2012-09-19 15:50:19

விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின் புதிய தலைவர் : திருஅவையில் ஒற்றுமை அவசியம்


செப்.19,2012. பழமைவிரும்பிகளுக்கும் முற்போக்குவாதிகளுக்கும் இடையே வளர்ந்துவரும் கருத்து முரண்பாடு திருஅவையின் ஒன்றிப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது மற்றும் இது திருஅவையின் உறுப்பினர்கள் மத்தியில் கடும் பதட்டநிலைகளை உருவாக்கி வருகிறது என்று திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின் புதிய தலைவர் பேராயர் Gerhard Ludwig Müller கூறினார்.
திருஅவை மேற்கொள்ளவேண்டிய மிக முக்கிய சவால்களில் ஒன்றாக இதனைத் தான் பார்ப்பதாக, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்ட பேராயர் Müller, திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயம் எதிர்கொள்ளும் இன்னல்நிறைந்த விவகாரங்கள் குறித்தும் குறிப்பிட்டார்.
திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்துக்கு எதிராகப் பல முற்சார்பு எண்ணங்கள் நிலவுகின்றன, ஆயினும் இவை உண்மைநிலையோடு மிகச் சிறிதளவே தொடர்புடையவை என்றுரைத்த பேராயர், இப்பேராயத்தில் ஏற்கனவே ஐந்தாண்டுகள் உறுப்பினராக இருந்த அனுபவம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
வருகிற அக்டோபரில் உலக ஆயர் மாமன்றமும் விசுவாச ஆண்டும் தொடங்கவிருக்கின்றது, திருஅவையின் வாழ்வுக்குத் தொல்லைதரும் கூறுகளை அறிந்து அவை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறிய பேராயர், திருஅவைக்கும் தனிப்பட்ட நாடுகளுக்கும் இடையே புதிய மற்றும் அடிப்படையான ஒன்றிப்பு வளர்வதற்கு ஆவன செய்ய வேண்டுமென்றும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.