2012-09-13 16:32:27

லிபியாவில் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தூதரகம் தாக்கப்பட்டதற்கு திருப்பீடம் கண்டனம்


செப்.13,2012. லிபியாவில் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தூதரகம் கடும் தாக்குதலுக்கு உள்ளானது குறித்து திருப்பீடம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றது என்று இவ்வியாழனன்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
நியூயார்க் உலக வர்த்தக மையம், பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டதை நினைவுகூர்ந்த இச்செவ்வாயன்று இசுலாமைக் கேலிசெய்யும் திரைப்படம் ஒன்று வெளியானதையடுத்து லிபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வன்முறைக் கும்பல்களால் தாக்கப்பட்டது. இதில் அமெரிக்க தூதர் ஜே.கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ், மூன்று தூதரகப் பணியாளர்கள் மற்றும் சில லிபிய மக்களும் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதக் குழுக்களின் இந்தக் கொலைவெறி வன்முறைகளை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்று கூறிய அருள்தந்தை லொம்பார்தி, அனைத்துலக சமுதாயம், இந்த வேதனையான தருணத்தைப் பயன்படுத்தி, சிரியாவிலும், மத்திய கிழக்குப் பகுதி முழுவதிலும் அமைதிக்கு ஆதரவாகத் தொடர்ந்து செயல்படுமாறு கேட்டுள்ளார்.
இசுலாமைக் கேலிசெய்யும் அமெரிக்கத் திரைப்படம் விவகாரம் தொடர்பாக, ஏமன், எகிப்து உட்பட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வட ஆப்ரிக்காவிலுள்ள அமெரிக்க தூதரகங்கள் கடுமையாய்த் தாக்கப்பட்டுள்ளன எனச் செய்திகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.