2012-09-12 16:37:48

பாகிஸ்தானில் சிறுமி Rimsha பிணையலில் விடுதலைசெய்யப்பட்டிருப்பது சிறுபான்மையினருக்கு ஒரு திருப்புமுனை


செப்.12,2012. பாகிஸ்தானில் தேவநிந்தனையின் பேரில் பொய்யாகக் குற்றச்சாட்டப்பட்ட மனநலம் குன்றிய 14 வயதுச் சிறுமி Rimsha Masih பிணையலில் விடுதலை செய்யப்பட்டிருப்பது அந்நாட்டில் சிறுபான்மையினருக்குத் திருப்புமுனையாக இருக்கின்றது என்று அருள்தந்தை Robert McCullock கூறினார்.
பாகிஸ்தானில் 34 ஆண்டுகள் பணிசெய்துள்ள கொம்போனிய சபையின் அருள்பணி McCullock, சிறுமி ரிம்ஷாவின் விவகாரம், தேவநிந்தனையின் பேரில் குற்றச்சாட்டப்படும் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கு அரசு அதிகாரிகளுக்கு வாய்ப்பளித்துள்ளது என்று கூறினார்.
சிறுமி ரிம்ஷா பிணையலில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் பாகிஸ்தான் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளைப் பார்க்கும் போது, அவர்கள் உள்நாட்டு ஊழல்களையும் பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் எதிர்த்து நின்று போராடுவதற்கு விரும்புவதையே காட்டுகின்றது எனவும் அக்குரு கூறினார்.
அருள்தந்தை Robert McCullock, பாகிஸ்தானை விட்டு உரோம் வருவதற்கு முன்னர் அந்நாட்டு அரசுத்தலைவர் Asif Ali Zardariயிடம் விருது வாங்கியிருக்கிறார். அத்துடன் அந்நாட்டில் தேவநிந்தனை சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அரசுத்தலைவரிடம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.