2012-09-16 13:00:19

மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த அரபு நாடுகளுக்கும், அனைத்துலகச் சமுதாயத்துக்கும் திருத்தந்தை அழைப்பு


செப்.16,2012. கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் நாடிச்செல்லும் லெபனன் அன்னைமரியிடம் செபிப்போம். லெபனன் மக்களாகிய உங்கள் எல்லாருக்கும், சிறப்பாக, சிரியா மற்றும் அண்டை நாடுகளின் மக்கள் அனைவருக்கும் அமைதி எனும் கொடையை அவ்வன்னை தமது திருமகனிடம் பெற்றுத் தருவாராக என மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை.
சண்டைகளும் வன்முறையும் எவ்வளவு துன்பங்களை வருவிக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். விதவைகள் மற்றும் அனைதைகளின் அழுகுரல்களோடு ஆயுதங்களின் இரைச்சல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பது வருத்தமாக இருக்கின்றது. மக்களின் வாழ்வை வன்முறையும் வெறுப்பும் ஆக்ரமித்துள்ளது. இதற்குப் பெண்களும் சிறாரும் முதலில் பலிகடா ஆகின்றனர். இவ்வளவு கொடுமைகள், இத்தனை இறப்புகள் ஏன்?. ஒவ்வொரு மனிதரின் மாண்பும் உரிமைகளும் மத உரிமையும் மதிக்கப்படும் விதத்தில் தீர்வுகளுக்குப் பணி செய்யுமாறு அரபு நாடுகளுக்கும், அனைத்துலகச் சமுதாயத்துக்கும் அழைப்பு விடுக்கிறேன். அமைதியைக் கட்டியெழுப்ப விரும்புகிறவர்கள், மற்றவரில் தீமை ஒழிக்கப்படுவதைக் காண வேண்டும். இது எளிதானதல்ல, ஆயினும் அமைதியைக் கட்டியெழுப்ப இது தேவை. உங்களது லெபனன் நாட்டுக்கும், சிரியாவுக்கும், மத்திய கிழக்குக்கும் அமைதிநிறை இதயங்கள், ஆயுதங்கள் மௌனமடைவது மற்றும் எல்லா வன்முறையும் நிறுத்தப்படும் கொடையை இறைவன் அருள்வாராக. அனைவரும் சகோதரர்கள் என்பதை மனிதர்கள் புரிந்து கொள்வார்களாக. முதுபெரும் தலைவர்கள் மற்றும் ஆயர்களுடன் இணைந்து மத்திய கிழக்குப் பகுதியை அன்னைமரியிடம் நான் ஒப்படைக்கின்றேன் என்று மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.