2012-09-21 15:26:34

தெய்வநிந்தனைக்கு எதிராக அனைத்துலக அளவில் கொள்கை ஒன்று வகுக்கப்பட மாரனைட் முதுபெரும் தலைவர் பரிந்துரை


செப்.21,2012. மதங்களை அவமதிக்கும் நடவடிக்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் நிறுவனம் கொள்கை ஒன்றை வகுக்குமாறு லெபனன் மாரனைட்ரீதி கத்தோலிக்க முதுபெரும் தலைவர் Bechara Rai பரிந்துரைத்துள்ளார்.
இசுலாமைக் கேலி செய்யும் “The Innocence of Muslims” என்ற திரைப்படத்துக்கு எதிராகப் பேசிய முதுபெரும் தலைவர் Rai, இந்தத் திரைப்படம் இசுலாமை மட்டுமல்ல, எல்லா மதத்தவருக்கும் எதிரான செயலாக இருக்கின்றது என்றும், மத நம்பிக்கைகள் கேலிசெய்யப்படுவதிலிருந்து காக்கப்பட வேணடும் என்றும் கூறினார்.
கிறிஸ்தவ நம்பிக்கைகளும் அடிக்கடிப் பொதுவில் தாக்கப்படுகின்றன என்றுரைத்த லெபனன் முதுபெரும் தலைவர் Rai, இத்தகைய தெய்வநிந்தனைத் தாக்குதல்களைத் தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுப்பதில் ஐ.நா. முன்னின்று செயல்படுமாறு கேட்டுக் கொண்டார்.
உலகின் அமைதி, கடவுளையும் அனைத்து மதங்களையும் மதிப்பதை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இவ்விவகாரத்தில் ஐ.நா. நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார் முதுபெரும் தலைவர் Rai.
மேலும், இறைவாக்கினர்கள் போன்ற மனிதர்கள், மதங்களின் அடையாளங்கள், புனித நூல்கள் போன்றவற்றைத் திட்டமிட்டு அவமதிக்கும் மற்றும் கேலிசெய்யும் நடவடிக்கைகளைத் தடைசெய்வதற்கு அனைத்துலக அளவில் ஒரு விதிமுறை தேவை என்பதை வலியுறுத்தி வட ஆப்ரிக்காவின் நான்கு ஆங்லிக்கன் ஆயர்கள் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூனுக்குத் திறந்த கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.