2012-09-12 16:21:44

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் : மத்திய கிழக்குப் பகுதி முழுவதிலும் அமைதிக்காக அழைப்பு


செப்.12,2012. மத்திய கிழக்குப் பகுதி முழுவதிலும் அனைத்து உரிமைகளும் மதிக்கப்பட்டு அப்பகுதியில் அமைதியும் ஒப்புரவும் ஏற்படுவதற்கு எல்லாரும் செபிக்குமாறு இப்புதனன்று கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இவ்வெள்ளிக்கிழமையன்று தான் தொடங்கவிருக்கும் லெபனன் நாட்டுத் திருப்பயணம் பற்றி இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் பேசிய திருத்தந்தை, அப்பகுதியில் வாழும் பல்வேறு கத்தோலிக்க ரீதி மற்றும்பிற கிறிஸ்தவ விசுவாசிகளையும், முஸ்லீம் மற்றும் Druze மதத்தவரையும் தான் சந்திக்கவிருப்பதையும் குறிப்பிட்டார்.
அப்பகுதியில் நிலைத்த அமைதியும் ஒப்புரவும் தொடர்ந்து இருந்தால் மட்டுமே இந்த மதத்தவர் அனைவரும் ஒன்றிணைந்து வாழ முடியும் என்பதால், மத்திய கிழக்குப் பகுதியில் வாழும் அப்பகுதிக் கிறிஸ்தவர்கள் மற்றும் அங்குப் பணிபுரியும் எல்லாக் கிறிஸ்தவர்களும், அமைதி மற்றும் ஒப்புரவைக் கட்டியெழுப்புவர்களாகச் செயல்படுமாறு கேட்டுக் கொள்வதாகக் கூறினார் திருத்தந்தை.
பல்வேறு கிறிஸ்தவச் சமூகங்களால் நடத்தப்பட்டுள்ள பல்சமய மற்றும் பலகலாச்சார உரையாடல்கள் எவ்வளவு முக்கியம் என்பதை மத்திய கிழக்குப் பகுதியின் வரலாறு நமக்கு எடுத்துரைக்கின்றது என்று கூறிய திருத்தந்தை, இப்பகுதி மக்களின் நியாயமான உரிமைகள் மதிக்கப்படும் அமைதி அங்கு கிடைப்பதற்குத் தான் இறைவனிடம் செபிப்பதாகவும் இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
இந்த அமைதிக்கான விண்ணப்பத்தை ப்ரெஞ்ச் மற்றும் அரபு மொழிகளில் முன்வைத்தார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.