2012-09-22 15:30:13

செப்டம்பர் 23, பொதுக்காலம் - 25ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 இந்த வார நற்செய்தியில் வரும் ஓர் இறைச்சொற்றொடரை மையமாக வைத்து நம் ஞாயிறு சிந்தனையை ஆரம்பிப்போம்.
மாற்கு நற்செய்தி 9/36-37
“பிறகு இயேசு ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, ' இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.”

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் கன்னியர்கள் நடத்தும் ஒரு பள்ளியில் ஆண்டுவிழா நிகழ்ச்சிகளைக் காணச் சென்றிருந்தேன். LKG மழலைகள் மேடையில் ஏறினார்கள், அழகான ஒரு நடனம். “நான் காலையில் எழுவேன், பல் துலக்குவேன், சாப்பிடுவேன்...” என்று அன்றாட நிகழ்வுகளின் அட்டவணையைச் சொல்லும் ஒரு பாடல். அதற்கு ஏற்ற சைகைகள். பல் துலக்குவேன் என்று அந்தக் குழந்தைகள் பாடிய போது, எல்லா குழந்தைகளும் வலது கை கொண்டு பல் தேய்த்தனர். அனால் ஒரு குழந்தை மட்டும் இடது கையால் பல் தேய்த்தாள். அருகிலிருந்த அருள் சகோதரியிடம் அதைச் சுட்டிக்காட்டினேன். அவர் அப்போது சொன்ன ஒரு தகவல் என்னை அதிகம் சிந்திக்க வைத்தது.
LKG குழந்தைகளுக்கு சைகைகளுடன் பாடல்களைச் சொல்லித்தரும் ஆசிரியர்கள் குழந்தைகளின் கண்ணாடி பிரதிபலிப்பாக இருக்கவேண்டும். அதாவது, குழந்தை ஒரு செய்கையை வலது கையால் செய்யவேண்டும் என்றால், ஆசிரியர் அதை இடது கையால் செய்யவேண்டும். அதைப் பார்க்கும் குழந்தை சரியான சைகைகளைக் கற்றுக்கொள்ளும். அன்பர்களே, சிந்திப்போம். நமது கண்ணாடி பிரதிபலிப்புகள் குழந்தைகள். நாம் சொல்வதை, செய்வதை பிரதிபலிப்பவர்கள். கண்ணாடி சிதைந்தால், அதில் தோன்றும் பிரதிபலிப்பும், பிம்பமும் சிதையும்.

நம் இல்லங்களில் அடிக்கடி நடக்கும் பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. இதை ஒரு நிகழ்வு என்று சொல்வதற்குப் பதில், ஓர் எச்சரிக்கை என்றும் சொல்லலாம். வீட்டிற்கு வந்திருந்த விருந்தாளிகளை உபசரித்துக்கொண்டிருந்தார் ஒரு வீட்டுத் தலைவி. நான்கு அல்லது ஐந்து வயதான அவரது மகள் உதவி செய்துகொண்டிருந்தாள். வெளியில் வந்து உபசரிக்கும்போது சிரித்துக்கொண்டிருந்த தலைவி, சமையலறைக்குள் போனதும் விருந்தாளிகளைப் பற்றி முணுமுணுத்தார். குழந்தையின் காதுபடவே இந்த முணுமுணுப்புக்கள் இருந்தன. விருந்து நேரம் வந்ததும், அப்பா மகளிடம், "சாப்பாட்டுக்கு முன்னால் செபம் சொல்லும்மா." என்றார். "என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியாதே." என்றாள் மகள். "அம்மா எப்படி செபம் சொல்வாங்களோ அப்படி சொல்லும்மா." என்றார். உடனே, மகள் கண்களை மூடி, "கடவுளே, இந்த விருந்தாளிகள் எல்லாம் ஏன் இன்னக்கி பாத்து வந்து என் உயிரை எடுக்குறாங்களோ தெரியலியே." என்று செபித்தாள். குழந்தைகளுக்கு முன் நாம் சொல்வதும், செய்வதும் சரியான முறையில் இல்லாவிட்டால், இது போன்ற சங்கடங்கள் ஏற்படலாம்.

இன்னொரு சம்பவம். ஒரு வீட்டுத்தலைவி வீட்டிற்கு வந்திருந்த தோழியிடம் பேசிக்கொண்டிருக்கிறாள். அருகில் TV ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் ஒரு பிரபலமான நடிகை கவர்ச்சிகரமாக ஆடிக் கொண்டிருக்கிறாள். தலைவி தன் தோழியிடம், "என் மகளும் இப்படி ஆடுவா." என்று கூறுகிறாள். அந்நேரம், அங்கு வருகிறாள் அந்த LKG படிக்கும் குழந்தை. ஆர்வமாய் அம்மாவிடம் போய், "அம்மா, இன்னைக்கி ஸ்கூல்ல ஒரு புது Rhyme சொல்லித் தந்தாங்க." என்று சொல்லி, அந்த ‘ரைமை’ச் சைகையோடு செய்து காட்டுகிறாள். அம்மாவும், தோழியும் பாராட்டுகின்றனர். பிறகு, அம்மா மகளிடம், TVயில் ஆடும் நடிகையைக் காட்டி, அவரைப் போல ஆடச் சொல்கிறார். மகளோ, "சினிமா டான்ஸ் வேண்டாம்மா. இன்னொரு ‘ரைம்’ சொல்கிறேன்." என்கிறாள். அம்மாவுக்கு கோபம். தன் தோழிக்கு முன்னால் மகள் சினிமா டான்ஸ் ஆடவில்லை என்கிற வருத்தம். "ரைம் எல்லாம் ஒன்னும் வேணாம். இந்த டான்ஸ் ஆடு." என்று மீண்டும் வற்புறுத்துகிறாள். குழந்தைகளை அவர்கள் உலகத்தில் வளர்ப்பதற்கு பதில் நம் உலகத்திற்கு பலவந்தமாக இழுத்து வரும் முயற்சி இது.

அன்பர்களே, நாம் காணும் சில தொலைக்காட்சிகளில், முக்கியமாக, சிரிப்பு என்ற பெயரில் காட்டப்படும் தொலைக்காட்சிகளில், ஒரு சிறுவனோ, சிறுமியோ வந்து, அவர்கள் வயதுக்கு மீறிய கருத்துக்களைச் சொல்வதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் சொல்லும் சிரிப்புகள் அவர்களுக்குப் புரியுமோ என்னவோ தெரியாது. ஆனால் கேட்கும் ரசிகர்கள் சிரிப்பார்கள். ஒருவேளை, தன் மகனோ, மகளோ தொலைக்காட்சியில் தோன்றவேண்டும் என்பதற்காக, பெற்றோர் இந்த வசனங்களை எழுதி, அவர்களை மனப்பாடம் செய்யச் சொல்லி அங்கே சொல்ல வைப்பார்களோ? பாவம். இதெல்லாம் குழந்தைகளைச் சித்திரவதைக்கு உள்ளாக்கும் வழிகள்.

இன்றைய நற்செய்தியில் இயேசு ஒரு குழந்தையை சீடர்கள் நடுவில் நிறுத்திப் பேசுகிறார். ஏன்? பின்னணியைப் பாப்போம். சென்ற வாரம் இயேசு சீடர்களிடம் இரு முக்கிய கேள்விகளைக் கேட்டார். மக்கள் என்னை யாரென்று சொல்கிறார்கள்? நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்? என்ற இரு முக்கியமான கேள்விகள். இக்கேள்விகள் சீடர்கள் மத்தியில் ஒரு தேடலை ஆரம்பித்து வைத்திருக்கும்.
தன் கேள்விகளுக்குச் சரியான விடையளித்த பேதுருவை இயேசு புகழ்ந்தார். "மெசியா" என்ற ஒரு பட்டத்தை பேதுரு தனக்கு அளித்ததால், இயேசு பெருமிதம் கொண்டு பேதுருவைப் புகழவில்லை. மாறாக, அந்தப் பட்டத்தின் பின்னணியில் இருக்கும் துன்பம், சிலுவை இவைபற்றி பேசினார். இயேசுவின் இந்தப் பேச்சு, பேதுருவையும், சீடர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எனவே, பேதுரு அவரைத் தனியே அழைத்து, அறிவுரை தந்தார்.
தன்னைப் பற்றியும், தன் வாழ்வின் இலக்கு பற்றியும் இயேசு தெளிவாக இருந்ததால், தன்னைத் திசைதிருப்ப முயன்ற பேதுருவை இயேசு கோபமாகக் கடிந்துகொண்டார். சீடர்களிடம் மீண்டும் தன் சிலுவையைப் பற்றி ஆணித்தரமாகப் பேசுகிறார். சீடர்கள் இதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்களுக்கு விளங்கவில்லை என்று மாற்கு நற்செய்தி இன்று கூறுகிறது.

இயேசுவின் பாடுகள் அவர்களுக்கு விளங்காமல் போனதற்கு ஒரு காரணம் - அவர்கள் வேறு திசைகளில் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். தங்களில் யார் பெரியவன்? என்பது அவர்களுக்கு இப்போது முக்கியம். இயேசு அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை ஓரளவு கேட்டார். அவருக்கு அதிர்ச்சி. தான் இவ்வளவு சொல்லியும் இவர்களின் எண்ண ஓட்டம் இப்படி இருக்கிறதே என்ற அதிர்ச்சி. மற்றொரு பக்கம் ஒரு நெருடல். ஒருவேளை அவர்கள் பேசிக்கொண்டதை சரியாகக் கேட்காமல், அவர்களைத் தவறாக எடை போட்டுவிடக் கூடாது என்று நினைத்து, "வழியில் என்ன பேசினீர்கள்?" என்று கேட்கிறார். பதில் வரவில்லை. எப்படி வரும்? அவர்கள் பேசிக் கொண்டதெல்லாம் இயேசுவின் எண்ணங்களுக்கு முற்றிலும் மாறுபட்டதாயிற்றே. தாங்கள் பேசியதை அவரிடம் சொல்ல முடியவில்லை.

தன் சீடர்களின் எண்ண ஓட்டங்களை ஓரளவு உணர்ந்த இயேசு அவர்களுக்கு ஒரு சவாலை முன்வைக்கிறார்: “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்.” இந்தக் கருத்தை வலியுறுத்தவே, ஒரு குழந்தையை அவர்கள் நடுவில் நிறுத்துகிறார். குழந்தைகளைப் போல் மாறாவிடில் விண்ணரசில் நுழையமுடியாது என ஏற்கனவே அவர்களுக்குச் சொல்லியிருந்தார். இப்போது மீண்டும் அந்தச் சிந்தனையை மற்றொரு வழியில் வலியுறுத்துகிறார்.
குழந்தைகளை குழந்தைகளாகவே ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை உங்களைப் போல் மாற்றாதீர்கள், முடிந்த அளவு, நீங்கள் குழந்தைகளாக மாறுங்கள் என்று இயேசு சொல்லாமல் சொல்கிறார்.

"எந்த ஒரு குழந்தையும் பிறக்கும்போது இரு இறக்கைகளுடன் வானத்தூதராய்ப் பிறக்கிறது. அனால், கால்கள் வளர, வளர, இறக்கைகள் குறைந்து, மறைந்துவிடுகின்றன." என்பது பிரெஞ்சு மொழியில் ஓர் அறிஞர் சொன்ன அழகான வார்த்தைகள். கால்கள் மட்டுமல்ல, குழந்தைகளின் எண்ணங்கள், கருத்துக்களெல்லாம் வளரும்போது, வானத்தூதருக்கான இறக்கைகள் மறைந்துவிடுகின்றன. மறைந்துவிடுகின்றன என்று சொல்வதற்குப் பதில், அவை வெட்டப்படுகின்றன என்று சொல்வது பொருந்தும். குழந்தைகளின் இறக்கைகளை சிறிது, சிறிதாக வெட்டுவது பெரியவர்களின் செயல்கள். குழந்தைகளின் வளர்ச்சிக்காக இதை நாம் செய்வதாகச் சொல்கிறோம்.

அன்பர்களே, குழந்தைகளைப்பற்றி பேசும்போது, மற்றொரு ஆழமான துயரம் நம் மனதை ஆக்ரமிக்கிறது. உலகின் பல நாடுகளில் அன்றாடம் வருந்தி உழைக்கும் குழந்தைத் தொழிலாளர்களை இறைவனின் சன்னதியில் நினைத்துப் பார்க்கவேண்டும். மனிதச் சமுதாயம் ஒரு குடும்பமாகச் செய்துவரும் பல தவறுகளில் மிகப் பெரும் தவறு இது. தங்கள் உழைப்பால், குழந்தைகளைச் சுகமாக வளர்க்கவேண்டியது பெரியவர்களின் கடமை. ஆனால், நடைமுறையில் நாம் காண்பது என்ன? குழந்தைகளின் உழைப்பை உறுஞ்சி, பெரியவர்கள் சுகம் காண்கின்றனர். இது பெரும் குற்றம்.
குழந்தைகளை நம் மத்தியில் நிறுத்தி இயேசு சொல்லித்தரும் பாடங்களைப் பயில முயல்வோம். குழந்தைகளைக் குழந்தைகளாகவே ஏற்றுக் கொள்வோம். அவர்களை நம்மைப்போல் மாற்றாமல், முடிந்த அளவு, நாம் குழந்தைகளாக மாறுவோம். இறையரசை அடைய இது உறுதியான வழி. குடும்பங்கள், பள்ளிகள், சமுதாயம், ஊடகம் என்று பல பக்கங்களிலிருந்தும் குழந்தைகளுக்கு வரும் ஆபத்துக்களிலிருந்து குழந்தைகளைக் காக்கும் கனிவையும், உறுதியையும் நாம் ஒவ்வோவரும் பெறவேண்டுமென்று மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.