2012-09-20 16:42:50

பேராயர் மம்பர்த்தி : அணுத்தொழில்நுட்பம் பொதுமக்களின் நலவாழ்வுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்


செப்.20,2012. உலகில் அணுஆயுதங்கள் ஒழிக்கப்பட வேண்டும் மற்றும் மனிதரின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்துக்கும் அமைதிக்கான நோக்கங்களுக்கும் அணுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதற்கு பன்னாட்டு அளவில் ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்று பேராயர் தொமினிக் மம்பர்த்தி கூறினார்.
ஆஸ்ட்ரியாவின் வியன்னாவில் நடைபெற்றுவரும் 56வது அனைத்துலக அணுசக்தி கருத்தரங்கில் உரையாற்றிய, நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் மம்பர்த்தி, புற்றுநோய்க்குக் கொடுக்கப்படும் கதிரியக்கச் சிகிச்சை வளரும் நாடுகளிலுள்ள பாதிக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு கிடைக்கவில்லை என்று கூறினார்.
புற்றுநோய்ச் சிகிச்சைகளில் கதிரியக்கச் சிகிச்சை முக்கியமான ஒன்றாக இருக்கின்றது என்றும், வளரும் நாடுகளில் தகுந்த மருத்துவக் கருவிகள் மற்றும் போதுமான பயிற்சி பெற்றவர்கள் இல்லாததால் இந்தக் கதிரியக்கச் சிகிச்சையைப் பாதிக்கும் மேற்பட்ட நோயாளிகள் பெற முடியவில்லை என்றும் பேராயர் கூறினார்.
வாழ்வைப் பாதுகாப்பதற்கு ஓர் அணுத் தொழில்நுட்பமும், மரணத்திற்கு ஓர் அணுத் தொழில்நுட்பமும் இருக்கின்றது என்றுரைத்த பேராயர், மனிதரின் நலவாழ்வுக்கு உதவும் அணுத்தொழில்நுட்பம் முதலில் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இன்று உலகில் ஒருபக்கம் அணுஆயுதக் களைவும், மற்றுமொருபக்கம் அணுஆயுதங்களை நவீனப்படுத்துதலும் இடம்பெற்று வருகின்றது என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், அணுப் பரிசோதனை தடைசெய்யப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.