2012-09-12 16:41:39

அழிவின் விளிம்பில் மேலும் நூறு விலங்கினங்கள்


செப்.12,2012. தென் அமெரிக்கக் காடுகளில் வாழும் ஸ்லாத் எனப்படும் மந்தத்தி பாலூட்டிகள் உட்பட உலகளவில் அழியும் ஆபத்தை எதிர்கொள்ளும் நூறு உயிரனங்களின் பட்டியலை, பன்னாட்டு உயிரியல் பாதுகாப்பு நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.
அரசுகளின் மனநிலையில் மாறுதல் ஏற்பட்டால் மட்டுமே இந்த உயிரினங்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும் எனவும் அந்த வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இலண்டன் உயிரியல் பூங்கா, பன்னாட்டு உயிரினங்கள் பாதுகாப்புக்கான அமைப்பு ஆகிய இரண்டும் இணந்தே இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளன.
தென் கொரியாவின் ஜேஜூ தீவில் நடைபெற்ற உலக உயிரினங்கள் பாதுகாப்பு மாநாட்டிலேயே இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மடகாஸ்கர் நாட்டிலுள்ள டார்சான் பச்சோந்தி, பனாமா நாடு உட்பட தென் அமெரிக்க்க் நாடுகளில் மரக்கிளைகளில் வாழ்ந்து கொண்டு தரையில் மிகவும் மெதுவாகச் செல்லக் கூடிய, காலில் மூன்று விரல்களை மட்டுமே கொண்ட ஸ்லாத் எனப்படும் மந்தத்தி பாலூட்டி விலங்கினம் ஆகியவை அழிவின் விளிம்பில் உள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இம்மாதிரியான விலங்குகள் மனிதனுக்கு எந்தப் பலனையும் அளிப்பதில்லை என்பதால் அவற்றின் மீது கவனம் செலுத்தப்படாமல் அவை அழிந்து போவதற்கு விடப்படுகின்றன என்றும் அந்த அமைப்புகள் கூறுகின்றன.
அந்த உயிரனங்களால் மனிதர்களுக்கு ஆதாயம் இருக்கிறதா இல்லையா என்பதற்கு அப்பாற்பட்டு, அவற்றை அழிவின் விளிம்புக்குத் தள்ள மனிதர்களுக்கு உரிமை உள்ளதா என்பதே கேள்வி எனவும் அந்த வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.