2012-09-18 15:11:04

யாழ்ப்பாண ஆயர், ஐ.நா.பிரதிநிதிகள் சந்திப்பு


செப்.18,2012. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதாக இலங்கை அரசு உறுதியளித்துள்ளபோதிலும், அப்பரிந்துரைகள் நிறைவேற்றப்படவில்லை என யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சௌந்தரநாயகம் ஐ.நா.அதிகாரிகளிடம் கூறியிருப்பதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் அவையின் ஆசிய-பசிபிக், மத்திய கிழக்கு, வடக்கு ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளின் தலைவர் ஹன்னி மெகல்லியும், அந்த ஐ.நா.அவையின் சட்டம் மற்றும் சனநாயகம் சார்ந்த விவகாரங்கள் துறையின் ஆஸ்கர் செல்டர்ஸும் இத்திங்களன்று யாழ்ப்பாணம் சென்றபோது ஆயர் இல்லத்திற்கும் சென்று ஆயரோடும் கலந்துரையாடியுள்ளனர்.
இந்த ஐ.நா.பிரதிநிதிகளிடம் ஆயர் தாமஸ் இவ்வாறு புகார் சொன்னதாக அந்த ஊடகச் செய்தி மேலும் கூறுகிறது.
இலங்கையில் போர் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், அந்தப் போர் மூண்டதற்கான காரணத்தை அறிந்து அதற்குரிய அரசியல் தீர்வை முன்வைக்கவும் இலங்கை அரசு தவறியிருப்பதாகவும் ஆயர் தாமஸ், ஐநா அதிகாரிகளிடம் தெரிவித்தார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
போரினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வன்னிப்பகுதியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் திருப்திகரமாக மேற்கொள்ளப்படவில்லை என்றும், மீள்குடியேறியுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள் பல இடங்களில் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை என்றும் யாழ் ஆயர் ஐநா அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
யாழ் ஆயரைச் சந்தித்த பின்னர், அப்பகுதியில் போரினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள ஒரு பகுதி மக்களையும் ஐநா அதிகாரிகள் நேரடியாகச் சந்தித்து அவர்களது வாழ்க்கை நிலைமைகள் மற்றும் குறைநிறைகளைக் கேட்டறிந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.