2012-09-15 14:52:51

திருத்தந்தையின் 24வது வெளிநாட்டுத் திருப்பயணம் – பெய்ரூட்டில் முதல் நாள் மாலை நிகழ்வுகள்


செப்.15,2012. லெபனன் நாட்டுக்கும் அனைத்து மத்திய கிழக்குப் பகுதிக்கும் அமைதியின் திருப்பயணியாக, இறைவனின் நண்பராக, இப்பகுதி மக்களின் நண்பராக வந்துள்ளேன் என்று லெபனன் தலைநகர் பெய்ரூட் “Rafiq Hariri” விமானநிலைய வரவேற்பு நிகழ்ச்சியில் சொல்லி அந்நாட்டுக்கான மூன்று நாள் திருப்பயணத்தை இவ்வெள்ளிக்கிழமை தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். அன்றைய தினம் உள்ளூர் நேரம் மாலை 6 மணிக்கு அதாவது இந்திய நேரம் இரவு 8.30 மணிக்கு ஹரிஸ்ஸா கிரேக்க மெல்கித்தேரீதி புனித பவுல் பசிலிக்கா சென்றார் திருத்தந்தை.

ஹரிஸ்ஸா, பெய்ரூட் நகரத்திற்கு வடக்கே 20 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஒரு மலைப்பகுதி கிராமமாகும். கடல்மட்டத்திற்கு 650 மீட்டர் உயரத்திலுள்ள ஹரிஸ்ஸாவில், அந்நாட்டுத் திருப்பயணிகளுக்கு முக்கியமான லெபனன் அன்னைமரி திருத்தலம் அமைந்துள்ளது. மாரனைட்ரீதி கத்தோலிக்கரின் இத்திருத்தலத்தில் 15 டன் எடையுள்ள வெண்கல அன்னைமரி திருவுருவம் 1908ம் ஆண்டில் வைக்கப்பட்டது. அத்துடன் ஹரிஸ்ஸாவில் கிரேக்க மெல்கித்தேரீதி உட்பட பிற கிறிஸ்தவ சபைகளுக்கும் தலைமையிடங்கள் உள்ளன. இவ்வெள்ளிக்கிழமை மாலை திருத்தந்தை சென்ற புனித பவுல் பசிலிக்கா, கிரேக்க மெல்கித்தே ரீதித் திருஅவையின் முக்கிய இருப்பிடத்தில் அமைந்துள்ளது. ஹரிஸ்ஸாவிலுள்ள இந்த இருப்பிடம், 1909ம் ஆண்டில் எழுப்பப்பட்டது.

இந்தப் புனித பவுல் பசிலிக்காவில் நடைபெற்ற செப வழிபாட்டில் கலந்து கொண்டார் திருத்தந்தை. இந்தச் செப வழிபாட்டில் முதலில் பைஜான்டைன் ரீதியிலும் பின்னர் மாரனைட் ரீதியிலும் பாடல்கள் இசைக்கப்பட்டன. லெபனனில் மாரனைட் ரீதி, கிரேக்க ஆர்த்தடாக்ஸ், கிரேக்க மெல்கித்தே கத்தோலிக்கர், அர்மேனிய அப்போஸ்தலிக்கச் சபை, சிரியன் கத்தோலிக்கர், கல்தேய சபையினர், பிரிந்த கிறிஸ்தவ சபையினர், சிரியன் ஆர்த்தடாக்ஸ், இலத்தீன் ரீதி, கீழைரீதி அசீரியர்கள் என பல கிறிஸ்தவ சபைகளும், அவற்றில் ஏறத்தாழ 40 இலட்சம் கிறிஸ்தவர்களும் உள்ளனர். இச்சபைகளில் மாரனைட் ரீதி கத்தோலிக்கரே அதிகம். மேலும், ஷியைய்ட், சுன்னி, Druze ஆகிய இசுலாம் மதத்தவரும், நூற்றுக்கணக்கான யூதர்களும் வாழ்கின்றனர்.

ஹரிஸ்ஸா புனித பவுல் பசிலிக்காவில் நடைபெற்ற செப வழிபாட்டில், கத்தோலிக்கக் குருக்கள், அருள்சகோதரிகள், இன்னும் ஆர்த்தடாக்ஸ் மற்றும் இசுலாமிய மதங்களின் பிரதிநிதிகள், லெபனன் அரசுத்தலைவர், அரசியல்வாதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். கிரேக்க மெல்கித்தே ரீதி முதுபெரும் தலைவர் Gregory III Laham முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். அந்நாட்டில் பல மரபுகளையும் பல மொழிகளையும் கொண்டவர்கள் வாழ்வதன் அடையாளமாக இவரின் உரை அரபு, ஜெர்மானியம், இத்தாலியம், ப்ரெஞ்ச் ஆகிய மொழிகள் கலந்து இருந்தது. பின்னர் உலக ஆயர் மாமன்றப் பொதுச் செயலர் பேராயர் நிக்கோலா எத்ரோவிச் தொடக்கவுரையாற்றினார். அதன்பின்னர் மறையுரையாற்றிய திருத்தந்தை, அங்கு கூடியிருந்த அனைத்து மதத்தவருக்கும் அரசியல்வாதிகளுக்கும் இதயம்கனிந்த நன்றி சொல்லி, உங்கள் அனைவரின் இருப்பு, “மத்திய கிழக்கில் திருஅவை” என்ற, மத்திய கிழக்குப் பகுதிக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்தின் தீர்மானங்கள் அடங்கிய அப்போஸ்தலிக்க ஏட்டில் கையெழுத்திடும் நிகழ்வை இன்னும் அதிகச் சிறப்புடையதாக மாற்றியிருக்கின்றது என்று கூறினார்.

அரபு வசந்தம் என்ற மக்கள் எழுச்சிக்குப் பின்னர் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இன்னல்நிறைந்த சூழல், சிரியாவில் உள்நாட்டுச் சண்டை, இசுலாமைக் கேலி செய்வதாக வெளியான திரைப்படத்துக்குப் பின்னர் இடம்பெற்ற வன்முறை, கிறிஸ்தவர்களுக்கு எதிராகப் பரவலாக இடம்பெறும் வன்முறை, சமூக மற்றும் அரசியல் மோதல்களையடுத்து கிறிஸ்தவர்கள் பெருமளவில் வெளியேறுவது ஆகிய தற்போதைய அனைத்துச் சூழல்களுக்கு மத்தியில், திருத்தந்தை இந்த அப்போஸ்தலிக்க ஏட்டில் பரிந்துரைத்துள்ள கருத்துக்கள், கிறிஸ்துவின் கண்களோடு எதிர்காலத்தை நோக்குவதற்கு அங்கு கூடியிருந்தவர்களைச் சிந்திக்க அழைக்கின்றது.

இவ்வுரைக்குப் பின்னர் மத்திய கிழக்கில் திருஅவை என்ற அப்போஸ்தலிக்க ஏட்டில் கையெழுத்திட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். லெபனன் திருப்பயணத்தின் முக்கிய நோக்கமே இவ்வேட்டில் கையெழுத்திட்டு அதனை வெளியிடுவதாகும். இச்செபவழிபாடு முடிந்து ஹரிஸ்ஸா திருப்பீடத் தூதரகம் சென்று இரவு உணவருந்தினார். இத்துடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் முற்றுப் பெற்றன.







All the contents on this site are copyrighted ©.