2012-09-15 14:59:32

திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் பெய்ரூட்டில் இரண்டாவது நாள் காலை நிகழ்வுகள்


செப்.15,2012. லெபனன் திருப்பயணத்தின் இரண்டாவது நாளாகிய இச்சனிக்கிழமை காலையில் ஹரிஸ்ஸா திருப்பீடத் தூதரகத்தில் தனியே திருப்பலி நிறைவேற்றிய பின்னர், அங்கிருந்து 30 கிலோ மீட்டரில் இருக்கின்ற Baabda லெபனன் அரசுத்தலைவர் மாளிகைக்குச் சென்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். பெய்ரூட்டின் புறநகரில் 4 கிலோ மீட்டர் தூரத்தில் குன்றின்மீது அமைந்துள்ளது இந்த மாளிகை. திருத்தந்தை அங்கு காரில் சென்றபோது சாலையெங்கும் இருமருங்கிலும் பெருந்திரளாக மக்கள் கூடிநின்று வத்திக்கான் மற்றும் அந்நாட்டுக் கொடிகளை ஆட்டிக் கொண்டு திருத்தந்தையை வாழ்த்தினர். இப்பயணத்தை முன்னிட்டு இச்சனிக்கிழமை அரசு விடுமுறை என்பதால், காலை 8 மணிக்கெல்லாம் Baabda மாளிகைக்குச் செல்லும் வழிகளில் மக்களை அரசுத்தலைவர் நிற்கச் சொன்னதாக அவரது அலுவலக அறிக்கை கூறுகின்றது. அம்மாளிகைக்கு முன்பாக, சிறார் உட்பட மக்கள் மரபு உடைகளில் நடனம் ஆடி திருத்தந்தையை வரவேற்றனர். உள்ளூர் நேரம் காலை 9 மணிக்கு அதாவது இந்திய நேரம் காலை 11.30 மணிக்கு அரசுத்தலைவர் Michel Sleimanஐ சந்தித்தார் திருத்தந்தை.

மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்கள் அரசியலில் பங்கு கொள்ளாதவரை அப்பகுதியில் சனநாயகத்தைக் கொண்டு வருவது இயலாதது என்றும், இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்றும் இச்சந்திப்பில் அரசுத்தலைவர் Sleiman திருத்தந்தையிடம் கூறினார். மேலும், இளையோர் தீவிரவாத நடவடிக்கைகளில் இறங்க வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார் ஸ்லைமான். இச்சந்திப்புக்குப் பின்னர் பிரதமர் Nagib Mikati சந்தித்தார் திருத்தந்தை. பின்னர் அதே மாளிகையில் லெபனன் முஸ்லீம் மதங்களின் தலைவர்களைச் சந்தித்து, மத்திய கிழக்கில் திருஅவை என்ற அப்போஸ்தலிக்க ஏட்டின் பிரதிகளையும் அளித்தார். சிறிதுநேர ஓய்வுக்குப் பின்னர், அம்மாளிகையின் 25 மே என்ற அறையில் அந்நாட்டின் அரசு, நிறுவன மற்றும் தூதரக அதிகாரிகள், சமயத் தலைவர்கள் மற்றும் கலாச்சார உலகின் பிரதிநிதிகளையும் சந்தித்தார். இச்சந்திப்பில், மனித மாண்பையும் சமய சுதந்திரத்தையும் மதிப்பதில் அமைதி என்பது பற்றித் திருத்தந்தை உரையாற்றினார்.
இவ்வரைக்குப் பின்னர் அர்மேனிய கத்தோலிக்க முதுபெரும் தலைவர் இல்லத்தில், முதுபெரும் தலைவர்கள், ஆயர்கள் மற்றும் பல பிரதிநிதிகளுடன் மதிய உணவருந்தினார் திருத்தந்தை. மாலையில் லெபனன் இளையோரைச் சந்தித்தல் இச்சனிக்கிழமையின் இறுதி நிகழ்வாக இருந்தது. மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் இஞ்ஞாயிறன்று நிறைவடையும்.







All the contents on this site are copyrighted ©.