2012-09-17 16:01:51

வாரம் ஓர் அலசல் – விடியலுக்கு இல்லை தூரம்


செப்.17,2012. தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா?
உரிமையும் இழந்தோம் உடமையும் இழந்தோம், உணர்வை இழக்கலமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா?
அன்பு நெஞ்சங்களே, இந்தப் புகழ்பெற்ற திரைப்பட பாடல் வரிகள் இன்று பல நாடுகளில் பல சமூக ஆர்வலர்களின் குரல்களில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இம்மாதம் 10ம் தேதி முதல் 28ம் தேதி வரை சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமைகள் அவையின் 21வது அமர்விலும் உலகில் உரிமை இழந்து, உடமை இழந்து, மாண்பை இழந்து வாழும் அப்பாவி மக்களின் நிலைமை பற்றி பேசப்பட்டு வருகிறது. இலங்கையில், தமிழர்கள் நிலம் பறிபோய்க் கொண்டிருக்கிறது. நிலங்கள் சூறையாடப்படுகிறன. தன்னிறைவுடன் வாழ்ந்த தமிழர்கள், மற்றவர்களைச் சார்ந்து நிற்கும் இனமாக மாற்றப்படுகிறார்கள். எனவே பொங்கி எழு தமிழா! என்று பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை அழைப்பு விடுப்பதாக ஒரு செய்தி நிறுவனம் இத்திங்களன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கிடையே, இலங்கையில் மனித உரிமைகள் சூழல் பற்றி மதிப்பிடுவதற்காகவும், அந்நாட்டின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் விதத்தில் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் ஐ.நா.மனித உரிமைகள் அவையின் இரண்டு பிரதிநிதிகள் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.
நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற அமைதிக் கலாச்சாரம் குறித்த ஐ.நா. உயர்மட்டக் கூட்டத்தில் பேசிய ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், கடந்த ஆண்டில் உலகில் ஆயுதங்களுக்கென 170 ஆயிரம் கோடி டாலர் ($1.7trillion) செலவழிக்கப்பட்டுள்ளது என்று கவலை தெரிவித்தார். உலகில் எண்ணற்ற மக்கள் பசியோடு தினமும் உறங்கச் சென்று கொண்டிருக்கும்போது, சுத்தமான குடிநீர் இல்லாததால் எண்ணற்ற சிறார் தினமும் இறந்து கொண்டிருக்கும்போது, நிலக்கண்ணிவெடிகளால் பயிர்நிலங்கள் சேதமடைந்திருப்பதால் விவசாயம் செய்ய முடியாமல் எண்ணற்ற விவசாயிகள் துன்புற்றுக் கொண்டிருக்கும்போது உலகில் ஆயுதங்களுக்கென இவ்வளவு பணம் செலவிடப்பட்டுள்ளது. இது ஓர் "அறநெறி அட்டூழியம்" என அழைக்கிறேன் எனக் கூறினார். அமைதி, மனித உரிமைகள், வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஓராண்டில் ஐ.நா. செலவழிக்கும் தொகையைவிட ஏறக்குறைய இரண்டு மடங்கு ஒரு நாளில் உலகம் ஆயுதங்களுக்கெனச் செலவிடுகிறது என்றும் ஐ.நா.பொதுச் செயலர் கூறினார்.
RealAudioMP3 அமைதிக் கலாச்சாரம் குறித்த இதே ஐ.நா. உயர்மட்டக் கூட்டத்தில் பேசிய ஐ.நா.பொது அவைத் தலைவர் Nassir Abdulaziz Al-Nasserம், நவீன சமுதாயம் சண்டையின்றி இருந்தால் மட்டுமே அமைதிக் கலாச்சாரத்தைப் பரப்ப முடியும் என்று கூறினார். சுதந்திரம், நீதி, சனநாயகம், சகிப்புத்தன்மை, பன்மைத்தன்மையை மதித்தல், உரையாடல், புரிந்துகொள்ளல் ஆகிய கோட்பாடுகளை அடித்தளமாகக் கொண்ட விழுமியங்களும், எண்ணங்களும், வாழும் முறையுமே அமைதிக் கலாச்சாரம் ஆகும் என்று விளக்கினார RealAudioMP3 ். எனவே உலகில் மக்கள் அமைதியாக வாழ்வதற்கு அவர்களது நியாயமான உரிமைகள் மதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தின் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கு நடந்து கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்கள் என்னென்ன? சமூக ஆர்வலர் முனைவர் எக்ஸ்.டி.செல்வராஜ் அவர்கள் விவரிக்கிறார்.......
RealAudioMP3 இந்த உலகம் சந்தித்த இரண்டு உலகப்போர்களில் பலம் மிகுந்த நாடுகளின் ஆதிக்க வெறிக்கு எண்ணற்ற அப்பாவி மக்கள் பலியானார்கள். இது அன்றைய சமூக ஆர்வலர்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து உருவான ஐக்கிய நாடுகள் நிறுவனம், உலகில் உள்ள அனைத்து மனிதரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஆவணம் ஒன்றையும் உருவாக்கியது. 1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் பொது அமர்வில் "அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம்" அறிமுகம் செய்யப்பட்டது. அதனை உடனடியாக 58 உலக நாடுகள் அங்கீகரித்தன. இந்த மனித உரிமை சாசனத்தில் 30 உறுப்புகள் உள்ளன. சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு எல்லாருக்கும் உரிமை உண்டு என இச்சாசனம் சொல்கிறது.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இஞ்ஞாயிறன்று நிறைவு செய்துள்ள லெபனன் நாட்டுக்கானத் திருப்பயணத்திலும் மனிதரின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். மனிதரின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்படும் சமூகமே அமைதியில் வாழும். எங்கு மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றனவோ, அங்கு மனித விடுதலை சிறைப்படுகிறது, மனித ஆற்றல் வீணாகிறது என்பதை உணருவோம். ஒவ்வொருவரின் மாண்பும் உரிமைகளும் மதிக்கப்பட நாம் என்ன செய்ய முடியும்? வத்திக்கான் வானொலி நேயர்களே, உங்களது எண்ணங்களை உங்களது கருத்துக் கடிதங்களில் எதிர்பார்க்கலாமா?
உரிமையும் இழந்தோம் உடமையும் இழந்தோம், உணர்வை இழக்கலமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா?







All the contents on this site are copyrighted ©.