2012-09-16 12:56:48

திருத்தந்தை : மத்திய கிழக்குப் பகுதி முழுவதற்கும் அமைதி மற்றும் ஒப்புரவின் பணியாளர்கள் தேவை


செப்.16,2012. இயேசு தம் சீடர்களிடம் தன்னை யார் என்று கேட்ட இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து, பெய்ரூட்டின் City Centre பரந்தவெளியில் நிகழ்த்திய திருப்பலியில் மறையுரை ஆற்றினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இயேசுவைப் பின்செல்வது என்பது ஒவ்வொருவரும் அவரவர் சிலுவையைச் சுமந்து கொண்டு அவரின் அடிச்சுவடுகளைப் பின்செல்வதாகும். அனைவருக்கும் தன்னைப் பணியாளராக்கிய இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடப்பதைத் தேர்ந்து கொள்வது அவருக்கு நெருக்கமாக இருந்து அவரது திருச்சொற்களைக் கவனமுடன் கேட்டு நாம் செய்வதனைத்திற்கும் அவற்றிலிருந்து தூண்டுதல் பெறுவதாகும். வருகிற அக்டோபர் 11ம் தேதியன்று தொடங்கும் விசுவாச ஆண்டை அறிவித்த போது ஒவ்வொரு விசுவாசியும் இந்த உண்மையான மனமாற்றப் பாதையைத் தேர்ந்து கொள்வதற்குத் தன்னை அர்ப்பணிக்குமாறு விரும்பினேன். இயேசுவின் சாயலில் அனைத்துக் கிறிஸ்தவர்களும் உண்மையான ஊழியர்களாக வேண்டும். இதுவே திருஅவையின் பணியாகும். தொடர் வனமுறை மரணத்தையும் அழிவையும் விட்டுச் செல்லும் உலகத்தில் நீதிக்கும் அமைதிக்கும் சேவையாற்ற வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது. இந்த மத்திய கிழக்குப் பகுதி முழுவதற்கும் அமைதி மற்றும் ஒப்புரவின் பணியாளர்களை இறைவன் தரவேண்டுமென்று செபிக்கிறேன். இதன்மூலம் அனைத்து மக்களும் மாண்புடன் அமைதியில் வாழ்வார்கள். கிறிஸ்தவர்கள், நன்மனம் கொண்ட எல்லாருடன் சேர்ந்து ஒத்துழைத்து செய்ய வேண்டிய பணி இதுவே. நீங்கள் எங்கெங்கு இருந்தாலும் அமைதியை ஏற்படுத்துபவர்களாக இருங்கள் என்பதே உங்கள் எல்லாருக்கும் நான் விடுக்கும் அழைப்பாகும். உடல் ரீதியாக அல்லது ஆன்மீக ரீதியாக துன்பப்படும் என் அன்புச் சகோதர சகோதரிகளே, உங்களது துன்பங்கள் வீணாய்ப் போகவில்லை. உங்களது துன்பங்களோடு இயேசு அருகில் இருக்கிறார். அவர் எப்பொழுதும் உங்களுக்கு அருகில் இருக்கிறார் என்று சொல்லி இத்திருப்பலி மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.