2012-09-12 16:33:48

திருப்பீடப் பேச்சாளர் : திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் ஒருபோதும் சந்தேகத்துக்கு உட்படவில்லை


செப்.12,2012. லெபனனின் அண்டை நாடான சிரியாவில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுச் சண்டை மத்திய கிழக்குப் பகுதியில் உறுதியற்றதன்மையை ஏற்படுத்தியிருக்கின்றபோதிலும், இம்மாதம் 14 முதல் 16 வரை திருத்தந்தை மேற்கொள்ளவுள்ள லெபனன் நாட்டுத் திருப்பயணம் குறித்து ஒருபோதும் எவ்வித சந்தேகமும் ஏற்பட்டதில்லை என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
இத்திருப்பயணத்தை மேற்கொள்வது குறித்து ஒருபோதும் ஐயத்துக்குரிய கேள்வி எழுந்ததில்லை என்று நிருபர் கூட்டத்தில் விளக்கிய அருள்தந்தை லொம்பார்தி, அமைதியற்ற சூழலில் அப்பகுதி மக்களுக்கு ஊக்கத்தையும் ஆதரவையும் அளிப்பதன் அடையாளமாக இத்திருப்பயணம் நடைபெறவுள்ளது என்றும் கூறினார்.
2010ம் ஆண்டு அக்டோபரில் வத்திக்கானில் நடைபெற்ற மத்திய கிழக்குப் பகுதிக்கானச் சிறப்பு ஆயர் மாமன்றத்தின் தீர்மானத் தொகுப்பை வெளியிடுவது இத்திருப்பயணத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வெள்ளிக்கிழமையன்று லெபனன் தலைநகர் பெய்ரூட்டை அடையும் திருத்தந்தையை அந்நாட்டின் முஸ்லீம் தலைவர்களும் வரவேற்கவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.