2012-09-19 15:48:46

கொலம்பியாவில் பழங்குடி மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பதில் கவனம் செலுத்த திருத்தந்தை வலியுறுத்தல்


செப்.19,2012. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் பழங்குடி மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பதில் மிகுந்த கவனம் செலுத்துமாறு அந்நாட்டுத் தலத்திருஅவையை வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
“கொலம்பியாவில் பழங்குடி மக்களின் நிலைமை” என்ற தலைப்பில் கொலம்பியத் திருஅவையின் அருள்பணியாளர்கள் மற்றும் கத்தோலிக்க விசுவாசிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ள திருத்தந்தை, பழங்குடி மக்களை அணுகும் முறைகள் மறுபரிசீலனை செய்யப்படுமாறும் கேட்டுள்ளார்.
பழங்குடி மக்களின் மரபுகள் மற்றும் அவர்கள் வாழும் சூழல்களில் அவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டு அச்சூழல்களில் அவர்கள் நற்செய்தியைப் புரிந்துகொள்ளுமாறு செய்ய வேண்டியது இன்றியமையாதது என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அட்லிமினா சந்திப்பை இம்மாதம் முதல் தேதியன்று தொடங்கிய கொலம்பியா ஆயர்கள் இத்திங்களன்று அதனை முடித்தனர்.
கொலம்பியாவிலுள்ள 85 பழங்குடி இனக் குழுக்களில் ஏறக்குறைய 14 இலட்சம் மக்கள் உள்ளனர். இவர்கள் அந்நாட்டின் மக்கள் தொகையில் 3.4 விழுக்காடு என்று 2005ம் ஆண்டின் கணக்கெடுப்பு கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.