2012-09-13 16:42:14

குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை உலகில் குறைந்துள்ளது : யுனிசெப்


செப்.13,2012. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு கடந்த 20 ஆண்டுகளில் குறிப்பிடத்தகும் வகையில் குறைந்துள்ளதாக யுனிசெப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு 1990ம் ஆண்டில் 1 கோடியே 20 இலட்சமாக இருந்தது, கடந்த ஆண்டில் 69 இலட்சமாக்க் குறைந்துள்ளது.
சில ஏழை நாடுகள் பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளதும், பொருளுதவிகள் வழங்கப்பட்டுள்ளதும், சில நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதும், குழந்தை இறப்பு குறைவிற்கான காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன.
தட்டம்மை போன்ற நோய்களுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது மூலம், 2011ம் ஆண்டில் குழந்தை இறப்புகளை 4 இலட்சம் குறைக்க முடிந்தது எனவும் உரைத்தது குழந்தைகளுக்கான ஐநா அமைப்பான யுனிசெப்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கையில் பாதி, இந்தியா, நைஜீரியா, கோங்கோ, பாகிஸ்தான், சீனா என்ற ஐந்து நாடுகளில் மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து வயதிற்குட்பட்டகுழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை கடந்தஆண்டில் கோங்கோ, சாடு,சொமாலியா, மாலி, கம்ரூன் மற்றும் புர்கீனா ஃபாசோ ஆகியநாடுகளில் அதிகரித்திருந்ததாகவும் யுனிசெப்பின் அறிக்கை கூறுகிறது.
பிறந்த 28 நாட்களுக்குள் கடந்த ஆண்டு உலகில் இறந்த குழந்தைகளின் என்ண்ணிக்கை ஏறத்தாழ 30 இலட்சம் எனக்கூறும் இவ்வறிக்கை, உலகில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மரணத்தில் மூன்றில் ஒரு பகுதிக்கும் மேற்பட்டவைகளுக்குப் போதிய சத்துணவின்மையே காரணம் எனவும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.