2012-09-21 15:22:35

கர்தினால் பால்தெல்லியின் இறப்புக்குத் திருத்தந்தை இரங்கல்


செப்.21,2012. கர்தினால் Fortunato Baldelli இறந்ததையொட்டி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை அக்கர்தினாலின் சகோதரர் Piero Baldelliக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இறந்த Fortunato Baldelliன் கிறிஸ்தவ மற்றும் குருத்துவ வாழ்வு எப்பொழுதும் மற்றவருக்கு எடுத்துக்காட்டாக இருந்தது என்றும், திருப்பீடத்திலும் சிறப்பாக, பல்வேறு தூதரகங்களிலும் இவர் ஆற்றியுள்ள பணி குறிப்பிடும்படியானது என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இக்கர்தினாலின் ஆன்மா நிறைசாந்தி அடையத் தான் செபிப்பதாகவும் கூறியுள்ளார்.
இவ்வியாழன் மாலை உரோமையில் இறந்த 77 வயதாகும் இத்தாலியக் கர்தினால் Fortunato Baldelli, திருப்பீடப் பாவக்கழுவாய்த் துறையில் தலைவராகப் பணியாற்றியவர். கியூபா, எகிப்து போன்ற நாடுகளின் திருப்பீடத் தூதரகங்களில் பணியாற்றிய இவர், பிரான்ஸ், தொமினிக்கன் குடியரசு, பெரு போன்ற நாடுகளின் திருப்பீடத் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.
கர்தினால் Fortunato Baldelliவின் இறப்போடு திருஅவையில் மொத்தக் கர்தினால்களின் எண்ணிக்கை 205 ஆகவும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 117 ஆகவும் மாறியது.







All the contents on this site are copyrighted ©.