2012-09-18 15:00:22

மும்பை கர்தினால் : முகமது குறித்த தெய்வநிந்தனை திரைப்படம் நியாயப்படுத்தப்பட முடியாத செயல்


செப்.18,2012. முகமது குறித்த தெய்வநிந்தனை திரைப்படம் நியாயப்படுத்தப்பட முடியாத செயல் எனினும், அச்செயலுக்கு எதிரான எதிர்ப்பை வன்முறை மூலமாக அல்ல, மாறாக, உரையாடல் மற்றும் அமைதி மூலமாக காட்ட வேண்டும் என இந்திய ஆயர் பேரவைத் தலைவர் மும்பை பேராயர் கர்தினால் Oswald GRACIAS கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெளியான இசுலாமைக் கேலி செய்யும் திரைப்படத்துக்கு எதிராக பல முஸ்லீம் நாடுகளில் கடும் எதிர்ப்புகளும் வன்முறைகளும் இடம்பெற்றுவரும்வேளை, இந்த எதிர்ப்புக்களில் சில இடங்களில் அப்பாவி மக்கள் காயமடைந்துள்ளதையும் இறந்துள்ளதையும் குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பேசிய கர்தினால் GRACIAS இவ்வாறு கூறினார்.
இந்தத் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்த கர்தினால் GRACIAS, ஊடகத்துறைக்குச் சுதந்திரம் இருக்கின்றது மற்றும் ஊடகத்துறையின் சுதந்திரத்தை நாம் மதிக்க வேண்டும், எனினும், அனைத்துச் சுதந்திரமும் பொறுப்பான விதத்தில் பயன்படுத்தப்பட வேண்டும், அடுத்தவருக்குப் புனிதமாக இருப்பதைக் கேலி செய்வதற்கும் அவமதிப்பதற்கும் ஊடகத்தைப் பயன்படுத்தப்படுவது தவறானது என்றும் மும்பை கர்தினால் கூறினார்.
மற்றவர்களை, சிறப்பாக மற்றவர்களின் மத நம்பிக்கையை மதித்துப் போற்ற நாம் பழக வேண்டும் என்ற அவர், ஒருபோதும் கடந்து செல்லக்கூடாத எல்லைகள் சில உள்ளன என்றும் கூறினார்.
'The Innocence of Muslims' என்ற அமெரிக்கத் திரைப்படத்தின் முன்னோட்டம் முகம்மது நபிகளைப் பெண்பித்தராகவும், மோசடிக்காரராகவும் காண்பித்ததால் உலகமெங்கும் அமெரிக்கத் தூதரகங்கள் முஸ்லீம்களால் தாக்கப்படுகின்றன. 14 நிமிடம் ஓடும் இந்தத் திரைப்பட முன்னோட்டத்தை பாகிஸ்தான், பங்களாதேஷ் உட்பட சில நாடுகள் தங்கள் இணையதளங்களில் தடை செய்துவிட்டன என்று செய்திகள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.