2012-09-17 15:27:48

லெபனனின் அமைதியைக் குலைக்கும் அனைத்தையும் துணிச்சலுடன் எதிர்த்து நில்லுங்கள் – லெபனன் மக்களுக்குத் திருத்தந்தை அழைப்பு


செப்.17,2012. லெபனன் நாடு தனது பாரம்பரியச் சமயப் பன்மைத்தன்மையைத் தொடர்ந்து காத்து வருமாறும், அதனை எதிர்க்கும் சக்திகளின் தாக்கத்தை உறுதியுடன் எதிர்த்து நிற்குமாறும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
லெபனனுக்கானத் தனது மூன்று நாள் மேய்ப்புப்பணித் திருப்பயணத்தை நிறைவுசெய்த பெய்ரூட் “Rafiq Hariri” பன்னாட்டு விமானநிலைய பிரியாவிடை நிகழ்ச்சியில் உரையாற்றியபோது இவ்வாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
இந்த மூன்று நாள்களும் தனக்கு இனியநல் வரவேற்பளித்த அந்நாட்டு அரசுத் தலைவர் உட்பட அனைத்துக் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் என, எல்லாருக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை, இத்திருப்பயணம் மறக்க முடியாதது என்றும் கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கு லெபனன் அரசுத் தலைவர் மிஷேல் ஸ்லைமான், அமைச்சர்கள், நாடாளுமன்ற சபாநாயகர், கத்தோலிக்க முதுபெரும் தலைவர்கள், ஆயர்கள் எனப் பலர் வந்திருந்தனர். திருத்தந்தையின் செய்தியைக் கேட்பதற்காக நூற்றுக்கணக்கான இளையோரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
லெபனன் நாட்டில் ஆண்களும் பெண்களும் ஒருவர் ஒருவருடன் நல்லிணக்கத்துடனும் அமைதியிலும் தொடர்ந்து வாழ்வார்களாக என்று சொல்லி இந்நாட்டுக்கானத் தனது முதல் திருப்பயணத்தை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்துடன் திருத்தந்தையின் 24வது வெளிநாட்டுத் திருப்பயணம் நிறைவுக்கு வந்தது.








All the contents on this site are copyrighted ©.