2012-09-24 15:00:14

தேவ நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்ட பாகிஸ்தான் சிறுமியை பாலர் நீதிமன்றத்தில் விசாரிக்க நீதிபதி உத்தரவு


செப்.24,2012. இசுலாமியர்களின் புனித நூலை எரித்தார் எனப் பொய்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள பாகிஸ்தான் கிறிஸ்தவச் சிறுமி பாலர் சீர்திருத்தச் சட்டங்களின்கீழ் விசாரிக்கப்பட ஆணை பிறப்பித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.
Rimsha Masih என்ற இந்தச் சிறுமியின் மீதான வழக்கு சிறையில் வைத்து விசாரிக்கப்படவேண்டும் என்ற மாவட்ட நிர்வாகத்தின் விண்ணப்பத்தை ஏற்க மறுத்த இஸ்லாமாபாத் நீதிமன்றம், 14 வயதே என நிரூபிக்கப்பட்டுள்ள அச்சிறுமியை சிறார்களுக்கான நீதிமனன்றத்தில் விசாரிக்க வேண்டும் எனப் பணித்துள்ளது. இதற்கிடையே, அக்கிறிஸ்தவச் சிறுமியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது பாகிஸ்தான் காவல்துறை.
கல்வியறிவற்ற, அதேவேளை மனநிலை பாதிக்கப்பட்ட இந்த 14 வயதுச் சிறுமி மீது பொய்யானக் குற்றச்சாட்டை முன்வைத்த இசுலாமிய குரு ஒருவர் தற்போது தேவ நிந்தனைக் குற்றச்சாட்டுடன் சிறைவைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சிறுமியின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்காக, இந்த இசுலாமிய குருவே புனித நூலான குரானின் சில பக்கங்களை எரித்துள்ளது தற்போது அவர் மீதே தேவ நிந்தனைக் குற்றச்சாட்டிற்கு வழிவகுத்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.