2012-09-18 15:11:17

விவிலியத் தேடல் - திருப்பாடல் 137


செப்.18,2012. எனது பள்ளிப்பருவத்தில் கோடைவிடுமுறையை உறவினர்கள் வீட்டிற்குச் சென்று கழிப்பது வழக்கம். ஆனால் 10ம் வகுப்பு முடிந்துவந்த கோடைவிடுமுறையில் ஊருக்குச் செல்ல வேண்டாம். அதற்கு பதிலாக எதாவது வேலைக்குச் செல்லலாம். அதன் வழியாக கிடைக்கும் பணம் 11ம் வகுப்பு கல்விச் செலவுக்கு ஆகும் என நினைத்து ஒரு படுக்கை விரிப்பு துணியகத்தில் (Textiles) வேலைக்குச் சேர்ந்தேன். முதல் 10 நாட்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் எளிதாகச் செல்வதாகத்தான் உணர்ந்தேன். அதற்கு பிறகு வேலைப்பளுவும், வேலைநேரமும் அதிகமாகியது. காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை என்று இருந்த வேலை, மாலை 9 மணி வரைகூட நீடித்தது. இந்த, இந்த வேலைகளை எல்லாம் முடித்துவிட்டுத்தான் செல்லவேண்டும் என மேலாளர் உத்தரவிட ஆரம்பித்தார். இதனால், இப்படி வேலைக்கு வராமல் ஊருக்குச் சென்றிருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம் என்ற கவலையும், கடினமாக வேலை வாங்கும் மேலாளரை கொடுமைக்காரராக பார்த்ததும், எப்படா இரண்டு மாதங்கள் முடியும், மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம் என்ற எண்ணமும் என்னைப் பற்றிக்கொண்டன. இதே போன்று இஸ்ரயேல் மக்கள் அனுபவித்த கவலையையும், ஏக்கத்தையும், அங்கலாப்பையும் வெள்ளிப்படுதுவதுதான் நாம் இன்று சிந்திக்கும் திருப்பாடல் 137.
ஆம் அன்பார்ந்தவர்களே! By the rivers of Babylon என்ற மிகவும் பிரபலமான பாடலைத்தான் நாம் இன்றைய விவிலியத் தேடலில் சிந்திக்கிறோம். பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் தங்கள் அடிமைநிலையையும், அங்கு அவர்கள் அனுபவித்தத் துன்பங்களையும், இதே வேளையில், எருசலேமில் இருந்திருந்தால் எப்படி இருந்திருப்போம் என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்து, வருந்தி, விடுதலை அடைய விரும்பி, அதற்காக யாவே இறைவனிடம் செபித்த பாடல் இது. பாபிலோனியர்களால் அவர்கள் அடைந்த இகழ்ச்சியையும், அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலையும் இப்பாடல் பிரதிபலிக்கிறது. இப்பாடலின் பொருளை நாம் சரியாக புரிந்துகொள்ளவேண்டுமானால் அதன் பின்புலத்தையும், சூழலையும் அறிந்து கொள்வது மிக அவசியம். சொற்றொடர்கள் 1-3
பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம்.
அங்கிருந்த அலரிச் செடிகள் மீது, எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம்.
ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்; எங்களைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர். 'சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்' என்றனர்.
பாபிலோன் நகர் யூப்ரதிஸ், டைக்ரிஸ் என்ற இரு முக்கிய நதிகளையும் சபோரஸ் (Chaboras), உலை (Ulai) போன்ற சிறு நதிகளும் கொண்டது. இந்நதிகளிலிருந்து நகர் முழுவதும் தண்ணீர் செல்லுமாறு கால்வாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. எனவே நகர் முழுவதும், ஆறும், ஆற்றங்கரையும் இருப்பது போன்ற அழகான நகராக இருந்தது. இந்த ஆற்றங்கரையில் பொருட்களைக் கப்பலிலிருந்து ஏற்ற, இறக்க இஸ்ரயேலர்கள் அமர்த்தப்பட்டனர். ஓய்வு நேரங்களில் அல்லது வேலை இல்லாத நேரங்களில் பாபிலோனியர்கள் இவர்களைப் பாடுமாறும், ஆடுமாறும் கேட்டிருப்பார்கள் அல்லது கட்டாயப்படுத்தியிருக்கக்கூடும் என விவிலிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில் இஸ்ரயேல் மக்கள் யாவே இறைவனை நோக்கிய வழிபாட்டிலும், பாடல், இசை, நடனம் போன்றவற்றிக்கும் பேர்போனவர்கள். இத்துடன் கூடிய மற்றொரு கருத்தையும் முன் வைக்கிறார்கள். கால்வாய் ஓரங்களில் இஸ்ரயேல் மக்கள் அமர்ந்திருந்தபோது, தாங்கள் அடிமைகளாக பாபிலோனியர்களிடம் படும் துன்பங்களை நினைத்து வருந்தியிருக்கக் கூடும். எருசலேமில் உரிமைக் குடிமக்களாக இருந்த நாம், இப்போது இவர்களுக்கு அடிமைகளாக இருக்கிறோமே, யாவே இறைவன் கட்டளைகளுக்கு மட்டும் அடிபணிந்த நாம், இப்போது இவர்களுடைய கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டிய சூழல் வந்து விட்டதே என வருந்தினார்கள்.
வேலைகளையெல்லாம் முடித்து பாபிலோனியர்கள் தங்களை எவ்வளவு மோசமாக நடத்தினார்கள், என்னவெல்லாம் செய்யக் கட்டளையிட்டார்கள் என்று இஸ்ரயேல் மக்கள் தங்களது அனுபவங்களை ஒருவர் ஒருவரோடு பகிர்ந்து கொண்ட இடமாகவும் பாபிலோனிய ஆற்றங்கரை இருந்திருக்க வாய்ப்பு உண்டு.
ஆற்றங்கரை என்பதே அழகான காட்சிதான். எவ்வளவு சோகம் நிறைந்திருந்தாலும் நம் மனதுக்கு இதத்தையும், ஆறுதலையும் தரக்கூடிய அழகும், இரம்மியமும் ஆற்றங்கரைக்கே உண்டு. இந்த அழகான காட்சியைப் பார்க்கும்போதெல்லாம் இஸ்ரயேலர்களின் மனது ஆறுதலடைந்ததைவிட வருத்தத்துக்குள்ளானது. ஏனெனில் இவ்வழகிய காட்சி அவர்களின் உன்னத நகரை, யாவே இறைவனின் வாழ்விடமான எருசலேமை நினைவுபடுத்தியது. ஆற்றங்கரைக் காட்சிகள் எருசலேமின் அழகையும், வனப்பையும் அவர்கள் அங்கு வாழ்ந்த, கொண்டாடிய திருவிழாக்களையும் கண்முன் கொண்டு வந்தன. இன்று அவற்றையெல்லாம் இழந்து நிற்கிறோமே என்ற வருத்தம் மட்டுமே அவர்கள் நெஞ்சை நிரப்பி இருந்தது.
ஆற்று நீரின் ஈரத்தை சுமந்து வரும் சிலு, சிலு தென்றல் காற்று, ஆற்றை சுற்றியுள்ள மரங்களிலிருக்கும் பறவைகளின் ரீங்காரமும் தியானத்திற்கு உகந்தது என்பது நம் அனுபவப்பாடம். தங்கள் அடிமைநிலையை நினைத்து வருந்தி, எருசலேமிற்குத் திரும்பவேண்டும் என்ற ஆசையை இறைவனிடம் எடுத்துச்சொல்லி செபிக்க ஓர் அருமையான இடமாக ஆற்றங்கரை இருந்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
அன்பு நேயர்களே! இதே போன்ற சூழலில் தான் நாமும் பல நேரங்களில் இருக்கிறோம். இதேச் சூழல் என்று சொல்லும்போது, நாடு கடத்தலைப்பற்றி சொல்லவில்லை. இப்படி வந்து மாட்டிக்கொண்டோமே, வேறு வழியே இல்லையே என வருத்தப்படும் சமயத்திலும், இந்த கஷ்டமெல்லாம் எப்போது நம்மை விட்டு நீங்கும் என்ற ஏக்கமும் நிறைந்த சூழல்கள் நம் வாழ்வில் இருந்ததில்லையா? இதற்காக நாடு கடத்தப்படிருக்க வேண்டும் என்றில்லையே? அப்போது நமக்கு வருகிற கோபம் இவ்வளவுதான் என்று சொல்ல முடியாது. அவ்வேளையில் அளவுக்கு அதிகமான கோபம்தான் வரும். பல்வேறு சாபங்களை விட்டிருப்போம். எனக்கும் நேரம் வரும் அப்போது பார்த்துகொள்கிறேன் என்று மனதிற்குள்ளேயே பொறுமியிருப்போம். இந்த பின்னணியில்தான் பின்வரும் சொற்றொடர்களை நாம் பார்க்க வேண்டும். சொற்றொடர்கள் 8-9.
பாழாக்கும் நகர் பாபிலோனே! நீ எங்களுக்குச் செய்தவற்றை உனக்கே திருப்பிச் செய்வோர் பேறுபெற்றோர்!
உன் குழந்தைகளைப் பிடித்து பாறையின்மேல் மோதி அடிப்போர் பேறுபெற்றோர்!
குழந்தைகளை விட்டுவைத்தால், அக்குழந்தைகள் வளர்ந்து, ஆளாகி, பழிவாங்குவார்கள் என்ற பயத்தாலேயே இச்சொற்றொடர்களில் சொல்லப்பட்டதுபோல, பாறையில் அடித்துக் கொன்றார்கள். இச்சொற்றொடர்கள் சகிப்புத்தன்மைக்கு எதிராக அமைந்துள்ளதாகத் தோன்றலாம். ஆனால் இவை எழுதப்பட்ட காலப் பிண்ணனியிலிருந்து சிந்திக்கவேண்டும். ‘கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல்’ என்ற மனநிலையில் வாழ்ந்தவர்களிடம் இதைத்தானே எதிர்பார்க்க முடியும். இதற்கு மாற்றாக அன்பை முன்வைத்ததாலேயே உலகம் இயேசுவை இன்னமும் வாழ்த்துகிறது, வணங்குகிறது. உலகையே ஆச்சரியப்படவைத்த இயேசுவின் புதியச் சட்டம் இதோ இங்கே.
மத்தேயு 5:38-41
'கண்ணுக்குக் கண்', 'பல்லுக்குப் பல்' என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.
ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள்.
எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள்.
இதைச் சொன்னதோடல்லாமல் வாழ்ந்தும்காட்டிய இயேசுவை ஆச்சரியத்தோடு பார்க்கிறோம். உண்மையிலேயே இவர் தெய்வம்தான் என சொல்கிறோம். எனவே 8 மற்றும் 9வது சொற்றொடர்களைச் சரி, அல்லது தவறு என்று பார்ப்பதைவிட தங்களுடைய உளவேட்கையான விடுதலைப் பெறவேண்டும், எருசலேமுக்குச் செல்லவேண்டும், அங்கு பாடவேண்டும், யாவே இறைவனை வழிபடவேண்டும் என்ற ஆசையைச் செபமாக எழுதுவதாகப் பார்ப்பதுதான் சரியானது.
எருசலேமைப்பற்றி நினைத்தாலே அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி உருவாகிறது. ஒரு வேளை நினையாவிடில் தங்கள் கை சூம்பிப்போகும் என்று சொல்கின்றனர். நினையாதது சாபம் என்று சொல்கிறார்கள். ஏனெனில் யாவே இறைவன் எருசலேம் ஆலயத்தில்தான் வாழ்கிறார். அவருடைய சந்நிதியில் வாழ்வதுதான் இஸ்ரேல் மக்களுக்கு பெருமை, மகிழ்ச்சி. அவர்களது உடல், பொருள், ஆவி அனைத்தும் எருசலேமில்தான் இருந்தது. எனவேதான் எருசலேமுக்குச் செல்லவேண்டும் என ஏங்கினார்கள்.
சொற்றொடர்கள் 5-6
எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப்போவதாக!
உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!
எருசலேம்மீது அவர்கள் கொண்டிருந்த பற்று நம் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய பாடம். நாம் சார்ந்திருக்கும் பங்கு ஆலயத்தை, தலத்திருச்சபையை ஏதோ குருக்களும், துறவிகளும்தான் வழிநடத்துகிறார்கள் என்று வெளியிலிருந்து விமர்சிக்காமல் நாம் அனைவரும் சேர்ந்துதான் திருச்சபையை உருவாக்குகிறோம், இயேசு விரும்பிய திருச்சபையைக் கட்டியெழுப்பவேண்டிய கடமையும், பொறுப்பும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளதென்ற நேர்மறையான எண்ணம்கொண்டு திருச்சபைப் பணியில் ஈடுபடவும் அறிவுறுத்துகிறது இப்பாடல்.
இயேசுவின் அடிச்சுவற்றில் திருத்தூதர்கள் அனைவரும் ஒரே திருச்சபையாகத்தான் வாழ்ந்தார்கள். ஆனால், இன்று பல்வேறு பிரிவினைகளாகப் பிரிந்து கிடப்பது வருத்தத்துக்குரியது. இப்பிரிவினைகள் மறைந்து, இயேசு விரும்பிய இறையாட்சி சமுதாயம் படைப்பது மனிதர்களாகப் பிறந்த நம் ஒவ்வொருவரின் கடமை. எனவே, அனைத்து கிறிஸ்தவ சபைகளின் ஒற்றுமைக்காகச் செபிப்போம். ஏனெனில் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே.







All the contents on this site are copyrighted ©.