துவது, சட்டத்துக்குப் புறம்பே நிலக்கண்ணிவெடிகளைப் புதைப்பது, வைரங்களையும் பிற இயற்கை வளங்களையும் போர் ஆயுதங்கள் வாங்கவும் மற்ற செலவுகளுக்கும் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இயற்கை வளங்கள் போருக்கு அல்ல, மாறாக சமுதாயத்தின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். சிறார்கள் சண்டையிடுவதற்கு அனுப்பப்படாமல் பள்ளிகளுக்கு அனுப்பப்பட வேண்டும். தற்போது உலகின் 16 இடங்களில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ஐ.நா.அமைதிக் காப்பாளர்கள் பணியில் உள்ளனர் என்று ஐ.நா.பொதுச் செயலர் கூறினார். “ஓர் உறுதியான எதிர்காலத்துக்கு ஒரு நிலையான அமைதி” என்ற தலைப்பில் இவ்வாண்டில் இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டது. உலகில் சண்டைகள் நிறுத்தப்படுவதற்காக ஐ.நா. தொடர்ந்து விண்ணப்பித்து வருகிறது.
RealAudioMP3 உலகின் அமைதிக்காகத் திருத்தந்தையரும் தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர். திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கடந்த ஞாயிறன்று நிறைவு செய்த 3 நாள் லெபனன் திருப்பயணத்திலும் அமைதிக்கும் மதங்களுக்கு இடையே உரையாடலுக்கும், குறிப்பாக சிரியாவில் வன்முறைகள் நிறுத்தப்பட்டு அமைதி ஏற்படவும் கேட்டுக் கொண்டார். இஞ்ஞாயிறன்றும் காஸ்தெல் கந்தோல்ஃபோவில் ஆற்றிய மூவேளை செப உரைக்குப் பின்னர் மத்திய கிழக்கில் அமைதிக்காகச் செபிக்கக் கேட்டுக் கொண்டார். ப்ரெஞ்ச் மொழியில் திருப்பயணிகளுக்கு வாழ்த்து தெரிவித்த போது மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியும் மதங்களுக்கு இடையே அமைதியான முறையில் உரையாடலும் இடம்பெறவும், அப்பகுதி கிறிஸ்தவர்களுக்காகவும் செபிக்குமாறும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
RealAudioMP3 இந்த அனைத்துலக அமைதி நாளில் ஈராக்கின் கிர்குக்கில் குறைந்தது 150 இளம் கிறிஸ்தவர்கள் உண்ணா நோன்பிருந்து அமைதிக்காகச் செபித்துள்ளனர். வன்முறையும் பயங்கரவாதமும் ஒழியட்டும் என லிபியாவின் பென்காசியில் இளையோர் ஊர்வலம் நடத்தியுள்ளனர். வன்முறை அறிவற்றது. வன்முறையால் நாம்தான் நம்மையே புண்படுத்திக் கொள்கிறோம், நமது சொத்துக்களை நாமே அழித்துக் கொள்கிறோம் என்றும் இந்நாள்களில் வன்முறையை நிறுத்தக்கோரும் ஊர்வலங்களும் நடந்துள்ளன. அமைதிக்கு வழிவிடுங்கள் என்ற கோஷங்களும் எழுந்துள்ளன. வத்திக்கான் வானொலி நேயர்களே, இன்று நாம் எல்லாரும் விரும்புவது அமைதி. தனிமனிதரில் தங்கியிருக்கும் அமைதியின்மையே சமுதாய அமைதியின்மைக்குக் காரணம். ஒரு கும்பல் தன்னிடமுள்ள வெறுப்பையும் காழ்ப்புணர்வையும் நாட்டுப்பற்று, சமயப்பற்று, கடவுள்பற்று என்ற போர்வையில் அப்பாவிகளை வன்முறைக்குத் தூண்டி விடுகிறது. பயங்கரவாதிகளாக ஆக்குகிறது. எனவே முதலில் ஒவ்வொருவரும் தன்னிடமுள்ள பகைமை, கோபம், வெறுப்பு, பொறாமை, நான் என்ற போக்கு போன்ற தகாத உணர்வுகளை அகற்ற வேண்டும். மாறாக, இதயத்தில் அன்பு, கருணை, மன்னிப்பு, சமாதானம், ஒப்புரவு போன்ற நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆயுதங்களின் சப்தங்கள் கேட்காமல் இருப்பதால்மட்டும உலகில் அமைதி வந்து விடாது என்பது நமக்குத் தெரிந்த உண்மை. மனித மனங்களில் தோன்றும் எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. நாம் சிறிது விழிப்புநிலை தவறினால்கூட அவை நம்மை ஏமாற்றிவிட்டு, தூய்மையற்றதை நோக்கிச் செல்ல முயற்சிக்கும். எனவே நாம்தான் கவனமாக இருந்து நம்மில் தீய எண்ணங்கள் தோன்றாமல் இருப்பதற்குப் பார்த்துக்கொள்ள வேண்டும். தீய எண்ணங்கள் தோன்றாமல் இருப்பதற்கு நல்ல நேர்மறை எண்ணங்களை எப்போதும் மனதில் ஏற்று அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். நேர்மறை எண்ணங்கள் இருக்கும் மனதில் எப்போதும் அமைதி இருக்கும். அகஅமைதியை அடைய முடியாமல் துன்பப்படும் நேரங்களில் இறைவனின் அருளையும் நாட வேண்டும்.







All the contents on this site are copyrighted ©.