2012-09-12 16:27:26

திருஅவையில் திருப்புமுனைகள் – புனித பொன்வாய் அருளப்பர் (St. John Chrysostom)


செப்.12,2012. “ஒருவர் ஒரே நேரத்தில் செல்வந்தராகவும் நீதிமானாகவும் இருக்க முடியாது. கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டுள்ள ஒரு மனிதர் குளிரில் மடிந்து கொண்டிருக்கும்போது, உங்கள் மலத்தை வெள்ளிக் குடத்தில் பெற்று அதற்கு மதிப்புக் கொடுக்கிறீர்களே?” இப்படிக் கேள்விகள் கேட்டு ஏழைகளுக்கு உதவாத செல்வந்தரை வசைபாடி, தேவையில் இருப்போர்மீது மிகுந்த அக்கறை காட்டியவர் புனித ஜான். இவர் வாழ்ந்த நான்காம் நூற்றாண்டில் சமுதாய மற்றும் சமய உலகம் வெறும் ஆடம்பரங்களால் நிறைந்திருந்தது. அதனால் இவர் தனது மறையுரைகளில் இடிமுழக்கமாக அவற்றை எதிர்த்துப் பேசினார். ஏழை எளியோரை வாட்டி, தங்கத்தட்டில் கொப்பளித்துக் கொண்டிருந்த எல்லாரையும், பேரரசர்கள், சமயத் தலைவர்கள் என்ற அச்சமின்றி அனைவரையும் சாடினார். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் யாரையும் இவர் விட்டுவைக்கவில்லை. அரச குலத்தினரும் பிரபுக் குலத்தினரும் தங்களது சொத்துக்களை ஏழைகளுடன் பகிர்ந்து வாழவேண்டுமென்று மறையுரைகளில் வலியுறுத்தினார். ஒவ்வொருவருக்கும் தனிச்சொத்துரிமை வந்ததற்குக் காரணம் ஆதாம் அருள்வாழ்விலிருந்து வீழ்ச்சியடைந்ததுதான் என்று கூறினார். அரச குலத்தினரும் பிரபுக் குலத்தினரும் குதிரைப்பந்தயம், கேளிக்கைகள், நாடக அரங்குகள் என வாழ்க்கையை வீணடித்ததைக் கண்டு ஒரு மறையுரையில், இந்தக் கிறிஸ்தவர்களிடம், ஆமோஸ் யார், ஒபதியா யார், திருத்தூதர்கள் எத்தனை பேர், இறைவாக்கினர்கள் எத்தனை பேர் என்று கேட்டால் தெரியாது. ஆனால் குதிரைகள் பற்றியும் குதிரைப் பந்தயம் பற்றியும் நாடக அரங்குகள் பற்றியும் கேட்டால் தெரியும் என்று வார்த்தைகளால் விளாசினார். இதையெல்லாம் கேட்கப் பொறுக்காத செல்வந்தர்கள் தங்களது காதுகளை அடைத்துக் கொண்டனர். இதனால் அவர்களது எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டாலும் துன்பங்களுக்கு அஞ்சவில்லை நம் புனிதர் ஜான். இவரின் இத்தகைய திறமைமிக்கப் பேச்சுத்திறன், அஞ்சாத மறையுரைகள், சொற்பொழிவுகள், தவறான கொள்கைகளைத் துணிச்சலுடன் எதிர்த்த உரைகள் ஆகியவற்றை வைத்து கிறிஸ்சோஸ்தம் என்று அடைமொழியிட்டு இவரை அழைத்தனர். கிறிஸ்சோஸ்தம் என்றால் பொன்வாய் என்று பொருள். எனவே இவர் புனித ஜான் கிறிஸ்சோஸ்தம் அதாவது புனித பொன்வாய் அருளப்பர் என அழைக்கப்படுகிறார்.

புனித ஜான் கிறிஸ்சோஸ்தம், தொடக்க காலத் திருஅவையில் மாபெரும் போதகர் என்று அறியப்படுகிறார். கிரேக்கத் திருஅவைத் தந்தையர்களுள் இவரைப் போன்று யாரும் போதிக்கும் ஆற்றல் கொண்டிருக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. விவிலியத்தில் தொடக்கநூல் பற்றி 67 மறையுரைகள், திருப்பாடல்கள் பற்றி 59 மறையுரைகள், மத்தேயு நற்செய்தி பற்றி 90 மறையுரைகள், யோவான் நற்செய்தி பற்றி 88 மறையுரைகள், திருத்தூதர்பணிகள் பற்றி 55 மறையுரைகள் என இவர் ஆற்றிய மறையுரைகள் ஏராளம், ஏராளம். புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாடு நூல்கள் பற்றி நூற்றுக்கணக்கான விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார். இவரது மறையுரைகள் கேட்பவரது வாழ்க்கையை நேரிடையாகத் தொட்டன. இதனால் இவரது மறையுரைகளைக் கேட்கும் மக்கள் அவற்றை எழுதி அரசர் முதல் அனைவருக்கும் விநியோகித்திருக்கின்றனர். கி.பி.347ம் ஆண்டில் அந்தியோக்கியாவில் பிறந்த புனித ஜான் கிறிஸ்சோஸ்தம் நல்ல கிறிஸ்தவராக வளர்க்கப்பட்டார். தவவாழ்வு நடத்த விரும்பி 374ம் ஆண்டில் அந்தியோக்கியாவுக்கு அருகிலிருந்த மலைக்குச் சென்றார். ஆயினும், உடல்நலம் பாதிக்கப்பட்டதால் 386ம் ஆண்டில் அந்தியோக்கியா திரும்பி குருவானார். 398ம் ஆண்டில் Constantinople ஆயராக நியமனம் செய்யப்பட்டார். திருமறை அதிகாரிகளின் கட்டாயத்தின்பேரில் இப்பொறுப்பை ஏற்றார். ஆயரானதும் சீர்திருத்தப்பணிகளில் இறங்கினார். ஆயர் இல்லத்தில் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தார். அடிக்கடி விருந்துகள் வைப்பதைத் தவிர்த்தார். இவரே படிக்கட்டுகளைச் சுத்தம் செய்யத் தொடங்கினார். ஆயர் இல்லத்தில் பெண்கள் வேலை செய்வதை முதலில் நிறுத்தினாலும், பின்னர் அவ்வாறு வேலை செய்யும் பெண்கள் கன்னிமை வாக்குறுதியைக் கொடுக்கச் செய்தார். இவர் ஆயராகப் பொறுப்பேற்றபோது கான்ஸ்டான்டிநோபிள் நகரில் எண்ணற்ற துறவிகள் இருந்தனர். இவர்களில் துறவிக்குரிய வாழ்க்கை வாழாமல் வீணாக ஊர் சுற்றிக் கொண்டிருந்தவர்களைத் துறவு மடங்களுக்கு அனுப்பி வைத்தார். ஆடம்பர வாழ்வு வாழ்ந்து பிறருக்குத் துர்மாதிரிகையாக இருந்த குருக்களைக் கண்டித்தார். கொலை மற்றும் விபச்சாரக் குற்றம் புரிந்த குருக்களை குருத்துவநிலையிலிருந்து விலக்கினார். குருக்களது வாழ்வைச் சீர்திருத்திய பின்னர் பொதுமக்கள் வாழ்வில் கவனம் செலுத்தினார்.

பணக்காரர்களின் அர்த்தமற்ற ஆடம்பரச் செலவுகளைக் கண்டித்தார். பணக்காரப் பெண்களின் வீண்பெருமையைச் சாடினார். அவர்கள் உடை அணிவதில் அடக்கத்தை வலியுறுத்தினார். ஏழைகள்மீது அக்கறை காட்டினார். இதுபோன்ற பல நடவடிக்கைகளால் அலெக்சாந்திரியா முதுபெரும் தலைவர் தெயோபிலஸ் உட்பட சில திருஅவை அதிகாரிகள் மற்றும் உயர் பதவியிலிருந்தவர்கள் இவருக்கு எதிரிகளானார்கள். இவர்களில் Eudoxia என்ற பேரரசி இவருக்குக் கடும் எதிரியானார். புனித ஜானின் மறையுரைகள் இந்தப் பேரரசிக்குப் பிடிக்கவில்லை. இவரைப் பழிவாங்கும் நோக்கத்தில் பலக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் பேரரசி. அதனால் இந்தப் புனித ஆயரை அர்மேனியாவுக்கு நாடு கடத்தினர். புனித பவுலைப் போல புனித ஆயர் ஜான் கிறிஸ்சோஸ்தமும் கடும் துன்பங்களுக்கு மத்தியில் அமைதியையும் மகிழ்ச்சியையும் அனுபவித்தார். அப்போதைய திருத்தந்தை இவருக்கு ஆதரவாக இருந்தது பெரும் ஆறுதலைக் கொடுத்தது. இவருக்குக் கொடுக்கப்பட்ட துன்பங்களால் இவரது எதிரிகள் நிம்மதியடையவில்லை. அவரை அந்தப் பேரரசின் கடைகோடியிலிருந்த Pythiusக்கு மீண்டும் நாடு கடத்தினர். அவ்விடத்துக்கு இரண்டு படைவீரர்களால் நடக்க வைத்தே கொடுமையாக அழைத்துச் செல்லப்பட்டார். இரவில் குளிரிலும், பகலில் வெயிலிலும் மழையிலும் நீண்டதூரம் நடக்க வைக்கப்பட்டார். ஏற்கனவே நலிந்திருந்த இவரது உடம்பு தாங்கவில்லை. கி.பி.407ம் ஆண்டு செப்டம்பர் 14ம்தேதி இவரால் நடக்கவே முடியவில்லை. இனிமேல் நடக்க முடியாது என அந்தப் படைவீரர்களிடம் கூறினார். ஆனால் அவர்கள் அதற்கு இணங்காமல் மீண்டும் ஆயரைக் கட்டாயப்படுத்தி நடக்க வைத்தனர். அவரது உடல்நிலை மோசமாகவே புனித ஆயர் மீண்டும் Comanaவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அதே நாளில் தனது 52வது வயதில் இறந்தார். எல்லாவற்றிலும் கடவுளுக்கு மகிமை உண்டாவதாக என்ற வார்த்தைகளைச் சொல்லி காலமானார் புனித ஜான் கிறிஸ்சோஸ்தம்.

இந்தப் புனிதர் இறந்து 31 ஆண்டுகள் கழித்து, பேரரசி Eudoxiaவின் பிள்ளைகளான அரசி புனித புல்கேரியாவும், அரசர் 2வது தியேடோசியசும் தம் பெற்றோரின் அட்டூழியங்களுக்கு மனம் வருந்தி தவம் செய்தனர். புனிதரின் உடலை கி.பி.438ம் ஆண்டு சனவரி 27ம் நாளன்று மிக ஆடம்பரமாக Constantinople திருத்தூதர் ஆலயத்துக்கு எடுத்துச் சென்று அங்கே அடக்கம் செய்தனர். ஊர்வலத்தில் சவப்பெட்டியை இவர்கள் தாங்கிச் சென்றனர். புனித ஜான் கிறிஸ்சோஸ்தம் Constantinople ஆயர் மட்டுமல்ல, திருஅவையின் மறைவல்லுனருமாவார். பெரிய எழுத்தாளர், மறையுரையாளர், விவிலிய விரிவுரையாளர். இறையியலாளர். இவரால் திருஅவையில் சீர்திருத்தங்கள் ஏற்பட்டன. கத்தோலிக்கம், ஆர்த்தடாக்ஸ், ஆங்லிக்கன், லூத்தரன் எனக் கிறிஸ்தவ சபைகள் இப்புனிதரைப் பொற்றுகின்றன. இவரது திருவிழா கத்தோலிக்கத் திருஅவையில் செப்டம்பர் 13ம் தேதியன்று சிறப்பிக்கப்படுகிறது.

அலைகளோ மிகுதி, ஆபத்தான கடற்கொந்தளிப்பு. நாம் அதில் மூழ்கி விடுவோம் எனக் கவலைப்படுவது கிடையாது. ஏனெனில் நாம்தான் கிறிஸ்துவாகிய பாறையின்மீது நிற்கிறோமே!. அந்தக் கடல் முழங்கினாலும் அது பாறையைப் பிளக்க முடியாது. மக்களே நன்மனத்தோராய் வாழ முயற்சி செய்யுங்கள் என்று சொன்னவர் புனித ஜான் கிறிஸ்சோஸ்தம்.







All the contents on this site are copyrighted ©.