2012-09-24 14:50:43

திருத்தந்தை: தாழ்மை இறைவனின் வழி


செப்.24,2012. அனைவருக்கும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் மாறுவதில் இயேசு கிறிஸ்துவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி நடக்குமாறு கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கடவுளும் மனிதரும் வேறுபடுவதில் தற்பெருமை முக்கியமானதாக இருக்கின்றது என்று காஸ்தெல் கந்தோல்ஃபோவில் இஞ்ஞாயிறன்று ஆற்றிய நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை.
மிகவும் சிறியவர்களாக இருக்கும் நாம் முதலில் பெரியவர்களாக இருப்பதற்கு விரும்புகிறோம், ஆனால் உண்மையிலேயே உன்னதமான கடவுள் தம்மைத் தாழ்த்துவதற்குப் பயப்படவில்லை மற்றும் தம்மைக் கடையராகவும் ஆக்கினார் என்றும் கூறினார் திருத்தந்தை.
தமது மரணத்தையும் உயிர்ப்பையும் இயேசு தமது சீடர்களுக்கு அறிவித்தபோது அதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை மற்றும் அதைப் பற்றி அவரிடம் கேட்பதற்குப் பயந்தது குறித்து விளக்கும் இஞ்ஞாயிறு மாற்கு நற்செய்திப் பகுதியை விளக்கியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
யார் பெரியவர் என்று தமது நெருங்கிய சீடர்கள் தங்களுக்குள் வாதாடிக்கொண்டிருந்ததற்குப் பதிலளித்த இயேசு, தங்களுள் முதல்வராக இருக்க விரும்புகிறவர் தங்களில் கடைசியானவராகவும் தொண்டராகவும் இருக்கட்டும் என்று கூறினார் எனவும், இயேசுவுக்கும் அவரது சீடர்களுக்கும் இடையே மிக அகலமான இடைவெளி இருந்தது, இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் இயேசுவும் அவரது சீடர்களும் இருவேறு சிந்தனை ஓட்டத்தில் இருந்தனர் எனவும் கூறினார் திருத்தந்தை.
கடவுளது மாறாத நியதி எப்பொழுதும் நம்முடையதைவிட வேறுபட்டது எனவும் கூறிய திருத்தந்தை, கடவுளது எண்ணங்கள் நம் எண்ணங்கள் அல்ல, கடவுளுடைய வழிகள் நம் வழிகள் அல்ல என்ற எசாயா இறைவாக்கினரின் வார்த்தைகளையும் திருப்பயணிகளுக்கு நினைவுபடுத்தினார்.
எனவே நம் ஆண்டவரைப் பின்செல்லுவதற்கு, ஒவ்வொரு மனிதரின் எண்ணங்களிலும் வாழும் முறையிலும் மாற்றம் கொண்டுவரும் ஓர் ஆழமான மனமாற்றம் தேவைப்படுகின்றது, இதற்கு நமது இதயங்கள் ஒளிபெற்று உள்ளூர மாற்றம் பெறுவதற்கு அவற்றைத் திறந்து வைக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.
இதற்கு அன்னைமரியாவின் உதவியைக் கேட்போம் எனத் தனது மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இவ்வுரையின் இறுதியில் மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியும், மதங்களிடையே அமைதிக்கான உரையாடலும் இடம்பெறவும், அப்பகுதி கிறிஸ்தவர்களுக்காகவும் செபிக்குமாறும் திருப்பயணிகளிடம் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.