2012-09-22 15:24:47

திருப்பீடப் பேச்சாளர் : லெபனனிலிருந்து மீண்டும் தொடங்குவோம்


செப்.22,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அண்மையில் மேற்கொண்ட லெபனன் திருப்பயணத்தின்போது கருத்துவேறுபாடுகளைக் கொண்ட செய்திகள் மிகக் குறைவாகவே வெளியானது, ஊடகத்துறையினர் பொறுப்புடன் நடந்து கொண்டதைக் காட்டுகின்றது என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
சில வேளைகளில் கடும் மோதல்களும் கிளர்ச்சிகளும் இடம்பெறும் ஒரு பகுதியில் தயக்கமின்றி உறுதியுடன் மேய்ப்புப்பணிப் பயணம் மேற்கொண்ட இறைவாக்கினரின் மறைப்பணி அப்பகுதியில் அமைதியைப் பற்றிப் பேசியது என்றுரைத்த அருள்தந்தை லொம்பார்தி, இந்த இறைவாக்கினரின் செய்தி வல்லமை கொண்டதாய் இருந்தது என்று கூறினார்.
லெபனனைச் சுற்றியுள்ள ஏறத்தாழ எல்லாப் பகுதிகளும் அதிகாரத்தையும் ஆயுதங்களையும் சார்ந்து வெறுப்புணர்வை இரக்கமற்று ஊக்குவித்து வரும்வேளை, திருத்தந்தையின் வார்த்தைகள், உரையாடல், ஒருவர் ஒருவரை மதித்தல், ஒப்புரவு ஆகியவற்றுக்கு அழைப்பு விடுப்பதாக இருந்தது என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
வருங்கால அமைதியை ஒன்றிணைந்து கட்டியெழுப்புங்கள் என்று பல்வேறு சமயங்களைச் சார்ந்த இளையோரிடம் திருத்தந்தை வலியுறுத்தியதையும் குறிப்பிட்ட அவர், லெபனனில் முஸ்லீம் தலைவர்கள் அளித்த வரவேற்பு திருத்தந்தைக்கு ஊக்கமூட்டுவதாய் இருந்தது எனவும் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.