2012-09-13 16:30:16

திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம்


செப்.13,2012. மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியையும் ஒப்புரவையும் ஊக்குவிக்கும் நோக்கத்தில் லெபனன் நாட்டுக்கானத் தனது முதல் திருப்பயணத்தை இவ்வெள்ளிக்கிழமை உரோம் நேரம் காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உரோம் சம்ப்பினோ விமானநிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை, 3 மணி 15 நிமிடங்கள் பயணம் செய்து லெபனன் தலைநகர் பெய்ரூட் “Rafiq Hariri” விமானநிலையத்தை அடைந்து அங்கு இடம்பெறும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்.
இவ்வெள்ளி உள்ளூர் நேரம் மாலை 6 மணியளவில் ஹரிஸ்ஸா புனித பவுல் பசிலிக்காவில் நடைபெறும் செப வழிபாட்டின்போது, மத்திய கிழக்குப் பகுதிக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்தின் தீர்மானங்கள் அடங்கிய அப்போஸ்தலிக்க ஏட்டில் கையெழுத்திடுவார்.
லெபனன் அரசுத்தலைவர் மற்றும் பிரதமரைத் தனித்தனியே சந்தித்தல், முஸ்லீம் மதத் தலைவர்களைச் சந்தித்தல், அரசு உறுப்பினர்கள், தூதரக அதிகாரிகள், சமயத் தலைவர்கள், கலாச்சாரப் பிரதிநிதிகள் எனப் பலதரப்பட்ட குழுவினர் எல்லாரையும் அரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்தல், அந்நாட்டு ஆயர்கள் மற்றும்பிற கிறிஸ்தவத் தலைவர்களைச் சந்தித்தல் என பல முக்கிய நிகழ்வுகள் செப்டம்பர் 15, இச்சனிக்கிழமை திருப்பயணத்திட்டத்தில் உள்ளன.
செப்டம்பர் 16 இஞ்ஞாயிறன்று பெய்ரூட் நகர வளாகத்தில் திருப்பலி நிகழ்த்தி அந்த அப்போஸ்தலிக்க ஏட்டை அத்தலத்திருஅவைகளுக்கு வழங்கும் திருத்தந்தை அன்று மாலை உரோம் திரும்பி காஸ்தெல் கந்தோல்ஃபோ செல்வார்.
லெபனன் நாட்டுக்கானத் திருத்தந்தையின் இத்திருப்பயணம் அவரது 24வது வெளிநாட்டுத் திருப்பயணமாக அமைகின்றது.







All the contents on this site are copyrighted ©.