2012-09-11 16:28:29

இலங்கையில் இயேசு சபை மாநிலத்தின் 50ம் ஆண்டு விழா


செப்.11,2012. இலங்கையில் இயேசு சபை மாநிலம் உருவாக்கப்பட்டதன் 50ம் ஆண்டு, இஞ்ஞாயிறன்று கர்தினால் மால்கம் இரஞ்சித் தலைமையில் திருப்பலியுடன் சிறப்பிக்கப்பட்டது.
இலங்கையின் Dalugama புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் ஆலயத்தில் இடம்பெற்ற இக்கொண்டாட்டத்தில் இயேசு சபை மாநில அதிபர் குரு ஜெயராஜ் ராசயாவுடன் இயேசு சபை குருக்கள், பிற சபையினர் மற்றும் பெருமளவில் விசுவாசிகளும் கலந்து கொண்டனர்.
புனித பிரான்சிஸ் சேவியரின் காலத்திலேயே இலங்கைக்கு இயேசு சபையினர் வந்துள்ள போதிலும் 1962ம் ஆண்டுதான் இலங்கையில் இயேசு சபை மாநிலம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் இந்திய இயேசு சபை மாநிலத்தின் கீழும், பின்னர் ஃபிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் இயேசு சபை மாநிலங்களின் கீழும், இறுதியாக அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் இத்தாலி இயேசு சபை மாநிலங்களின் கீழும் இலங்கை இயேசு சபையினர் செயலாற்றியுள்ளனர்.
இலங்கையில் இயேசு சபை மாநிலம் துவக்கப்பட்டதன் 50ம் ஆண்டு கொண்டாட்ட்டங்களையொட்டி அச்சபை அதிபர் குரு அடோல்ஃபோ நிக்கோலஸ் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், இலங்கையில் இயேசுசபையினர் ஆற்றி வரும் சிறப்புப் பணிகளைப் பாராட்டியுள்ளார். இலங்கை இனமோதல்களின்போது இயேசு சபையினரின் வாழ்வும் பணிகளும் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், அச்சவால்களை இலங்கை இயேசு சபையினர் ஏற்று நடத்திய விதத்தைப் பாராட்டியுள்ள அச்சபை அதிபர், அச்சபையின் துவக்க கால அங்கத்தினர்களின் அயரா உழைப்போடு அவைகளைத் தன் செய்தியில் ஒப்புமைப்படுத்தியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.