2012-09-16 12:51:34

திருத்தந்தை : கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் இளையோர் ஒன்றுசேர்ந்து லெபனனின் வருங்காலத்தைச் கட்டியெழுப்ப வேண்டும்


செப்.16,2012. மத்திய கிழக்கில் கிறிஸ்தவரும் இசுலாமியரும் ஒன்றிணைந்து வாழ்வது இயலக்கூடியதே என்பதை லெபனன் இளையோர் வெளிப்படுத்த வேண்டும், கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் இளையோர், லெபனனின் வருங்காலத்தைச் "ஒன்றுசேர்ந்து கட்டியெழுப்ப" வேண்டும். ஏனெனில், உங்களை எதிர்பார்த்திருக்கும் மத்திய கிழக்குப் பகுதி ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். முஸ்லீம்களும் கிறிஸ்தவரும், இசுலாமும் கிறிஸ்தவமும் ஒருவர் ஒருவரின் மத நம்பிக்கையை மதித்து வெறுப்பின்றி சேர்ந்து வாழ முடியும், இதன்மூலம் சுதந்திரமான மனித சமுதாயத்தை ஒன்றுசேர்ந்து கட்டியெழுப்ப முடியும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். லெபனனிலிருந்து மட்டுமல்ல சிரியாவிலிருந்தும் இளையோர் வந்திருப்பதைப் புரிந்து கொள்கிறேன். உங்களது துணிச்சலை நான் எவ்வளவு தூரம் வியக்கிறேன் எனச் சொல்ல விரும்புகிறேன். திருத்தந்தை உங்களை மறக்கவில்லை என்று நீங்கள் வீடு திரும்பும்போது, உங்கள் குடும்பங்கள் மற்றும் நண்பர்களிடம் சொல்லுங்கள். உங்களது துன்பங்களையும் துயரங்களையும் கண்டு திருத்தந்தை மிகவும் மனவேதனையடைந்துள்ளார், திருத்தந்தை தனது செபங்களில் சிரியாவை மறக்கவில்லை, சிரியா மக்கள்மீது அக்கறையாய் இருக்கிறார் என, உங்களைச் சுற்றியிருப்பவர்களிடம் கூறுங்கள். துன்புறும் மத்திய கிழக்குப் பகுதி மக்களையும் நான் மறக்கவில்லை. வன்முறையையும் போரையும் நிறுத்துவதற்கு கிறிஸ்தவரும் இசுலாமியரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கு வேண்டிய நேரம் வந்துவிட்டது. நிச்சயமற்ற வருங்காலம் மற்றும் வேலை வாய்ப்புக்களைத் தேடி நீங்கள் வேறு நாடுகளில் குடியேறுகின்றீர்கள். ஆனால் நீங்களே உங்கள் நாட்டின் வருங்காலத்தைக் கட்டியெழுப்புவர்கள். நீங்கள் சமுதாயத்திலும் திருஅவையிலும் உங்கள் இடத்தை எடுக்க வேண்டியவர்கள். உண்மையான உறவுகளைத் தேடுங்கள். உங்கள் வாழ்க்கைக்குப் பொருள் கொடுக்கும் வழிகளைத் தேடுங்கள். போலித்தனங்களைத் தகர்த்தெறியுங்கள். கடவுளின் மன்னிப்பையும் இரக்கத்தையும் உண்மையிலே கண்டுகொள்வது புதிய வாழ்வைத் தொடங்க உதவும். மன்னிப்பது எளிதானது அல்ல. எனினும் கடவுளின் மன்னிப்பு, மனமாற்ற வல்லமையை வழங்கும் மற்றும். மன்னிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் என்றுரைத்த திருத்தந்தை, நிஜவாழ்விலிருந்து தப்பிச் செல்ல முயற்சிக்க வேண்டாம், போதைப் பொருள்களையும், நுகர்வுத் தன்மையையும் பணத்தின்மீதான அன்பையும் புறக்கணியுங்கள் என இளையோரிடம் கேட்டுக் கொண்டார். மன்னிப்பும் ஒப்புரவுமே அமைதிக்கானப் பாதைகளாகும். இவையே எதிர்காலத்தைத் திறந்து வைக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.