2012-09-20 16:46:02

புதிய அமெரிக்கத் தூதுவருடன் யாழ் ஆயர் சந்திப்பு


செப்.20,2012. இலங்கையின் தேசியப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுமாறு அரசுக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்ற போதிலும் அதற்கானத் தீர்வுகள் இன்னமும் எட்டப்படவில்லை என்று இலங்கைக்கானப் புதிய அமெரிக்கத் தூதுவர் மைக்கேல் ஜே. சிசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கானப் புதிய அமெரிக்கத் தூதுவர், யாழ்.ஆயர் இல்லத்தில் ஆயர் தாமஸ் சௌந்தரநாயகம் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடியபோது, கவலைக்கு மத்தியில் வாழும் யாழ். மாவட்ட மக்களுக்கு அதிகளவிலான தேவைகள் இருப்பதை உணர்ந்துள்ள யாம், அவற்றை நிறைவான விதத்தில் பெற்றுக்கொடுக்க உதவுவோம் என்றும் குறிப்பிட்டார்.
அரசியல் தீர்வை நோக்கி நகர அரசுக்கு அதிக அழுத்தங்கள் கொடுக்குமாறும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்த வலியுறுத்துமாறும் அமெரிக்கத் தூதரிடம் யாழ்.ஆயர் இச்சந்திப்பின்போது வேண்டுகோள் விடுத்தார்.
யாழ்ப்பாணத்திற்கு வந்து செல்லும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அரசுக்குப் பாரிய அழுத்தங்கள் எவற்றையும் வழங்குவதில்லை என யாழ்.ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் புதிய அமெரிக்கத் தூதுவர் மைக்கேல் ஜே. சிசனிடம் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தினராலும் புலனாய்வாளர்களாலும் அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளதால் அவர்கள் இயல்பு வாழ்க்கையில் இணைவது கடினமாக உள்ளது எனக் கவலையை வெளியிட்ட ஆயர், சிறைகளில் தடுத்து வைத்திருப்போரது பெயர் விபரங்கள்கூட இன்னமும் வெளியிடப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.








All the contents on this site are copyrighted ©.