2012-09-18 15:14:04

புனித சவேரியாரின் திருப்பண்டம் ஆஸ்திரேலியாவை அடைந்துள்ளது


செப்.18,2012. 16ம் நூற்றாண்டு இயேசு சபை புனிதராகிய பிரான்சிஸ் சவேரியாரின் திருப்பண்டம் ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்துள்ளது.
செப்டம்பர் 16ம் தேதி இஞ்ஞாயிறன்று ஆஸ்திரேலியாவின் சிட்னியைச் சென்றடைந்துள்ள இத்திருப்பண்டம் குறித்துப் பேசிய சிட்னி உயர்மறைமாவட்ட துணை ஆயர் Peter Comensoli, ஆஸ்திரேலியக் கத்தோலிக்கர்கள் புனித சவேரியாரிடம் மிகுந்த பக்தி கொண்டவர்கள் எனக் கூறினார்.
உரோம் ஜேசு ஆலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் புனித பிரான்சிஸ் சவேரியாரின் வலது கையை, அவ்வாலயத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டுக்குப் பின்னர் சிட்னிக்குக் கொண்டு சென்றுள்ளார் ஆயர் Comensoli.
ஆப்ரிக்கா, இந்தியா மற்றும் தூர கிழக்கு நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்த இந்த இஸ்பானியப் புனிதரின் வலது கை, ஏறக்குறைய 400 ஆண்டுகளாக இயேசு சபையினரின் தாய் ஆலயமான உரோம் ஜேசு ஆலயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாலயத்தில்தான் புனித இலெயோலா இஞ்ஞாசியாரின் கல்லறையும் உள்ளது.
ஆஸ்திரேலியா மறைபரப்பு நாடாக இருந்த போது புனித குழந்தை தெரேசாவுடன், புனித பிரான்சிஸ் சவேரியாரும் அந்நாட்டின் இணைப் பாதுகாவலராக இருந்தார் என்றும் ஆயர் Peter Comensoli கூறினார்.
புனித பிரான்சிஸ் சவேரியாரின் திருப்பண்டம் மூன்று மாதங்களுக்கு ஆஸ்திரேலியாவின் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் எனச் சொல்லப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.