2012-09-15 15:02:26

திருத்தந்தை: மத்திய கிழக்குப் பகுதியில் சமய சுதந்திரத்திற்கு அழைப்பு


செப்.15,2012. லெபனன் அரசுத்தலைவர் மாளிகையின் “25 மே” என்ற அறையில் அந்நாட்டின் அரசு, பல நிறுவனங்கள் மற்றும் தூதரக அதிகாரிகள், சமயத் தலைவர்கள் மற்றும் கலாச்சார உலகின் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை நிகழ்த்திய உரையின் சுருக்கம்.....
ஒவ்வொரு மனிதரின் மாண்பு மதிக்கப்படுதல், குறிப்பாக, ஒவ்வொருவரும் தங்களின் மத நம்பிக்கையை சுதந்திரமாக நடைமுறைப்படுத்த வழங்கப்படும் சுதந்திரம் அமைதிக்கு அடிப்படையானது. இந்த அடிப்படையான எண்ணத்திற்குப் புறம்பானதில் தீயவன் செயல்படுகிறான். இந்தப் பயணத்தில் நான் நட்ட கேதார் மரக்கன்று உங்களது அழகிய நாட்டின் அடையாளமாக இருக்கின்றது. இந்த மரக் கன்று வளர்வதைப் பார்க்கும்போது உங்கள் நாட்டையும், மத்திய கிழக்குப் பகுதி முழுவதையும் அதன் எதிர்காலத்தையும் பார்க்கிறேன். பெரிய மதங்கள் மற்றும் நேர்த்தியான கலாச்சாரங்களின் பிறப்பிடமாகிய இந்தப் பகுதியை கடவுள் ஏன் தேர்ந்து கொண்டார்? இப்பகுதி மக்களின் வாழ்வு ஏன் இவ்வளவு துன்பம் நிறைந்ததாக இருக்கின்றது. ஒவ்வொரு மனிதரும் அமைதி மற்றும் ஒப்புரவுக்கானத் தனது ஏக்கத்தை தெளிவான விதத்தில் அடைவதற்கு வாய்ப்பைக் கொண்டுள்ளார் என்பதை உலகின்முன் சான்று பகருவதற்காகவே. இந்தத் தூண்டுதல் கடவுளின் நித்திய திட்டத்தில் இருக்கின்றது. அமைதிக்கான நமது அர்ப்பணம் மனித வாழ்வைப் புரிந்து கொள்வதைச் சார்ந்து இருக்கின்றது. நாம் அமைதியை விரும்பினால் வாழ்வைப் பாதுகாக்க வேண்டும். இந்த அணுகுமுறை, சண்டையையும் பயங்கரவாதத்தையும் மட்டும் நாம் புறக்கணிக்க இட்டுச் செல்லவில்லை, மாறாக, அப்பாவி மனித வாழ்வின்மீது நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலையும் புறக்கணிக்க நம்மை அழைக்கின்றது.
மனித இயல்பின் உண்மை எங்கெங்குப் புறக்கணிக்கப்படுகிறதோ அல்லது மறுக்கப்படுகிறதோ மனித இதயத்தில் எழுதப்பட்ட இயற்கைச் சட்டம் குறித்த இலக்கணம் அங்கு மதிக்கப்படுவது இயலாததாகிறது. ஒருங்கிணைந்த மனிதரை மதிக்காமல் உண்மையான அமைதியை உங்களால் கட்டியெழுப்ப முடியாது. ஆயுத மோதல்களை அனுபவிக்கும் நாடுகளில் இது அதிகத் தெளிவாகத் தெரிகின்றது. வேலைவாய்ப்பின்மை, வறுமை, ஊழல், சுரண்டல், பல்வேறு மனித வியாபாரங்கள், பயங்கரவாதம் போன்றவை ஏற்றுக்கொள்ள முடியாத மனிதத் துன்பங்களுக்கு மட்டும் காரணமாக இல்லை, அத்துடன், மனிதச் சக்திகளும் பெருமளவில் இழக்கப்படக் காரணமாகின்றன. இரத்தம் சிந்தும் இனப்பாகுபாட்டு மோதல்களால் நிறைந்துள்ள மத்திய கிழக்கில் உறுதியான தன்மை ஏற்படுவதற்கு சமய சுதந்திரம் அடிப்படையானது. இந்தச் சுதந்திரம் அடிப்படையான உரிமையாகும். உயிரோட்டமுள்ள விசுவாசம் அன்புக்கு இட்டுச் செல்லும். உண்மையான விசுவாசம் மரணத்துக்கு இட்டுச் செல்லாது. அமைதியை ஏற்படுத்துவோர் தாழ்மையும் நீதியும் கொண்டவராய் இருப்பார். எனவே இக்காலத்தின் விசுவாசிகள் அமைதியை ஏற்படுத்துவோராய் இருக்க வேண்டும்.
இவ்வாறு, லெபனன் நாட்டின் அரசு, பல நிறுவனங்கள் மற்றும் தூதரக அதிகாரிகள், சமயத்தலைவர்கள் மற்றும் கலாச்சார உலகின் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உரையாற்றினார்.







All the contents on this site are copyrighted ©.